டெல்லி ஜஹாங்கிர்புரியில் அனுமன் ஜயந்தியன்று இந்து அமைப்பினர் நடத்திய பேரணியின்போது, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே உண்டான மோதல் பெரும் கலவரத்தையே ஏற்படுத்தியிருந்தது. இந்க்த கலவரத்தில் போலீஸ்காரர்களும் தாக்குதலுக்கு ஆளாகினர். இதன் எதிரொலியாக ஜஹாங்கிர்புரி பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.க-வை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துவந்தன.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜஹாங்கிர்புரி பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் உத்தரவுக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை இரண்டு வாரங்களுக்குத் தொடரும் என நேற்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், சன்னி முஸ்லிம்களின் பரேல்வி பிரிவின் மதத் தலைவரான தௌகீர் ராசா கான், பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய தௌகீர் ராசா கான், ``முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளை மோடி, திருதராஷ்டிரனைப்போல காது கேளாதவராகவும், பார்வையற்றவராகவும் கண்டுகொள்ளாமல் இருந்தால், இந்தியாவில் இன்னொரு மகாபாரதம் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது. முஸ்லிம்கள் தெருக்களில் இறங்கினால், அவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது" எனக் கூறினார்.
முஸ்லிம் மதத் தலைவரான தௌகீர் ராசா கான், குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டங்களின்போது, மோடி, அமித் ஷாவை பயங்கரவாதிகள் என விமர்சித்து சர்ச்சைகளுக்குள்ளானவர். மேலும் இவர், கடந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
