Published:Updated:

`நியாயமற்ற முறையில் பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி!'- ஆணவக்கொலையால் பொங்கிய முத்தரசன்

பி.ஆண்டனிராஜ்
எல்.ராஜேந்திரன்

``தமிழகத்தில் எல்லா ஆட்சியிலும் ஆணவக் கொலைகள் நடப்பது சாதாரணம் என முதல்வர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது'' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

முத்தரசன்
முத்தரசன்

நெல்லையில் இந்திய வாலிபர் சங்க நிர்வாகியான அசோக்குமார் கடந்த மாதம் மாற்று சமூகத்தினரால் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்துக்கு நிதி உதவி வழங்குவதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. சாதியின் பெயரால் தொடர்ந்து நடந்து வரும் இந்தக் கொலைகள், கடந்த 5 ஆண்டுகளில் 150-க்கும் அதிகமாக நடந்துள்ளது. `எல்லா ஆட்சியிலும் ஆணவப் படுகொலைகள் நடப்பது சாதாரணம்’ என நியாயமற்ற முறையில் முதல்வர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. ஆணவப் படுகொலைக்கு எதிராகச் சட்டம் இயற்றுவதோடு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் .

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

டீசல், பெட்ரோல் வரி உயர்வு என்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் சொல்லிய அன்று இரவே விலை உயர்ந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என மாநில அரசு சட்டமன்றத்தில் சொல்லிவரும் நிலையில், அதற்காக கிணறுகளைத் தோண்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மக்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்ளாமல் மத்திய அரசு மூர்க்கத்தனமாக இத்தகைய திட்டங்களை நிறைவேற்றும் செயலில் ஈடுபடக் கூடாது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதன்முதலாக நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ளது. ஆனால், மாநில அரசின் கருத்தைப் பெறாமல் மக்களின் எண்ணத்தை கேட்காமல் மத்திய அரசு இதை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் .

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி இருக்கும்வரை உள்ளாட்சித் தேர்தல் நடக்காது. மத்திய, மாநில அரசுகள் மொழி பிரச்னைகளில் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. குடிமராமத்துப் பணிகளை மாநில அரசு சிறப்பாக செய்திருந்தால், தமிழகத்தில் இவ்வளவு பெரிய வறட்சி ஏற்பட்டிருக்காது. நல்ல திட்டங்களை எல்லாம் மக்கள் எதிர்ப்பதாக, சேலம் எட்டுவழிச்சாலை குறித்து முதல்வர் பேசுவது தவறானது. நல்ல திட்டங்களை மக்கள் என்றும் எதிர்க்க மாட்டார்கள். சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தால் அதிக கமிஷன் கிடைக்குமே தவிர மக்களுக்கு எந்த நலனும் ஏற்படாது. சேலம் எட்டுவழிச் சாலை, திருமங்கலம் - கொல்லம் நான்கு வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்கள். இதுபோன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தபட்டால் வருங்காலத்தில் விவசாயமே இல்லாத நிலை உருவாகிவிடும்.

முத்தரசன் பேட்டி
முத்தரசன் பேட்டி

சமுதாயத்தில் முற்பட்டவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க அவசரம் காட்டும் மத்திய அரசு, நீண்டகாலமாக வலியுறுத்தப்படும் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தவும் ஆர்வம் காட்ட வேண்டும். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவிலான மாநாடு அக்டோபர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நெல்லையில் நடக்க இருக்கிறது. எதிர்க்கட்சிகள் எதுவுமே இல்லாமல் பா.ஜ.க ஆட்சி நடக்கும் நாடாக மாற்ற அக்கட்சி விரும்புகிறது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாததாக பாரதிய ஜனதா உள்ளது. மோடி சர்வாதிகாரியாகச் செயல்பட்டு வருகிறார்’’ என்று தெரிவித்தார்.