சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சீமானிசம் Vs பிரபாகரனிசம்... 'நாம் தமிழர்' தகராறு!

சீமானிசம் Vs பிரபாகரனிசம்
பிரீமியம் ஸ்டோரி
News
சீமானிசம் Vs பிரபாகரனிசம்

2009 இலங்கை இறுதிப்போரையடுத்து, ஏற்கெனவே சி.பா.ஆதித்தனாரால் நடத்தப்பட்ட ‘நாம் தமிழர் கட்சி’ என்னும் பெயரைத் தூசுதட்டி எடுத்து 2010-ல் கட்சியைத் தொடங்கினார் சீமான்.

``உறவுகளே’’

சீமான் தன் கட்சித் தொண்டர்களை இப்படித்தான் அழைப்பார். அந்த உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரிவும் பிரச்னைகளும்தான் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகின்றன. என்ன ஆச்சு நாம் தமிழர் கட்சிக்கு?

கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், ஆனூர் ஜெகதீசன், விடுதலை ராசேந்திரன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய ‘தந்தை பெரியார் திராவிடர் கழக’ மேடைகளில் பகுத்தறிவு, தமிழின உணர்வு, ஈழ ஆதரவு, சாதி மறுப்பு ஆகியவற்றைப் பேசக்கூடிய பேச்சாளராக அரசியல் உலகத்துக்கு அறிமுகமானார் சீமான்.

2009 இலங்கை இறுதிப்போரையடுத்து, ஏற்கெனவே சி.பா.ஆதித்தனாரால் நடத்தப்பட்ட ‘நாம் தமிழர் கட்சி’ என்னும் பெயரைத் தூசுதட்டி எடுத்து 2010-ல் கட்சியைத் தொடங்கினார் சீமான். திராவிடக் கட்சிகளின்மீது அதிருப்தியில் இருந்தவர்கள், 2009-க்குப் பிறகு ஈழ ஆதரவு அரசியலைப் பேசிய இளைஞர்கள் என இருதரப்பினரையும் தன் பேச்சால் கவர்ந்தார் சீமான்.

2012-ல் வெளியிடப்பட்ட ‘நாம் தமிழர் கட்சி ஆவணம்’, தமிழ்பேசும் சாதிகள்தான் தமிழர்கள் என்று வரையறுத்து, பட்டியலினத்தைச் சேர்ந்த அருந்ததியர், மலைவாழ் மக்கள், உருது பேசும் முஸ்லிம்கள் எனப் பலரையும் தமிழர் அடையாளத்திலிருந்து தள்ளிவைத்தது, ‘கன்னடரான பெரியார் தமிழர்களின் விரோதி’ என்று நாம் தமிழர் கட்சியினர் விமர்சித்தது, ‘ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவேன்’, ‘சிங்களர்களால் நம் மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, எங்கள் ஆட்சியில் ஐம்பதாயிரம் பேரைக் கொண்ட சிறப்புக் காவல் படை அமைப்போம்’ என்றெல்லாம் அவ்வப்போது அதிரடிக்கருத்துகளை அள்ளிவிடுவது, பகுத்தறிவு பேசிய சீமான் திடீரென்று ‘வீரத்தமிழர் முன்னணி’யை ஆரம்பித்து, ‘முப்பாட்டன் முருக’னுக்குக் காவடி தூக்கியது என்று தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியது ‘நாம் தமிழர்.’

சீமான்
சீமான்

இவையெல்லாம்கூட கொள்கை அடிப்படையில் சீமானிடம் ஏற்பட்ட மாற்றங்கள். ஆனால் சீமான் தன் பிம்பத்துக்குத் தானே குழி தோண்டியது, ஈழம் - பிரபாகரன் சந்திப்பு குறித்த பேச்சுகளின்போதுதான். ‘அண்ணன் என்னை ஆமைக்கறி சாப்பிடச் சொன்னார்’, ‘பிரபாகரன் நாற்பதாயிரம் டன் உள்ள ஆஸ்திரேலிய அரிசிக்கப்பலை சுட்டுப்பழகப் பயிற்சி கொடுத்தார்’, ‘பிரபாகரன் நான் சாப்பிடும்போது என்னென்ன சாப்பிடுகிறேன் என்று குறிப்பெழுத ஒருவரை நியமித்தார்’, ‘பொட்டு அம்மான் வீட்டில் சாப்பிட்ட இட்லியை உடைத்துப்பார்த்தால் உள்ளே கறி இருந்தது’ என்றெல்லாம் அவர் பேசிய பேச்சுகள் சீமானைக் கேலிப்பொருளாக்கின. 30 ஆண்டுகள் ஆயுதப்போராட்டம் நடத்திக்கொண்டிருந்த ஒரு விடுதலை இயக்கத்தை ‘தமிழீழ முனியாண்டி விலாஸ்’-ஆக சீமான் மாற்றுகிறார் என்று குற்றச்சாட்டுகள் வலுத்தன. ‘சீமான் தன்னை மட்டுமல்ல, பிரபாகரனையும் சேர்த்து கேலிப்பொருளாக மாற்றுகிறார்’ என்று ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் கண்டனங்கள் வலுத்தன. ‘`சீமான் பொய் சொல்கிறார். அவர் பிரபாகரனைச் சந்தித்ததே எட்டே நிமிடங்கள்தான்” என்றார் வைகோ. கொளத்தூர்மணியும்் சீமானின் ‘தமிழீழ சமையல் சாதம், ஆமைக்கறி பிரமாதம்’ பேச்சுகளை மறுத்தார். இதனாலேயே சீமான் கடும் கண்டனங்களும் கிண்டல்களுக்கும் ஆளானார். சரி, இப்போது நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய கல்யாணசுந்தரமும் ராஜிவ்காந்தியும் என்ன குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்?

‘தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் வசூலிக்கப்பட்ட நிதிக்கு முறையான கணக்குவழக்குகள் இல்லை. ‘மது அருந்தக்கூடாது, புகை பிடிக்கக்கூடாது’ என்று மேடையில் பேசிவிட்டு சீமான் மது அருந்துகிறார், புகைபிடிக்கிறார். நாங்கள் போன் செய்தால் சீமான் எடுப்பதில்லை, எஸ்.எம்.எஸ் அனுப்பினால் பதில் அனுப்புவதில்லை.’ இதற்கு சீமானின் பதில்கள் என்ன? `அவர்கள் என் மனதைப் புண்படுத்தியதால்தான் நான் போனை எடுப்பதில்லை. அவர்கள் கட்சியை வளர்க்கவில்லை, அவர்களைத்தான் வளர்த்துக்கொண்டார்கள். ஃபேஸ்புக்கில் எனக்கு எதிராகப் போடப்படும் பதிவுகளை அவர்கள் தடுப்பதில்லை.’

மொத்தச்சண்டையே ‘சிகரெட் குடிக்கிறார், ஃபேஸ்புக் பதிவு, போனை எடுக்கவில்லை’ என்கிற தனிப்பட்ட குற்றச்சாட்டுகளாக இருக்கின்றனவே தவிர, கொள்கைரீதியிலான பிரச்னைகளாகத் தெரியவில்லை. ``சீமானிசத்தை ஏற்கமாட்டோம் என்கிறார்கள்’’ - இது சீமானின் ஆதங்கம். “நாங்கள் பிரபாகரனிசத்தைத்தான் ஏற்போம்’’ - இது கல்யாணசுந்தரத்தின் பதில்.

சீமான்
சீமான்

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளே ‘பிரபாகரனிசம்’ என்று எதையும் முன்வைத்ததில்லை. சமூகத்தின் பிரச்னைகளுக்கான காரணங்கள், அதன் இயங்குநிலை, தீர்வுகள் குறித்த தத்துவப்பார்வைகளே ‘இயம்’ என்று அழைக்கப்படுகின்றன. மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் என்பவை இந்த அடிப்படையிலானவைதான். தத்துவத்தைச் செயல்படுத்துபவர்கள், போராளிகள் எவ்வளவு முக்கியமானவர்களாக இருந்தாலும் அவர்கள் பெயரால் சேகுவேராயிசம், காஸ்ட்ரோயிசம், நல்லகண்ணுயிசம் என்றெல்லாம் அழைக்கப்படுவதில்லை. எனவே, ‘சீமானிசமா, பிரபாகரனிசமா’ சண்டைகளில் எந்த அர்த்தமும் இல்லை.

மேடைகளில் சீமானின் உடல்மொழியிலேயே பேசும் கணிசமான இளைஞர்களைச் சீமான் உருவாக்கியிருக்கிறார்.சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே, கொசுபேட் அடிப்பதைப்போல சட்டென்று கைகளை உள்வாங்கி, மைக் உள்ள மேஜையில் அடித்து உரத்த குரலெழுப்பிப் பேசுவது, ஜெபக்கூட்டத்தின் ரிதத்தில் அமைந்த ஏற்ற, இறக்கப் பேச்சுகள் என்று அப்படியே டிட்டோ சீமான்கள். ஆனால் அவர்களுக்கான எதிர்காலப் பாதைதான் என்ன?

‘பொதுத்தொகுதிகளில் பட்டியலினத்தவர் போட்டி’ ‘கூட்டணி இல்லை’, ‘மகளிருக்கு 50 சதவிகித இடங்கள்’ ஆகிய சீமானின் முயற்சிகள் நிச்சயம் பாராட்டத்தக்கவை. ஆனால் நடைமுறை எதார்த்தத்தில் 1969-ல் இருந்து இங்கே பெரிய கட்சிகள்கூட கூட்டணி வைத்தே வெற்றிபெற்றிருக்கின்றன. (2014 ‘மோடியா, லேடியா’ நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றது மட்டும் விதிவிலக்கு) நாம் தமிழர் கட்சியின் வாக்குவங்கி அதிகரிக்கிறது, சில இடங்களில் மூன்றாம் மற்றும் நான்காமிடம் கிடைக்கிறது. ஆனால் இவையெல்லாம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப் போதாது. ஒவ்வொரு தேர்தலிலும் செலவழித்து, பணமிழந்து அதன்பின் ஒதுங்கிப்போகிற நாம் தமிழர் தம்பிகள் எத்தனையோ பேர்!

தேர்தல் அரசியலிலும் நடைமுறை எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. லட்சியவாதத்திலும் சாத்தியமற்ற, நம்ப முடியாத பேச்சுகளால் கிண்டலுக்கு ஆளாகும் நிலை. தன்னை நம்பிவந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களின் நம்பிக்கைக்கும் எதிர்காலத்துக்கும் சீமானிடம் என்ன தீர்வுகள் இருக்கின்றன? ஒதுங்கிப்போன உறவுகளுக்கு உள்ளூர இந்தக் கேள்விகள் இருந்திருக்கும்.