Published:Updated:

தி.மு.க எம்.பி மீது கொலை மிரட்டல் வழக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன்
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன்

முதல்வரை எதிர்த்துக் கேள்வி கேட்டதால் பழிவாங்கலா?

பிரீமியம் ஸ்டோரி

சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் மீது கொலை மிரட்டல் வழக்கைப் பதிவு செய்திருக்கிறது போலீஸ். மேச்சேரி காவல் நிலையத்தில் மேச்சேரி வனச்சரக அலுவலர் திருமுருகன், ஜூன் 18-ம் தேதி கொடுத்த புகாரைத் தொடர்ந்து, பார்த்திபன்மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வரை எதிர்த்துக் கேள்வி கேட்டதால் கொலை மிரட்டல் வழக்குப் பதிந்திருப்பதாகப் பதில் அளித்திருக்கிறார் சேலம் எம்.பி பார்த்திபன். என்னதான் நடந்தது என்று விசாரித்தோம்.

மேச்சேரி வனச்சரக அலுவலர் திருமுருகன் கொடுத்த புகார் மனுவில், ‘‘சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, மேச்சேரி பெரிய சாத்தப்பாடி கிராமத்தில் வேடன் கரடு உள்ளது. இது வருவாய்த் துறைக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம். இந்த நிலத்தில் மரம் நடுவதற்காக 1961-ல் வனத்துறைக்கு வழங்கப்பட்டது. கரட்டில் குடியிருப்புப் பகுதிகளோ, விளைநிலங்களோ இருந்ததில்லை. அங்கு வனவர் வடிவேலுவுடன் களத்தணிக்கை மேற்கொண்டபோது, அங்கு செக்போஸ்ட் அமைக்கப்பட்டு, அதில் மொபைல் எண் ஒன்றும் எழுதியிருந்தது. அந்த மொபைல் எண்ணுக்கு நான் ஜூன் 18-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடர்புகொண்டு, ‘அரசு நிலத்தில் செக்போஸ்ட் ஏன் அமைத்திருக்கிறீர்கள். நீங்கள் யார்?’ என்று கேட்டதற்கு, ‘என் பெயர் பழனிசாமி, நான் சேலம் தி.மு.க எம்.பி-யான பார்த்திபனிடம் வேலை செய்கிறேன். அந்த இடம் எம்.பி-க்குச் சொந்தமானது. யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது. அனுமதியின்றி உள்ளே நுழைந்தால் கை, கால்களை வெட்டிவிடுவோம். எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று பார்த்திபன் கூறியுள்ளார்’ என்றார்.

அதன் பிறகு மாற்றுப்பாதையில் உள்ளே சென்று பார்த்ததில், அங்கு மலையை வெட்டி, கல், மண் கடத்தி இருப்பது தெரியவந்தது. மேலும், வனத்துறைக்குச் சொந்தமான பல லட்சம் மதிப்பிலான 200-க்கும் மேற்பட்ட வேம்பு, புளியன், கருங்காலி, வாகை, புங்கன், சீமை அகத்தி எனப் பல வகையான மரங்களை வெட்டிக் கடத்தியுள்ளார். அரசு நிலத்தை ஆக்கிரமித்து தார் சாலைப் போட்டு அங்கு அலுவலகம் அமைத்துள்ளார்கள்.

அந்த தார் சாலை
அந்த தார் சாலை

மேட்டூர் எம்.எல்.ஏ-வாக பார்த்திபன் இருந்தபோது, தன் சகோதரர் அசோக்குமார் மற்றும் ஆனந்தபத்மநாபன் என்பவர் நிலத்துக்காக தார் சாலை அமைத்து சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தியுள்ளார். இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட பார்த்திபன், அவரின் சகோதரர் அசோக்குமார், ஆனந்தபத்மநாபன், காவலாளி பழனிசாமி, உடந்தையாக இருந்தவர்கள்மீது விசாரணை செய்து சட்டப்படி வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மேச்சேரி காவல்துறை, சேலம் எம்.பி பார்த்திபன் உட்பட நான்கு பேர்மீது கொலை மிரட்டல், அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு சொத்துகள் அபகரித்தல், அத்துமீறி நுழைதல், அரசு சொத்தைச் சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.

சேலம் சமூகக் காடுகள் கோட்ட வன அலுவலர் மகேந்திரனிடம் பேசியபோது, ‘‘வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இதுபற்றி எதுவும் பேச முடியாது’’ என்றார்.

ஆக்கிரமிப்பு புகாருக்குள்ளான வனப்பகுதி
ஆக்கிரமிப்பு புகாருக்குள்ளான வனப்பகுதி

சேலம் எம்.பி-யான பார்த்திபனிடம் கேட்டோம். ‘‘இது முழுக்க முழுக்கப் பொய்யான வழக்கு. காவலர் பழனிசாமி என்பவர் யார் என்றே தெரியாது. அந்தப் பகுதியில் என் அண்ணன் அசோக்குமார், ஆடிட்டர் ஒருவர், சுரேஷ் ஆகியோர் சேர்ந்து ஆறே முக்கால் ஏக்கர் நிலம் வாங்கினார்கள். அது பட்டா நிலம். வனத்துறை யினர் சொல்வது போல அங்குக் கடத்தி விற்கும் அளவுக்கு மண்ணோ, விலை உயர்ந்த மரங்களோ கிடையாது. கூழாங்கற்களும் முற்புதர்களும்தான் இருந்தன. அதை என் அண்ணன் சுத்தப்படுத்தி 2,000 தேக்கு மரங்களும் 400 நாவல் மரங்களும் நட்டு வளர்த்தார். அந்த நிலத்தையும் இரண்டு மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க பிரமுகருக்கு விற்றுவிட்டார்.

கடந்த மாதம் சேலம் ஐந்து ரோட்டில், ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு விழா நடைபெற்றது. அதில் முதல்வர் கலந்துகொண்டார். தி.மு.க-வினரும் கலந்துகொண்டோம். அப்போது நான் முதல்வரிடம் சில கேள்விகளை எழுப்பினேன். அதனால், என்னைப் பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்திருக்கிறார்கள். நானும் இதுசம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறேன்’’’ என்றார்.

மேச்சேரி இன்ஸ்பெக்டர் பாலமுருகனிடம் பேசியபோது, ‘‘வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருவதாலும், இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதாலும் மேற்கொண்டு எதுவும் பேச முடியாது. நாங்கள் ஒரு மாதமாக வெளியில் தெரியாமல் பாதுகாத்து வைத்திருந்தோம். எப்படி வெளியில் தெரிந்தது என்று தெரியவில்லை’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு