Published:Updated:

`அமைச்சர்கள் கூட்டுக் கொள்ளை... குருமூர்த்தி பேசியது உண்மைதானோ?!’ - சந்தேகம் எழுப்பும் முத்தரசன்

முத்தரசன்
முத்தரசன்

`பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. அவர் சொந்தத் தோழமைக் கட்சி குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனால், அந்தக் கட்சிகூட இது பற்றிக் கவலைப்படவில்லை' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் முத்தரசன் கூறியிருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், நாகர்கோவிலில் ஜீவா நினைவு நாள் பிரசார இயக்கத்தில் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``அனைத்து அரசியல் தலைவர்களாலும் அங்கீகரிக்கப்பட்ட தலைவர்தான் ஜீவா. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியிலுள்ள அவரது சிலையை கூண்டுக்குள் அடைத்துவைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராடிவருகிறார்கள். 9-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்திருக்கிறது. மத்திய அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துவருகிறார்கள். வேளாண் சட்டங்கள் விவசாயிகளை அழிக்கும் சட்டமாக இருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களை காப்பாற்றுகின்றன. இந்தச் சட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும். மேலும் சட்டத்தைக் கைவிடக் கோரி 26-ம் தேதி நாடு முழுவதும் டிராக்டர் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் மத்திய அரசு நீதிமன்றம் மூலமாக ஈடுபட்டுவருகிறது. இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும். திட்டமிட்டபடி இந்தப் போராட்டம் நடைபெறும். தமிழகத்திலும் டிராக்டர் பேரணி நடைபெறும். இந்தப் பேரணிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தன் முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும்.

ஜீவா நினைவுநாள் பிரசாரத்தில் பேசிய முத்தரசன்
ஜீவா நினைவுநாள் பிரசாரத்தில் பேசிய முத்தரசன்

வடகிழக்குப் பருவமழை இன்னும் முடிவடையவில்லை. தமிழகத்தில் தற்போது பெய்துவரும் மழையால் டெல்டா மாவட்டங்கள் மட்டுமன்றி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சரியாகக் கணக்கெடுத்து, விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்குவதுடன், விவசாயக் கடனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். மத்திய அரசிடமிருந்து கஜா புயல் பாதிப்பு நிதி மற்றும் கொரோனா பாதிப்பு நிதி உட்பட பல நிதிகளை தமிழக அரசு கேட்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசிடம் கேட்டிருக்கும் நிதி இதுவரை தமிழகத்துக்கு வரவில்லை. எனவே பிரதமரைச் சந்திக்கும் முதலமைச்சர், நேரடியாக மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்துக்குத் தர வேண்டிய நிதியைக் கேட்டுப் பெற வேண்டும். மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்காமல், தமிழகத்துக்கு உரிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்துக்குத் தர வேண்டிய நிதியைத் தராவிட்டால், தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் அளிக்க வேண்டும்.

ஜீவா சிலைக்கு மாலை
ஜீவா சிலைக்கு மாலை

சென்னையில் நடந்த விழாவில் பேசிய குருமூர்த்தி நீதிபதிகளை விமர்சித்துப் பேசியிருக்கிறார். சசிகலாவையும் விமர்சித்திருக்கிறார். `அமைச்சர்கள் கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள்’ என்று கலைவாணர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். ஆனால் அதற்கு முதலமைச்சரோ அமைச்சர்களோ மறுப்பு அல்லது கண்டனம் தெரிவிக்கவில்லை. எனவே, இந்தக் கூட்டுக் கொள்ளை உண்மையாக இருக்குமோ என்ற ஐயப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. அவர் சொந்தத் தோழமைக் கட்சி குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனால், அந்தக் கட்சிகூட இது பற்றிக் கவலைப்படவில்லை. வருகிற சட்டசபைத் தேர்தலில் தமிழக மக்கள் தெளிவான தீர்ப்பை அளிக்கத் தயாராகிவிட்டனர். தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி அமோக வெற்றிபெறும். பாரதிய ஜனதா கட்சியை மக்கள் ஏற்க மாட்டார்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு