Published:Updated:

இந்திய வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமிய எம்.பி இல்லாத ஆளுங்கட்சி!

வெங்கையா நாயுடு, மோடி, அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
வெங்கையா நாயுடு, மோடி, அமித் ஷா

இந்தியாவிலுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என எங்குமே பா.ஜ.க-வுக்கு, ஓர் இஸ்லாமிய எம்.எல்.ஏகூட இல்லை.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமிய எம்.பி இல்லாத ஆளுங்கட்சி!

இந்தியாவிலுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என எங்குமே பா.ஜ.க-வுக்கு, ஓர் இஸ்லாமிய எம்.எல்.ஏகூட இல்லை.

Published:Updated:
வெங்கையா நாயுடு, மோடி, அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
வெங்கையா நாயுடு, மோடி, அமித் ஷா

கடந்த ஜூலை 6-ம் தேதி மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த முக்தர் அப்பாஸ் நக்விதான் பா.ஜ.க-வின் கடைசி இஸ்லாமிய எம்.பி. அவரது மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம் ஜூலை 7-ம் தேதியோடு நிறைவடைந்ததால், மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் உள்ள 395 பா.ஜ.க எம்.பி-க்களில், ஒருவர்கூட இஸ்லாமியர் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது!

இந்திய அரசியல் வரலாற்றில், ஆளுங்கட்சிக்கு ஓர் இஸ்லாமிய எம்.பி-கூட இல்லாதது இதுவே முதன்முறை. அதுமட்டுமல்லாமல், இந்தியாவிலுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என எங்குமே பா.ஜ.க-வுக்கு, ஓர் இஸ்லாமிய எம்.எல்.ஏகூட இல்லை. இது, `இஸ்லாமியர்கள் அதிகாரத்தில் இருக்கக் கூடாது என பா.ஜ.க நினைக்கிறது’ என்ற குற்றச்சாட்டுக்கு வழிவகுத்திருக்கிறது.

பா.ஜ.க-வுக்கு மூன்று இஸ்லாமிய மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்தார்கள். கடந்த ஜூன் 29-ம் தேதி எம்.ஜே.அக்பரின் பதவிக்காலம் முடிவடைந்தது. ஜூலை 4-ம் தேதி சையத் ஜாஃபர் அலாமின் பதவிக்காலமும், ஜூலை 7-ம் தேதி முக்தர் அப்பாஸ் நக்வியின் பதவிக்காலமும் முடிவடைந்தன. இதன் மூலம், பா.ஜ.க-வில் இஸ்லாமிய எம்.பி-க்களே இல்லாத நிலை உருவானது. கடந்த மாதம் நடந்த 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலிலும் ஓர் இஸ்லாமியரைக்கூட பா.ஜ.க முன்னிறுத்தவில்லை. ``பா.ஜ.க தலைவர்கள் சிலர், நாங்கள் வெற்றிபெறுவதற்கு இஸ்லாமியர்களின் ஆதரவு தேவையில்லை என வெளிப்படையாகவே பேசிவருகின்றனர். எப்போதும் பெயருக்காவது ஓர் இஸ்லாமியருக்கு பா.ஜ.க வாய்ப்பளிக்கும். ஆனால், இந்த முறை பதவிக்காலம் முடிந்தவர்களுக்கு மாற்றாகக்கூட எந்த இஸ்லாமியரையும் அவர்கள் முன்னிறுத்தவில்லை என்பது ஆச்சர்யமே’’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

2019-ல் பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ``பா.ஜ.க-வில் மொத்தம் 18 கோடி உறுப்பினர்கள் சேர்ந்துவிட்டனர். உலகிலுள்ள எட்டு நாடுகளில் மட்டுமே பா.ஜ.க உறுப்பினர்களை விட, அதிக மக்கள் வாழ்கின்றனர்’’ என்று மார்தட்டிக்கொண்டார். ஆனால், உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மூன்றாவது நாடான (இந்தோனேசியா, பாகிஸ்தானுக்குப் பிறகு) இந்தியாவில், ஆளுங்கட்சி சார்பில் சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய இரண்டிலும் இஸ்லாமியப் பிரதிநிதிகள் இல்லாதது அதிர்ச்சியை உண்டாக்குகிறது.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமிய எம்.பி இல்லாத ஆளுங்கட்சி!

இது குறித்து மூத்த பத்திரிகையாளர்கள் சிலர், ``2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது `மோடி அலை’ உச்சத்திலிருந்தது. அப்போதே, பா.ஜ.க சார்பாகப் போட்டி யிட்ட ஏழு இஸ்லாமிய எம்.பி வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். 2019-ல் தனிப்பெரும்பான்மையோடு பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைத்தபோதுகூட, பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட ஆறு இஸ்லாமிய வேட்பாளர்களும் தோல்வியுற்றனர். இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில்தான் பா.ஜ.க., இஸ்லாமிய வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால், சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என பா.ஜ.க மீதிருக்கும் பிம்பத்தால், அந்தக் கட்சியின் இஸ்லாமிய வேட்பாளர்கள் தோல்வியைச் சந்தித்தனர். சட்டமன்றத் தேர்தல்களிலும் பா.ஜ.க-வின் இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு இதே நிலைதான். அமித் ஷா ஒரு முறை, `வெற்றி விகித அடிப்படையில்தான் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்’ என்று கூறியிருந்தார். அதனால்தான், 19 சதவிகித (உ.பி மக்கள்தொகையில்) இஸ்லாமியர்கள் வாழும் உத்தரப்பிரதேசத்தில்கூட, இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இஸ்லாமியர் வேட்பாளர்கள் யாரையும் பா.ஜ.க நிறுத்தவில்லை. உத்தரகாண்ட், மணிப்பூரிலும் எந்த இஸ்லாமியருக்கும் சீட் ஒதுக்கப்படவில்லை.

சமீபகாலமாக, ‘ஹிஜாப், ஹலால், சி.ஏ.ஏ., மசூதிகளுக்கு அடியில் இந்துக் கோயில்கள்’ என இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல்கள் கிளம்பியிருப்பதால், பா.ஜ.க வசமிருந்த கொஞ்ச நஞ்ச இஸ்லாமிய வாக்குவங்கியும் பறிபோயிருக்கும். நபிகள் நாயகம் குறித்த நுபுர் ஷர்மாவின் கருத்தும் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்களிடையே கோபத்தை உண்டாக்கியது. எனவே, சட்டமன்ற, மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் இஸ்லாமியர்கள் நிறுத்தப்பட்டால், வெற்றி வாய்ப்பு மிக மிகக் குறைவு என்பது உண்மைதான். அதேநேரத்தில், மாநிலங்களவையில் நிச்சயம் இஸ்லாமியர்களுக்கு பா.ஜ.க வாய்ப்பளித்திருக்க வேண்டும். ஆனால், சமீபத்திய மாநிலங்களவைத் தேர்தலிலும் ஓர் இஸ்லாமியரைக்கூட பா.ஜ.க நிறுத்தவில்லை. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவில், ஆளுங்கட்சியில் அதிகாரத்திலிருந்து இஸ்லாமியர்கள் முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டிருப்பது சிறந்த ஜனநாயகத்துக்கு அழகல்ல. 76 பேர் இருக்கும் பா.ஜ.க அமைச்சரவையில், ஒரு இஸ்லாமியர் கூட இல்லாதது வேதனைக்குரியது. பா.ஜ.க எம்.பி.க்களில் 99 சதவிகிதம் பேர் இந்துக்கள்! `அனைவருக்குமான வளர்ச்சி; அனைவருக்குமான ஆதரவு’ என்ற பா.ஜ.க-வின் தாரக மந்திரத்தை, உறுதிப்படுத்தும் வகையில், அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் இஸ்லாமியருக்கான பிரநிதித்துவத்தைப் பா.ஜ.க வழங்க வேண்டும்’’ என்கிறார்கள்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இதுபற்றி தமிழ்நாடு பா.ஜ.க-வின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``மத அடிப்படையிலோ, சாதி அடிப்படையிலோ வேட்பாளர்களை பா.ஜ.க தேர்ந்தெடுப்பதில்லை. ஒருவரது தகுதியின் அடிப்படையில்தான் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. மத அடிப்படையில் சீட் ஒதுக்குவதைத்தான் நாங்கள் மதவாதம் என்கிறோம். எதிர்க்கட்சிகள்தான் அதைச் செய்கின்றன. மத அடிப்படையில்தான் ஒருவரைத் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. இந்துவாக இருப்பவர்கள் இஸ்லாமியர்களுக்கு நல்லது செய்ய முடியாதா... அப்படியென்றால், இந்தியாவிலுள்ள இந்துக்கள் எல்லாம் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்று அர்த்தமா... இஸ்லாமியர்கள் பா.ஜ.க-வில் சேரக் கூடாது என்று கட்சியிலிருக்கும் யாருமே சொன்னதில்லை. இஸ்லாமியர்களை பா.ஜ.க எப்போதும் வரவேற்கும். பீகாரில், எம்.எல்.சி (சட்டமன்ற மேலவை) முறையில் இஸ்லாமியரான ஷாநவாஸ் ஹுசைனைத் தேர்ந்தெடுத்து மாநில அமைச்சராக்கியிருக்கிறோம். பா.ஜ.க இஸ்லாமியர் களுக்கு எதிரான கட்சி என்ற தவறான பிம்பத்தை மக்களிடம் எதிர்க்கட்சிகள் கட்டமைக்கப் பார்க்கின்றன. ஆனால், பா.ஜ.க ஒருபோதும் அப்படியிருந்ததில்லை’’ என்றார் காட்டமாக.

சுமார் 20 கோடி இஸ்லாமியர்கள் வாழும் நாட்டில், அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்குவதே ஆளுங்கட்சிக்கு அழகு!