Published:Updated:

`கடவுளால் வாழ்கிறோம், காங்கிரஸால் அல்ல..!' - தேர்தல் பிரசாரத்தில் கொதித்த ஓவைசி

ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி என்ற மூழ்கிய கப்பலை விட்டுவிட்டு ஓடிவிட்டார். கப்பல் கேப்டனின் கடமை, தன் உயிரைக் கொடுத்து மற்றவர்களைப் பாதுகாப்பது.

காங்கிரஸ் கட்சியை விளாசிய அசாதுதீன் ஒவைசி
காங்கிரஸ் கட்சியை விளாசிய அசாதுதீன் ஒவைசி

"அரசியலமைப்புச் சட்டம் தந்த பாதுகாப்பு மற்றும் உரிமையால் மட்டுமே முஸ்லிம் மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள், காங்கிரஸ் கட்சியால் அல்ல" என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

மகாராஷ்ட்ரா மாநிலம் பிவாண்டியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஓவைசி, "ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி என்ற மூழ்கிய கப்பலை விட்டுவிட்டு ஓடிவிட்டார். கப்பல் கேப்டனின் கடமை, தன் உயிரைக் கொடுத்து மற்றவர்களைப் பாதுகாப்பது" என்றார்.

காங்கரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி
காங்கரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி

மேலும், ஓவைசி தன் பரப்புரையில், "ராகுல் காந்தி இந்த விஷயத்தில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவில்லை" என்றும் குற்றம்சாட்டினார். "காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற நினைக்காமல் விலகிச் சென்றுவிட்டார். காங்கிரஸ் கட்சியின் தயவால் முஸ்லிம் மக்கள் இந்தியாவில் வாழவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எங்களுக்கு அளித்த உரிமை, பாதுகாப்பு, எல்லாவற்றுக்கும் மேலாகக் கடவுள் காட்டும் கருணையால் மட்டுமே வாழ்கிறோம்" எனவும் ஓவைசி தன் பேச்சில் குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியாவை இந்து தேசம் எனக் குறிப்பிட்டதற்கும் ஓவைசி கடும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்துப் பேசுகையில், "இந்தியாவை ஒருபோதும் இந்து நாடாக மாற்ற எங்கள் கட்சி அனுமதிக்காது.

முஸ்லிம் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பிரதமர் முன்வருவாரா?
அசாதுதீன் ஓவைசி

முத்தலாக் பற்றி பிரதமர் நிறைய பேசுகிறார். முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் நீதி அளிக்க விரும்பினால், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மராட்டியர்களுக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீடுபோல, முஸ்லிம் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பிரதமர் ஏற்பாடு செய்வாரா?" எனவும் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்ட்ராவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 44 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்டோபர் 21-ம் தேதி மகாராஷ்ட்ராவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. முடிவுகள் 24-ம் தேதி வெளியாக இருக்கிறது.