Published:Updated:

`மகன் கொடுமைப்படுத்துவதாக 2 முறை கூறினார்!'- ஆந்திர முன்னாள் சபாநாயகர் மரணத்தில் `திடீர்' சர்ச்சை

ஆந்திர முன்னாள் சபாநாயகர் சிவபிரசாத் இறப்பில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆந்திராவின் முன்னாள் சபாநாயகரும் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவருமான கோடெலா சிவபிரசாத் ராவ் நேற்று காலை ஹைதராபாத்தில் உள்ள தன் வீட்டில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியானது. இதையறிந்த அவரின் உறவினர்கள் சிவபிரசாத்தை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு சில மணி நேர சிகிச்சைக்குப் பிறகு நேற்று பிற்பகல் பசவாடரகம் மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்தது.

kodela sivaprasada rao
kodela sivaprasada rao

பின்னர் அவரின் உடல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகள் முடிந்தபிறகு நேற்று மாலை சிவபிரசாத் உடல் என்.டி.ஆர் ட்ரஸ்ட் பவனில் வைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சிவபிரசாத்தின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

நாற்காலி சர்ச்சை, தேர்தல் தோல்வி; துரத்திய வழக்கு!- உயிரை மாய்த்துக்கொண்ட ஆந்திர முன்னாள் சபாநாயகர்?

கோடெலா சிவபிரசாத் ராவின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. முதலில் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவரின் உறவினர் காஞ்சி சாய் (சிவபிரசாத்தின் மைத்துனர்) கூறியுள்ள கருத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ` சிவபிரசாத் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார்’ என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

kodela sivaprasada rao
kodela sivaprasada rao

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த காஞ்சி சாய், ``சிவபிரசாத் தற்கொலை செய்துகொண்டிருப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என் உறவினர்கள் மற்றும் சிவபிரசாத்தின் நண்பர்கள் கூறியதைக் கேட்டால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கவே வாய்ப்புகள் உள்ளது. சிவபிரசாத்தின் மகன் சிவராமன், அவரை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கொடுமைப்படுத்தினார். அதனால் அவர்தான் சொத்துக்காக தன் தந்தையைக் கொலை செய்திருப்பார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தன் மகன் தன்னை நிறைய கொடுமைப்படுத்துவதாக சிவபிரசாத் என்னிடம் 2, 3 முறை கூறியுள்ளார். சிவபிரசாத் இறந்த பிறகு அவரைப் பசவாடரகம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சாதாரணமாக உடல்நிலை சரியில்லாத ஒருவரை எதற்காக கேன்சர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஹைதராபாத்தில் வேறு மருத்துவமனைகளே இல்லையா.. அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது ஒரு பாதுகாப்பு வீரரும் கார் ஓட்டுநரும் மட்டுமே உடன் இருந்துள்ளனர். குடும்பத்தினர் ஒருவர்கூட இல்லை. இந்த ஒரு விஷயமே சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும், சிவபிரசாத்தின் மகன் சிவராமன் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

kodela sivaprasada rao
kodela sivaprasada rao

சிவபிரசாத்தின் இறப்பை முதலில் தற்கொலை வழக்காகப் பதிவு செய்த காவலர்கள், தற்போது அதைச் சந்தேக மரணமாக மாற்றியுள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிவபிரசாத் தற்கொலை செய்துகொண்டதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவரது கழுத்தில் U வடிவிலான தற்கொலை குறியீடு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், `கோடெலா சிவபிரசாத்தின் தற்கொலைக்கு ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசுதான் காரணம்' எனக் குற்றம்சாட்டியுள்ளார் சந்திரபாபு நாயுடு. “ அடிப்படையில் சிவபிரசாத் ஒரு மருத்துவர். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை என்னால் கற்பனைகூட செய்துபார்க்க முடியவில்லை. மாநில அரசு சிவபிரசாத்தை அதிகமாகத் துன்புறுத்தியது. தன்னால் நிம்மதியாகத் தூங்கவும் முடியவில்லை என அவர் என்னிடம் கூறிவந்தார். இந்த அரசுக்கு எதிராக நாம் போராட வேண்டும் என நான் ஆறுதல் கூறினேன். ஆனால், இப்படி நடந்துவிட்டது.

kodela sivaprasada rao
kodela sivaprasada rao

இந்திய அரசியலில் இப்படியொரு நிகழ்வு எங்கும் நடந்ததில்லை. ஓர் அரசின் துன்புறுத்தலால் அரசியலின் மூத்த தலைவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். என் இத்தனை வருட அரசியல் வாழ்வில் இப்படியொரு கொடுமையைப் பார்த்ததில்லை. சிவபிரசாத்துக்கு எதிராக ஜெகன்மோகன் ரெட்டி நிறைய பிரச்னைகளை உருவாக்கினார். இதனால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்த சிவபிரசாத் இப்படி ஒரு முடிவைத் தேடிக்கொண்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு