Published:Updated:

`பொதுமக்களை நம்மிடமிருந்து விலக வைத்துவிடும்!' - உதயநிதிக்குச் சுட்டிக்காட்டிய முரசொலி செல்வம்

உதயநிதி, மு.க.ஸ்டாலின்
உதயநிதி, மு.க.ஸ்டாலின்

`இவரைப் பிடித்தால் பதவிகளைப் பெறலாம் எனும் போக்கில் ஒரு சிறு கூட்டம் இருக்கும். இந்திரன், சந்திரன் எனப் பாராட்டிக் கொண்டிருப்பார்கள். போஸ்டர் அடித்து விளம்பரம் கொடுத்து அதன் மூலம் குளிர வைத்துப் பயனடையலாம் என நினைப்பார்கள்.

தி.மு.க இளைஞர் அணி அலுவலகமான அன்பகத்தில் இருந்து கட்சிப் பணிகளைத் தொடங்கிவிட்டார் புதிய செயலாளர் உதயநிதி ஸ்டாலின். `என்னை அமைதியானவன் என்று சொல்கிறார்கள். ஆனால், தேவைப்படும் நேரத்தில் கோபத்தை வெளிப்படுத்துவேன்' என நிர்வாகிகளுக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறார் உதயநிதி.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, `தி.மு.க இளைஞரணிச் செயலாளராக உதயநிதியை முன்னிறுத்த வேண்டும்' என்ற குரல்கள் எழுந்தன. இதன் அடுத்தகட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்தனர் மாவட்ட நிர்வாகிகள். ஆனால், உதயநிதி பதவியேற்புக்கான தேதிகள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தன. இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி மாலை தி.மு.க இளைஞரணிச் செயலாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார் உதயநிதி. இதற்கான அறிவிப்பை பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டிருந்தார். தி.மு.க தலைமையின் இந்த அறிவிப்பை, கூட்டணியில் உள்ள கட்சியின் தலைவர்கள் வரவேற்றனர். `உதயநிதி வருகையால் இளைஞரணி மேலும் வலுப்பெறும்' என்ற உற்சாகக் குரல்களும் அறிவாலயத்திலிருந்து வெளிப்பட்டன.

தி.மு.க இளைஞரணிச் செயலாளராக 33 ஆண்டுக்காலம் பதவி வகித்த ஸ்டாலின், அன்பகத்தில் இருந்தே பல நேரங்களில் கட்சிப் பணிகளைக் கவனித்து வந்தார். அதே பாணியில் முதல் கூட்டத்தை அன்பகத்தில் நடத்தி அரசியல் என்ட்ரியைத் தொடங்கியிருக்கிறார் உதயநிதி. கடந்த சனிக்கிழமை நடந்த இளைஞரணியின் முதல் கூட்டத்தில் பேசிய உதயநிதி, ` நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன். இளைஞரணியின் வளர்ச்சிக்காக, நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம். இங்கே பேசியவர்கள், என்னைச் சின்னவர் என்று அழைத்தார்கள். உங்களை எல்லாம் பெரியவர்கள் ஆக்கிப் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். என்னை அமைதியானவன் என்று சொல்கிறார்கள். தேவைப்பட்டால் கோபப்படவும் நான் தயங்க மாட்டேன். அன்பகத்தில் இருந்தபடியே பணிகளைப் பார்க்குமாறு தலைவர் உத்தரவிட்டிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

ஆனால், அன்பகத்துக்கு வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால் இனி வாகனங்களை அறிவாலயத்திலேயே நிறுத்திக்கொள்ளுங்கள். மக்களுக்கு நம்மால் எந்தவிதச் சிரமமும் வந்துவிடக் கூடாது. கட்சியில் இளைஞரணியைச் சேர்ந்தவர்களுக்குக் குறைவான பிரதிநிதித்துவத்தைக் கொடுத்திருக்கிறார்கள். தகுதியுள்ளவர்களுக்கும் உழைப்பவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். வரும் நாள்களில் ஒவ்வொரு ஊராக சுற்றுப்பயணம் வரவிருக்கிறேன்' என மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இனி வாகனங்களை அறிவாலயத்திலேயே நிறுத்திக் கொள்ளுங்கள். மக்களுக்கு நம்மால் எந்தவிதச் சிரமமும் வந்துவிடக் கூடாது
உதயநிதி

கூட்டத்தில் பங்கேற்ற 53 பேரில் 40 நிர்வாகிகள் வரையில் மேடையில் பேசியுள்ளனர். பலரும், `2 ஆண்டுகளாக இளைஞரணி சார்பாக எந்தவிதப் பணியும் நடைபெறவில்லை' என்பதையே குற்றச்சாட்டாகத் தெரிவித்துள்ளனர். `இதற்கெல்லாம் பதில் சொல்லும்விதமாக உதயநிதியின் பேச்சு அமைந்தது' என்கின்றனர் இளைஞரணி நிர்வாகிகள்.

முரசொலி செல்வத்தின் கட்டுரை
முரசொலி செல்வத்தின் கட்டுரை

உதயநிதி பதவியேற்பு தொடர்பாக, ஆதரவு - எதிர்ப்பு என்றரீதியில் சமூக வலைதளங்களில் விமர்சனம் கிளம்பியது. இதற்கெல்லாம் பதில் சொல்லும்விதமாக தி.மு.க ஐ.டி விங்க் நிர்வாகிகள் செயல்பட்டனர். இந்நிலையில், உதயநிதிக்கு அறிவுறுத்தும்விதமாக நேற்றைய முரசொலியில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார் கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம். `வாழ்த்தி வரவேற்போம்' என்ற தலைப்பில் வெளியான அந்தக் கட்டுரையில், `மாவட்டம் மாவட்டமாகச் சென்று அந்தந்த மாவட்ட இளைஞர் அணியினருடன் ஸ்டாலின் நடத்திய ஆலோசனைகள், கலந்துரையாடல்களின் விளைவாகவே இளைஞர் அணியின் அணிவகுப்புகள் அனைத்தும் பிரமிக்கும் வகையில் ராணுவக் கட்டுப்பாட்டுடன் நடைபெற்றன. இந்த அணிவகுப்புகள் சிறப்பாக அமைய ஸ்டாலின் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எத்தகையது என்பதையும் ஒவ்வொரு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்களையும் நிர்வாகிகளையும் எத்தனை முறை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆர்வமும் கொள்கைப் பிடிப்பும் உள்ள இளைஞர்களுக்கும் தலைமைக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட்டதால்தான், கழகம் மூன்றாவது தலைமுறையோடும் உயர்ந்து நிற்கிறது. இது பழைய வரலாறுதான். புதிய இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதிக்குத் தெரிந்த வரலாறுதான். அவரின் தந்தையின் உழைப்பை பல நேரங்களில் அருகிலிருந்து பார்த்தவர்தான் அவர். அதனால்தான், ஏற்றுள்ள புதிய பொறுப்பை நேர்த்தியுடன் எடுத்துச் சென்று கழகத்துக்கு வலுவூட்டுவார் என்பதில் ஐயமில்லை' என விவரித்தவர், தொடர்ந்து, `இவரைப் பிடித்தால் பதவிகளைப் பெறலாம் எனும் போக்கில் ஒரு சிறு கூட்டம் இருக்கும். இந்திரன், சந்திரன் எனப் பாராட்டிக் கொண்டிருப்பார்கள்.

ஸ்டாலின், உதயநிதி
ஸ்டாலின், உதயநிதி

போஸ்டர் அடித்து விளம்பரம் கொடுத்து அதன் மூலம் குளிர வைத்துப் பயனடையலாம் என நினைப்பார்கள். இவர்கள் தேடிப்பிடித்து வாழ்த்தும் வாசகங்களைப் படித்து பொதுமக்கள் பலர் முகம் சுளிப்பார்கள். நம்மைக் குளிர வைப்பதற்கு அவர்கள் நடத்தும் இத்தகைய செயல்கள், கட்சி சார்பற்ற பொதுமக்களை நம்மிடமிருந்து விலக வைத்துவிடும். இத்தகைய போலி விசுவாசிகளைக் கொஞ்சம் தூரத்தில் வைத்து இயக்கத்துக்கான உண்மை விசுவாசிகளை அரவணைத்து நெடிய பயணத்துக்கு வலுசேர்க்க வேண்டும். தலைமைக்கும் இளைஞர்களுக்கும் இடையில் பாலமாக இருந்து பணியாற்றிடுவார் என்றளவில் வாழ்த்தி வரவேற்போம்' எனச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

`யாரை குறிவைத்து இப்படிப்பட்ட வார்த்தைகளை வெளியிட்டார் முரசொலி செல்வம்?' என்ற விவாதங்களும் அறிவாலயத்தில் கிளம்பியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு