Published:Updated:

“ஸ்டாலின் பங்காளி... ரஜினி பகையாளி!”

சீமான்
பிரீமியம் ஸ்டோரி
News
சீமான்

சீறும் சீமான்

கூட்டணிக்காகக் கட்சிகள் அனைத்தும் முட்டி மோதிக்கொண்டிருக்க... “தனித்தேதான் போட்டியிடப் போகிறேன்...” என்று இந்தமுறையும் தொடையைத் தட்டிக்கொண்டு களமிறங்கிவிட்டார் ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சில கேள்விகளோடு அவரைச் சந்தித்தோம்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டி என்பது கட்சிக்கு அங்கீகாரம் பெறும் முயற்சியா அல்லது தி.மு.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்ற யுக்தியா?’’

“நாங்கள் ஆட்சி மாற்றத்துக்கு வரவில்லை... அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக வந்திருக்கிறோம். எனவே, ஏற்கெனவே களத்தில் இருந்துவரக்கூடிய கட்சிகளோடே தேர்தல் உடன்பாடு வைத்துக்கொண்டு செல்வதென்பது, மாற்றம் அல்ல அது பெரிய ஏமாற்றம். ஒரு கட்சியோடு கூட்டணி சேர்ந்தால், 20 சீட் கொடுப் பார்கள். அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்துவிட முடியும்? எங்கள் இலக்கு 10 சீட், 20 சீட்டை வெல்வது அல்ல... இந்த நாட்டை வெல்ல வேண்டும். அப்போதுதான் நான் நினைக்கிற மாற்றத்தைக் கொண்டுவர முடியும். மக்களை நம்பாதவர்கள்தான் கூட்டணி வைத்துக் கொள்வார்கள். நான் பெரிய வீரன்... தனித்தே சண்டை செய்கிறேன்.’’

“ஆனாலும் தி.மு.க எதிர்ப்பில் நீங்கள் தீவிரமாக இருப்பதாகத் தெரிகிறதே..?’’

“கடந்த 50 ஆண்டுக்காலத் தமிழக அரசியல் என்பது ‘கருணாநிதி வாழ்க...’ அல்லது ‘கருணாநிதி ஒழிக’ என்பதாகத்தான் இருந்துவருகிறது. எனவே இங்கு நீண்டகாலமாக தி.மு.க-வுக்கு மாற்றான அரசியல்தான் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கோட்பாடு அடிப்படையில், அவர்கள் `திராவிடர்’ என்கிறார்கள்; நாங்கள் `தமிழர்’ என்கிறோம். அதனால், ‘திராவிடரா, தமிழரா...’ என்று நானே நேரடியாக மோதிவிட நினைக்கிறேன். இதன் மூலம் ‘தி.மு.க-வுக்கு எதிரான கட்சி அ.தி.மு.க’ என்ற கோட்பாட்டை உடைக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன்.”

“மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்ற அறிவிப்பில், இப்போதும் உறுதியாக இருக்கிறீர்களா?’’

“ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு வெளிவருவதற்கு முன்புவரை இந்த அறிவிப்பில் நான் ரொம்பவும் உறுதியாக இருந்தேன். ஆனால், மாறிவிட்ட இந்தச் சூழலில், நான் ஸ்டாலினை எதிர்ப்பது ரஜினிகாந்துக்கு ஆதரவாகிவிடக் கூடாது. அதனால், இவர்கள் இரண்டு பேரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டே கம்பு வீசப் போகிறேன். திப்பு சுல்தானை எங்கள் பாட்டன் தீரன் சின்னமலை எதிர்த்தார். ஆனால், வெள்ளைக்காரன் வந்த பிறகு, ‘திப்பு சுல்தானை எப்போது வேண்டுமானாலும் எதிர்த்துக் கொள்ளலாம்... ஆனால் அந்நியன் எப்படி எங்களை ஆளலாம்...’ என்று சொல்லி, முதலில் வெள்ளையனை அடிக்க ஆரம்பித்தார். அதேபோல், திராவிடக் கட்சிகளோடு எங்களுக்குப் பங்காளிச் சண்டைதான்... அதற்காக மராட்டியரை உள்ளே விட்டுவிட மாட்டோம்!’’

சீமான்
சீமான்

“2019 தேர்தலில், முதல் முயற்சியிலேயே கமல்ஹாசன் உங்களுக்கு ஈடான வாக்குகளைப் பெற்றார். இப்போது ரஜினிகாந்தும் களத்தில் இருப்பது உங்களுக்குப் பெரும் பாதிப்புதானே..?’’

“கமல் - ரஜினியோடு என்னை ஒப்பிட முடியாது. ஏனெனில், அவர்கள் இருவருக்கான திரைக்கவர்ச்சியும் புகழ் வெளிச்சமும் ரொம்பவும் பெரியது. அதனால்தான் ஊடகமும் இவர்கள் இருவர் என்ன பேசினாலும் அவற்றையே செய்திகளாக்குகிறார்கள். மற்றபடி என்னுடைய கோட்பாட்டை, தமிழக அரசியல் கட்சிகளில் யாருடைய கோட்பாட்டோடும் ஒப்பிட முடியாது. அப்படியிருக்கும்போது, எனக்கென்று இருக்கிற கூட்டம், என்னோடுதான் தொடரும். இன்னும் சொல்லப்போனால், ரஜினியும் அரசியலுக்கு வரும்போது, என்னுடைய தேவை இன்னும் கூடுதலாகிவிடும்... அதாவது, ‘சீமான் சொல்வது சரிதானே...’ என்றுதான் மக்கள் சிந்திப்பார்கள். எனவே, ரஜினி வந்து எங்களது வாக்குகளைப் பிரிப்பார் என்ற பேச்சுக்கே இடமில்லை!’’

“ `எம்.ஜி.ஆர் இருந்திருந்தால், ரஜினியை மீண்டும் ராமாபுரம் தோட்டத்தில் கட்டிப்போட்டு அடித்திருப்பார்’ என்று நீங்கள் விமர்சித்திருப்பது அரசியல் நாகரிகம்தானா?’’

“இப்படியொரு பேச்சை நானாகவா பேசினேன்..? ‘எம்.ஜி.ஆர் என்னைத் தோட்டத்தில் கட்டிவைத்து அடிக்கும்போது, கலைஞர்தான் தலையிட்டுக் காப்பாற்றினார்’ என்று ரஜினிகாந்தே நடிகர் சங்கக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். அந்தப் பேச்சின் காணொலி வலைதளங்களில் இருக்கிறது. அதைத்தான் நானும் பேசினேன்.’’

“பட்டியலின வெளியேற்றத்துக்கு சீமான் கொடுக்கும் ஆதரவு, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் முயற்சியாகிவிடாதா?’’

“பட்டியல் சாதிக்குள் இருப்பதை இழிவாக நினைப்பவர்கள் மேலேற வேண்டும், விடுதலையாக வேண்டும் என்று கோரிக்கைவைக்கிறார்கள். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றித் தர வேண்டியதுதானே. ‘எனக்கு வேண்டியது சலுகை அல்ல... உரிமை’ என்று அந்த மக்களே கேட்கிறபோது, அதைக் கொடுத்து விடுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை இருக்கப்போகிறது? இன்றைக்கு இருக்கிற சமூகக் கட்டமைப்பிலிருந்து விடுதலை வேண்டும் என்று கேட்பவர்களோடு சேர்ந்து நிற்பது எங்களின் கடமை!’’

“ஆனால், `சாதி, மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்துகிற பா.ஜ.க-வின் வழியிலேயே சீமானும் குரல் கொடுக்கிறார்’ என்ற குற்றச்சாட்டு எழுகிறதே?’’

“சாதியும் மதமும் இரு கண்கள் என்பது தான் பா.ஜ.க-வின் கோட்பாடு. நாங்கள் சாதி, மத உணர்ச்சியைக் கடந்து இன ஓர்மையைத் தேடுகிறோம். ஒருநாள், காலை 5 மணியிலிருந்து மாலை 5 மணி வரையிலும் ஒரு தாழ்த்தப்பட்டவனாக நீங்கள் வாழ்ந்து பாருங்கள்... அதன் வலி என்னவென்று உங்களுக்குத் தெரியும். பன்னெடுங்காலமாக வலியை அனுபவித்துவரும் என் மக்களின் உணர்விலிருந்துதான் நான் குரல் எழுப்புகிறேன். ‘சாமி இல்லை என்று சொல்கிற நீங்கள் ஏன் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்துகிறீர்கள்...’ என்ற கேள்வியைப் பெரியாரிடம் கேட்டபோது, ‘கடவுள் இல்லை என்பது என்னுடைய உணர்வு. ஆனால், கோயில் உள்ளே நுழைந்து கும்பிட வேண்டும் என்பது அவனுடைய உரிமை. அந்த உரிமையைப் போராடிப் பெற்றுக்கொடுக்க வேண்டியது ஒவ்வொருவனின் கடமை’ என்கிறார். அதைத்தான் நானும் செய்கிறேன்!”