Published:Updated:

`இஸ்லாமியர்களுக்கு 150 நாடுகள்; இந்துக்களுக்கு ஒரு நாடு’- குஜராத் முதல்வர் ரூபானி சர்ச்சை பேச்சு!

குஜராத்தில் சுமார் 62 இடங்களில் பா.ஜ.க-வினர் நேற்று பேரணிகளை நடத்தியுள்ளனர். இதில், குஜராத்தின் முதலமைச்சர் விஜய் ரூபானி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ரூபானி
விஜய் ரூபானி

குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மற்றொரு பக்கம், மத்தியில் ஆளும் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாகப் பேரணிகளை நடத்தி வருகின்றனர். குஜராத்தில் சுமார் 62 இடங்களில் பா.ஜ.க-வினர் நேற்று பேரணிகளை நடத்தியுள்ளனர். இதில், குஜராத்தின் முதலமைச்சர் விஜய் ரூபானி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ரூபானி
விஜய் ரூபானி

பேரணியில் பேசிய விஜய் ரூபானி, ``இந்தியாவில் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இஸ்லாமியர்களின் மக்கள்தொகை 9 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவிலுள்ள மதச்சார்பற்ற அரசியலமைப்பின் காரணமாக அவர்கள் கண்ணியமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், பாகிஸ்தானிலுள்ள இந்துக்களின் மக்கள்தொகை 22 சதவிகிதத்திலிருந்து 3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதற்குக் காரணம் அவர்கள் அங்கு துன்புறுத்தப்படுவதுதான்” என்றார்.

மேலும், ``அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே இந்தியாவிற்குத் திரும்பினர். இந்தியக் குடியுரிமை இல்லாததால் அவர்களால் இங்கிருந்து எந்த உதவியையும் பெற முடியவில்லை. இஸ்லாமியர்கள் வாழ்வதற்கு 150 நாடுகள் உள்ளன. ஆனால், இந்துக்கள் வாழ்வதற்கு ஒரேயொரு நாடுதான் உள்ளது. அதுதான் இந்தியா. எனவே, அவர்கள் திரும்பிவர விரும்புவதில் என்ன பிரச்னை உள்ளது” என்று கூறினார்.

விஜய் ரூபானி
விஜய் ரூபானி

தொடர்ந்து பேசிய அவர், ``காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களைக் கொண்டிருப்பது இந்தியாவின் துரதிஷ்டம். தங்களது சொந்த அரசியல் தேவைகளுக்காக இஸ்லாமியர்களைத் தூண்டிவிடுகின்றனர்" என்றார். மேலும், ``நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆர்டிகிள் 370ஐ நீக்குவோம், குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருவோம், என்.ஆர்.சியைக் கொண்டு வருவோம், அயோத்தியில் கோயில் கட்டுவோம், தலாக் முறையை ஒழிப்போம் போன்றவற்றைத் தேர்தல் வாக்குறுதிகளில் கொடுத்திருந்தோம். ஜனநாயக முறையில் மக்களும் எங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்” என்று பேசினார்.

``குஜராத்தில் அகதிகளுக்குக் குடியுரிமையை வழங்க நாங்கள் ஆரம்பித்துவிட்டோம்” என்று பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.