Published:Updated:

`அவர் ஆம் ஆத்மியில் இல்லை, மோடி ஆதரவாளர்!' - ஷஹீன் பாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் தந்தை

கபில்
கபில்

காவல்துறையினர் வெளியிட்ட புகைப்படத்தில் ஆம் ஆத்மி கட்சியின் அடையாளத்தைக் காட்டும் தொப்பியை அணிந்து அக்கட்சியின் நிர்வாகிகளுடன் கபில் நின்றுகொண்டிருந்தார்.

டெல்லியிலுள்ள ஷஹீன் பாக் பகுதியில் பெண்கள் அதிக அளவில் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு நடுவே கடந்த சில நாள்களுக்கு முன்பு கபில் குஜ்ஜார் என்பவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கபிலின் தந்தை கஜே சிங் `என்னுடைய மகன் மோடி மற்றும் அமித் ஷாவின் ஆதரவாளர்' எனக் கூறியிருப்பது பா.ஜ.க-வுக்கு எதிரான விமர்சனங்களை அதிகப்படுத்தியுள்ளது.

கபிலைக் கைது செய்த காவல்துறை அதிகாரிகள், ``ஷஹீன் பாக்கில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டக்களத்தில் `ஜெய் ஶ்ரீராம்' எனக் கத்திக்கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் என ஒப்புக்கொண்டார்" என்றனர். மேலும், `கைது செய்யப்பட்டவரின் மொபைலிலிருந்து கிடைத்த புகைப்படங்கள் இவை' எனச் சில புகைப்படங்களையும் வெளியிட்டனர். அந்தப் புகைப்படத்தில் ஆம் ஆத்மி கட்சியின் அடையாளத்தைக் காட்டும் தொப்பியை அணிந்து அக்கட்சியின் நிர்வாகிகளுடன் கபில் நின்றுகொண்டிருந்தார்.

கஜே சிங்
கஜே சிங்

காவல்துறையினரின் இந்தக் கருத்தை மறுத்த கபிலின் தந்தை கஜே சிங், ``எனக்கோ அல்லது என்னுடைய குடும்பத்தினருக்கோ ஆம் ஆத்மி கட்சியுடன் எந்தவித தொடர்பும் இல்லை. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர். அப்போது, எங்கள் எல்லாரையும் அவர்களுடைய தொப்பியை அணிய வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதைத்தான் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்" என்று கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ``என்னுடைய மகன் மோடியின் ஆதரவாளர். மோடி மற்றும் அமித் ஷா இருவரையும் பின்பற்றக்கூடியவர். அரசியலுக்கும் எனது மகனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கபில், ஷஹீன் பாக்கில் சாலை தடைபட்டுள்ளதை நினைத்து மிகவும் கவலைப்பட்டார். ஏனெனில், தினமும் வேலைக்குச் சென்றுவர நான்கு மணி நேரங்கள் ஆகிறது" என்றார். மேலும், ``என்னுடைய மகன் எப்போதும் ஹிந்துஸ்தான் மற்றும் ஹிந்துத்துவா குறித்து பேசிக்கொண்டிருப்பார்" என்றும் குறிப்பிட்டார்.

டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில் காவல்துறையினரின் இந்த அறிவிப்பு பா.ஜ.க மற்றும் ஆம் ஆத்மி கட்சியினரிடைய மிகப்பெரிய வார்த்தை மோதலை உருவாக்கியுள்ளது.

`தாஜ்மஹாலையும்கூட விற்றுவிடுவார்கள்!' - தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க-வை விமர்சித்த ராகுல் காந்தி
பின் செல்ல