பா.ஜ.க-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான நுபுர் ஷர்மா, கடந்த வாரம் ஊடக விவாத நிகழ்ச்சியில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது உலக அளவில் இஸ்லாமியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் டெல்லி பா.ஜ.க-வின் ஊடகப் பொறுப்பாளர் நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பா.ஜ.க தலைமை நடவடிக்கை மேற்கொண்டது. இருப்பினும் நாளுக்கு நாள் இவர்களுக்கு எதிரான கண்டனங்கள் வலுத்துக்கொண்டே இருக்கின்றன.
சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக பா.ஜ.க-வின் நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் மற்றும் சில பத்திரிகையாளர்கள்மீது டெல்லி போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தது. இந்த நிலையில், நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்யக்கோரி இஸ்லாமியர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக டெல்லி, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போரட்டத்தில் குதித்துள்ளனர்.
இன்று டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்கள் நுபுர் ஷர்மாவைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். நுபுர் ஷர்மாவுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி ஏராளமானோர் கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
நுபுர் ஷர்மாமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வரும் நிலையில், மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
