Published:Updated:

`ஆவணங்களோடு ஆஜராகுங்கள்!' - பஞ்சமி நில விவகாரத்தில் உதயநிதிக்கு உத்தரவிட்ட ஆணையம்

பா.ஜ.க-வின் மாநிலப் பொதுச் செயலாளரான ஶ்ரீனிவாசன், 'முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம்தானா என்பதைப் பரிசோதனையிட வேண்டும்?' எனப் பட்டியலின மக்களுக்கான தேசிய ஆணையத்தில், மனு அளித்தார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

முரசொலி அலுவலக இடம் தொடர்பான சான்றிதழ்களுடன், வரும் 19 -ம் தேதி மாலை 3.30 மணிக்கு நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு முரசொலி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய பட்டியலின ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மனு
மனு

நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, தூத்துக்குடியில் இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தைப் பார்த்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அதற்கு அடுத்தநாள் திரைப்படத்தில் நடித்த நடிகர் தனுஷையும் பஞ்சமி நிலத்தை மையப்படுத்தி திரைப்படம் எடுத்ததற்காக இயக்குநர் வெற்றிமாறனையும் பாராட்டி ட்வீட் செய்தார்.

`முரசொலி நிலத்துக்கான மூலப் பத்திரம் எங்கே?'- ஸ்டாலினை தொடர்ந்து சீண்டும் பா.ம.க

ஸ்டாலினின் இந்த ட்வீட்டுக்கு, ''முரசொலி அலுவலகக் கட்டடமே பஞ்சமி நிலத்தில்தான் இருக்கிறது. முதலில் அதை ஒப்படையுங்கள்'' எனப் பதில் ட்வீட் செய்தார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். அப்போது தொடங்கிய சர்ச்சை ஸ்டாலினுக்கும் ராமதாஸுக்கும் இடையே கருத்துப் போராக வெடித்தது.

ஶ்ரீனிவாசன்
ஶ்ரீனிவாசன்

இது ஒருபுறமிருக்க, பா.ஜ.க-வின் மாநிலப் பொதுச் செயலாளரான ஶ்ரீனிவாசன், 'முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம்தானா என்பதைப் பரிசோதனையிட வேண்டும்' எனப் பட்டியலின மக்களுக்கான தேசிய ஆணையத்தில், மனு அளித்தார். மனுவை ஏற்றுக்கொண்ட ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு ஒரு வாரத்தில் இதுகுறித்து விசாரித்து பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது.

``முரசொலி அலுவலகம் மட்டுமல்ல; எல்.ஐ.சி பில்டிங்கூட பஞ்சமி நிலம்தான்.. நிரூபிக்கவா?”-'தடா' பெரியசாமி

இந்தநிலையில், தேசிய பட்டியலின ஆணையத்திலிருந்து, முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநருக்கு இன்று ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வரும் 19-ம் தேதி மாலை 3.30 மணிக்கு நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்தில், முரசொலி அலுவலக இடம் தொடர்பான சான்றிதழ்களுடன், நேரில் வந்து ஆஜராகுமாறு உத்தவிடப்பட்டுள்ளது. ஆணையத்தின் இணை இயக்குநர் முருகன் விசாரணை செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

`ஆவணங்களோடு ஆஜராகுங்கள்!' - பஞ்சமி நில விவகாரத்தில் உதயநிதிக்கு உத்தரவிட்ட ஆணையம்

``முரசொலி நிலம் பஞ்சமி நிலத்தில் இல்லை என்பதை நிரூபிக்க தி.மு.க-வுக்கு இது நல்ல வாய்ப்பு. இதை அவர்கள் நெருக்கடியாக எடுத்துக்கொள்ள கூடாது. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இல்லை என நிரூபித்துவிட்டால், அரசியல்ரீதியாகவும் ஸ்டாலினுக்கு நன்மைதான்'' என்கிறார் ஆணையத்தில் மனு கொடுத்த சீனிவாசன்.