அலசல்
அரசியல்
Published:Updated:

கருணாநிதியின் பேனாவே தி.மு.க ஆட்சிக்கு முடிவுரை எழுதும்! - ‘நாம் தமிழர்’ சே.பாக்கியராசன் பளார்

சே.பாக்கியராசன்
பிரீமியம் ஸ்டோரி
News
சே.பாக்கியராசன்

கடலுக்குள் பேனா சிலை அமைக்கக் கூடாது என சட்டப் போராட்டங்களுக்கு ஆயத்தமாகி வருகிறது நாம் தமிழர் கட்சி.

தி.மு.க-வின் இரண்டாண்டு ஆட்சி, அமைச்சரவை மாற்றம், ஆளுநர் சர்ச்சை உட்பட தமிழக அரசியலைச் சுழன்றடிக்கும் கேள்விகளுடன் நாம் தமிழர் கட்சியின் செய்திப் பிரிவுச் செயலாளர் சே.பாக்கியராசனைச் சந்தித்தேன்.

“ஈடில்லா ஆட்சி, இரண்டாண்டே சாட்சி’ என்கிறார்களே தி.மு.க-வினர்?”

“ `தேர்தல் வாக்குறுதிகளில் 80%, 90% நிறைவேற்றிவிட்டோம்’ என வாய் கூசாமல் பொய் பேசுகிறார்கள் தி.மு.க-வினர். ஆனால், சொத்து வரி, ஆவின் பால் விலை, மின்கட்டண உயர்வு என வாக்களித்த மக்களை வஞ்சித்ததோடு, விவசாயிகள், ஆசிரியர்கள், செவிலியர்கள், தொழிலாளிகள் என அனைத்துத் தரப்பினரையும் போராடும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது தி.மு.க அரசு. அரசியல் பிரமுகர்களும், அரசு ஊழியர்களும் கொல்லப்படும் அவலம், வேங்கைவயல் சம்பவம், காவல் நிலைய மரணங்கள் எனச் சட்டம்- ஒழுங்கும் சீரழிந்துவிட்டது. இது வெற்று விளம்பர ஆட்சி, அதற்கு இரண்டாண்டே சாட்சி!”

“சரி... அ.தி.மு.க-வாவது ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறதா?”

“இரண்டாண்டுகளில் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க-வும், நல்ல எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடியும் செயல்படவில்லை. அ.தி.மு.க உட்கட்சி விவகாரங்களைக் கையாளவே தன் நேரத்தையெல்லாம் பயன்படுத்தியவர், உட்கட்சி பிரச்னை முடிந்த பிறகும் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவதாகத் தெரியவில்லை.”

சே.பாக்கியராசன்
சே.பாக்கியராசன்

“ஆனால், அ.தி.மு.க ஆட்சியின் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டிய சி.ஏ.ஜி அறிக்கை குறித்து சீமான் பேசியதுபோல் தெரியவில்லையே..?”

“தி.மு.க-வின் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டபோது, `அ.தி.மு.க-வின் பட்டியலையும் ஏன் வெளியிடவில்லை?’ எனக் கேள்வி எழுப்பியவர் சீமான். அ.தி.மு.க-வையும் தி.மு.க-வையும் சம அளவில் வைத்து எதிர்க்கிறோம். துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அருணா ஜெகதீசன் அறிக்கைமீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். `அ.தி.மு.க-வினர் செய்த ஊழல்களை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைப்போம்’ எனச் சொன்ன தி.மு.க-வை நோக்கி, ‘ஏன் இன்னும் அமைக்கவில்லை?’ எனக் கேள்வி எழுப்புகிறோம்.”

“தமிழ்த் தேசியம் பேசும் நாம் தமிழர் கட்சி, மாநில அரசைச் சீண்டும் ஆளுநரை எதிர்த்து இதுவரை போராடாதது ஏன்?”

“போராட்டம் என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும்; மக்களின் தேவைகள் மற்றும் மக்களைப் பாதிப்பிலிருந்து தடுப்பதற்கான முன்னெடுப்பாக இருக்க வேண்டும். தனிநபரை எதிர்த்து அடையாளப் போராட்டங்களை நாம் தமிழர் ஒருபோதும் முன்னெடுக்காது. அரசுப் பொறுப்பில் இருக்கும் தி.மு.க-தான் அவரைப் பேசவிடாமல் தடுக்க வேண்டும்.”

“சீமானின் எதிர்ப்பை மீறி கடலுக்குள் பேனா சிலை வைத்துவிடுவார்கள்போல் தெரிகிறதே?”

“கடலுக்குள் பேனா சிலை அமைக்கக் கூடாது என சட்டப் போராட்டங்களுக்கு ஆயத்தமாகி வருகிறது நாம் தமிழர் கட்சி. ஒருவேளை சுற்றுச்சூழலுக்கு எதிராகக் கடலுக்குள் பேனா வைக்கப்பட்டால், கருணாநிதியின் பேனாவே தி.மு.க ஆட்சிக்கும் கட்சிக்கும் முடிவுரை எழுதும்!”