ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தலைமையில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை தலைப்பிலான நிகழ்ச்சியில், மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்த கருத்துக்கு இந்தியத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
அதாவது பிலாவல் பூட்டோ, ``ஒசாமா பின் லேடன் இறந்துவிட்டார் என்பதை உங்களுக்கு (இந்தியா) ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஆனால் குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர் இன்னும் உயிரோடு இருக்கிறார். அதுவும் பிரதமராக இருக்கிறார். அமெரிக்காவில் நுழைய முன்பு அவருக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஹிட்லர் பாதையில் பயணிக்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள்தான் இந்தியாவின் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும்" எனக் கூறியிருந்தார்.

நேற்றுகூட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், ``உலகமே பாகிஸ்தானை தீவிரவாதத்தின் மையமாகப் பார்க்கிறது" எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் பிலாவல் பூட்டோவின் கருத்துக்கு இந்தியாவின் பல்வேறு தர்காக்களின் மதகுருக்கள் அமைப்பான அகில இந்திய சூஃபி சஜ்ஜதானாஷின் கவுன்சிலும் இன்று கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்துப் பேசிய அகில இந்திய சூஃபி சஜ்ஜதானாஷின் கவுன்சில் தலைவரும், அஜ்மீர் தர்கா மதகுருவுமான நசீருதீன் சிஸ்டி, ``நம் தாய்நாட்டுக்கும் பிரதமருக்கும் எதிரான பிலாவல் பூட்டோவின் கொடிய வார்த்தைகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பூட்டோ தன் பதவியை மட்டுமின்றி, தன்னுடைய முழு தேசத்தையும் தரம் தாழ்த்திவிட்டார். தீவிரவாதி ஒசாமா பின் லேடன் இறக்கவில்லை, ஆனால் பாகிஸ்தான் அரசாங்கத்தின் கீழ் அமெரிக்கப் படைகளால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார் என்பதை பூட்டோ மறந்துவிட்டார். மேலும் பூட்டோ தன் நிலையற்ற நாட்டுடன் இந்தியாவை ஒப்பிடக் கூடாது. ஏனெனில், இந்திய அரசியலமைப்பு அனைவருக்கும் மத சுதந்திரத்தை உறுதி செய்கிறது. அதோடு, இந்திய இஸ்லாமியர்கள், பாகிஸ்தானிய இஸ்லாமியர்களைவிட மிகவும் பாதுகாப்பாகவும், சிறந்த நிலையிலும் இருக்கின்றனர் என்பதை பாகிஸ்தான் நினைவுகொள்ள வேண்டும்" என்று கூறினார்.