அரசியல்
அலசல்
Published:Updated:

“தீண்டாமையில் ஈடுபடும் ரெண்டு பேரை சுட்டால், எவனும் துணிவானா?”

சீமான்
பிரீமியம் ஸ்டோரி
News
சீமான்

- கொதிக்கும் சீமான்!

பா.ஜ.க மீது பாய்ச்சல், நடிகர் விஜய்க்கு ஒரு கொட்டு, முன்னாள் தம்பி இராஜீவ் காந்திக்கு தி.மு.க பதவி கொடுத்ததன் மீது விமர்சனம், கனிமொழிக்கு முதல்வர் பதவி கேட்டு சிபாரிசு என்று நாலாபுறமும் சுழன்றடிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். நேர்காணலுக்காக அவரது சென்னை பாலவாக்கம் இல்லத்தில் அவரைச் சந்தித்தேன்...

“உங்களின் அரசியல் யாரை எதிர்த்து... யாரை ஆதரித்து... ஏனென்றால், ‘சீமான் `அவர்களின் `பி’ டீம்’... `இவர்களின் `பி’ டீம்...’ என்று ஏகப்பட்ட விமர்சனங்கள் வைக்கிறார்களே?”

“லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, சாதியத் தீண்டாமை, அடக்குமுறை, ஒடுக்குமுறை, மது போதை, இயற்கை வளங்களைச் சூறையாடல் என இந்தச் சமூகத்துக்கு எதிராக அநியாயம் செய்பவர்கள் அனைவருமே எங்கள் எதிரிகள்தான். எங்களை ‘ஏ’ டீம், ‘பி’ டீம் என்பவர்கள், பா.ஜ.க என்கிற கட்சியைத்தான் எதிர்க்கிறார்களே தவிர, அவர்களின் கோட்பாட்டை அல்ல. ஆனால், நாங்கள் அந்த ஆபத்தான கோட்பாட்டைத்தான் நேரடியாக எதிர்க்கிறோம். எங்களை விமர்சிப்பவர்களுக்கு எங்கள் செயல்பாடுகள்தான் பதில்.”

“ஆனால், ‘திராவிடச் சித்தாந்தத்தை எதிர்ப்பவர்களெல்லாம் இறுதியில் காவியில்போய் கலந்துவிடுகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்?”

“காவியோடு கலந்ததெல்லாம் திராவிடச் சித்தாந்தம்தான்... திராவிடக் கட்சிகள் இரண்டுமே பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தனவா, இல்லையா... பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்கூட இல்லாத அளவுக்குத் தொட்டதற்கெல்லாம் மோடியை அழைத்து விழா எடுக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாகத் தீர்ப்பு வரும்போது, ஆர்.எஸ்.எஸ் தலைவர் கொடுத்த அறிக்கைக்கும், ஐயா ஸ்டாலின் கொடுத்த அறிக்கைக்கும் ஓர் எழுத்து வேறுபாடு சொல்லுங்கள் பார்ப்போம். இதற்கெல்லாம் எதிர்வாதம் வைக்க முடியாதவர்கள்தான் வீண் அவதூறுகளைப் பரப்புகிறார்கள்.”

“வெறும் பேச்சு, பேட்டி, அறிக்கை என, ஒரு ‘பாசிங் கிளவுட்’ போலத்தான் சீமானின் அரசியல் என்கிறார்களே?”

“தினம் தினம் போராடும் மக்களோடு போய், அவர்களது நியாயத்தின் பக்கம் நிற்கிறேன். கிராமங்கள் வரை கட்டமைப்பை உறுதிப்படுத்தியிருக்கிறேன். வெறும் ‘பாசிங் கிளவுட்’-ஆக இருந்தால் எப்படி 31 லட்சம் பேர் வாக்களித்திருப்பார்கள்..?”

“தீண்டாமையில் ஈடுபடும் ரெண்டு பேரை சுட்டால், எவனும் துணிவானா?”

“ ‘உங்கள் தங்கை கனிமொழியை இரண்டரை ஆண்டுகள் சுழற்சிமுறையில் முதல்வராக்குங்களேன்’ என்று முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் கோரிக்கை ஏன்..?”

“அதிகாரத்தில் இருப்பவர்கள் வெற்று வார்த்தையில் ‘சமூகநீதி அரசு’ என்று சொல்லிக்கொண்டிருந்தால் போதாது. அதைப் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே அந்தக் கருத்தைச் சொன்னேன். ‘மகளிர் நிமிரட்டும். மாநிலம் உயரட்டும்’ என்று தமிழ்நாடு முழுவதும் விளம்பரம் செய்பவர்களின் கட்சியில் எத்தனை பெண்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்... கனிமொழிக்குக்கூட ஒப்புக்குத்தானே பொதுச்செயலாளர் பதவி..?”

“உங்களின் முன்னாள் தம்பி இராஜீவ் காந்தியும் தமிழர்தானே... பிறகு ஏன் தி.மு.க மாணவரணித் தலைவராக அவரை நியமித்ததை விமர்சித்திருக்கிறீர்கள்?”

“நான் எதிர்மறையான விமர்சனம் எதையும் வைக்கவில்லை. தி.மு.க-வில் பிரசன்னா மாதிரி தகுதியான தம்பிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கொடுக்காமல் இவருக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்றால் என்ன காரணம்... இங்கிருந்து அங்கு போய்ச் சேர்ந்ததால்தானே?”

“ஆனால், வெளியேறுபவர்களெல்லாம், ‘தன்னைத் தவிர யாருக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை சீமான்’ என்கிறார்களே?”

“ஆயிரம் பேர் அமர்ந்து செல்லும் கப்பலாக இருந்தாலும், ஒரு மாலுமிதான் அதை ஓட்டுவார். எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதாகூட அப்படித்தானே கட்சி நடத்தினார்கள்... என்னைப் பார்த்து மட்டும் இப்படிச் சொல்வது வயிற்றெரிச்சலன்றி வேறென்ன..?”

“ ‘எனக்குப் போட்டி ஜோசப் விஜய்தான்’ என்று நடிகர் விஜய் பேசியதை, ‘தம்பி பாதுகாப்பாக விளையாடுகிறார்’ என்றீர்களே... அது விமர்சனமா இல்லை அறிவுரையா?”

“ ‘எனக்கு எதிரி பா.ஜ.க., காங்கிரஸ்., தி.மு.க., அ.தி.மு.க’ என்று பேசினால் என்ன நடக்கும் என்று அவருக்கும் தெரியும். நமக்கும் தெரியும். இருந்தாலும், அவர் தனக்குப் போட்டியாகத் தன்னையே குறிப்பிட்டது ஒரு முதிர்ந்த பதிலாக இல்லை என்பதால் அப்படிச் சொன்னேன். `முறைகேடாக நிர்வாகம் செய்து, மக்களின் நலனைக் கெடுப்பவர்கள் எல்லோரும் எனக்கு எதிரிதான்’ என்று பேசியிருக்கலாம்.”

“நீங்கள் புதிதாக ஹெலிகாப்டர் வாங்கியிருப்பதாகவும், சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவருவதாகவும் சொல்கிறார்களே?”

“தமிழனும், தமிழ்த் தேசியம் பேசுகிறவனும் கிழிந்த ஜிப்பாவைப் போட்டுக்கொண்டு ‘தோழர் ஒரு டீ வாங்கிக் கொடுங்க...’ என்று கேட்க வேண்டும் என இவர்கள் விரும்புகிறார்கள். ஏன் தமிழன் வசதியாக வாழக் கூடாதா... அந்த ஹெலிகாப்டரை என் தம்பி ஒருவன் வாங்கியிருக்கிறான். அதை, ‘நீங்கள் பயன்படுத்துங்கள்’ என்று ரொம்ப நாளாகவே சொல்லிவருகிறான். நானே ஹெலிகாப்டர் வாங்குமளவுக்கு வசதியாக இருந்தால், அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் சும்மாவா இருப்பார்கள்?”

“தமிழ்நாடு அரசு வழங்கவிருக்கும் ‘மக்கள் ஐடி’ குறித்து என்ன நினைக்கிறீர்கள்..?”

“ஏற்கெனவே ஆதார் அட்டை மூலம் படும் துயரம் போதாதா... இதற்கு பதிலாக, வட கிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதைப்போல, ‘இன்னர் லைன் பர்மிட்’ கார்டு கொடுங்கள். அப்படிக் கொடுத்தால் வெளிமாநிலத்தவன் எத்தனை பேர் என் மாநிலத்துக்கு வந்து போனான் என்கிற கணக்காவது இருக்கும். இந்தியைத் திணித்தால் துடிப்பவர்கள், இந்திக்காரனைத் திணித்தால் மட்டும் எதிர்க்காதது ஏன்?”

“புதுக்கோட்டையில் சமீபத்தில் நடந்த தீண்டாமைக் கொடுமையில் பாதிக்கப்பட்டவர்களும் தமிழர், பாதிப்பு ஏற்படுத்தியவர்களும் தமிழர்... இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பே திராவிடம் என்று பேச்சில் மட்டும் ஆட்சி நடத்திவரும் திராவிட இயக்கங்களின் படுதோல்வியே இதெல்லாம். தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடும் அப்பாவி மக்களைத் துப்பாக்கியால் சுடும் ஆட்சியாளர்கள், இப்படி தீண்டாமைக் கொடுமை செய்யும் ரெண்டு பேரைச் சுட்டுப்போட்டால், அடுத்து இதுபோல் செய்ய எவனும் துணிவானா?”