
ஈரோடு கிழக்குத் தொகுதிக்குள் மனிதப் பட்டிகளை உருவாக்கி, அதில் வாக்காளர்களை அடைத்துவைத்து, எங்களை வாக்குச் சேகரிக்கக்கூட விடாமல் தடுக்கப் பார்த்தது தி.மு.க.
எதிர்பார்த்தபடியே இடைத்தேர்தல் முடிவு வெளியாகியிருக்கும் சூழலில், தி.மு.க - நாம் தமிழர் கட்சி இடையிலான மோதல், நா.த.க-வினர்மீது பாயும் வழக்குகள், டிரெண்டாகும் ‘டி-ஷர்ட்’ சர்ச்சை எனப் பல்வேறு கேள்விகளை நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் முன்வைத்தோம்...
“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“தேர்தல் என்றாலே தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சியினரும் பணமூட்டையை அவிழ்த்துக்கொட்டுவார்கள். இந்த இடைத்தேர்தலில் கூடுதலாகவே கொட்டியிருக்கிறார்கள். இந்த வெற்றி தி.மு.க-வின் இரண்டாண்டுக்கால ஆட்சி, சாதனையால் கிடைத்த வெற்றியென்றால், எதற்குக் கொலுசு, குக்கர், குங்குமச்சிமிழ், 3,000 ரூபாய் பணமெல்லாம் கொடுத்தார்கள். இதைத் தட்டிக்கேட்ட என் தம்பிகள், தங்கைகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி வளர்வதை தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு கட்சிகளுமே விரும்பவில்லை. இவர்களை எதிர்த்துப் போர் செய்யத்தான் வேண்டியதிருக்கிறது.”
“போர் செய்ய வேண்டுமென்பதற்காக, பதிலுக்கு பதில் ‘நானும் கட்டையைத் தூக்குவேன்’ என வன்முறையைத் தூண்டுகிறாரா சீமான்?”
“அடித்தவனை விட்டுவிட்டு, அடி வாங்கினவனைப் போய் வன்முறையைத் தூண்டுகிறான் என்கிறீர்களே... பா.ஜ.க மாநிலத் தலைவராக தமிழிசை செளந்தரராஜன் இருந்தபோது, விமானத்தில்வைத்து ஒரு பெண் அவரிடம் எதிர்த்து கேள்வி கேட்டார். அதற்காக, அந்தப் பெண்மீது வழக்கு பாய்ந்தது. அப்போது, அதை ‘பாசிசம்’ என தி.மு.க-வினர் கண்டித்தார்கள். இன்று, தி.மு.க அரசுக்கு எதிராகக் கேள்வியெழுப்பிய எங்கள் தங்கை காளியம்மாள் மீது வழக்கு போடுகிறார்கள். இது பாசிசம் இல்லையா... கருத்தை, கருத்தாக தி.மு.க-வினர் எதிர்கொள்வதில்லை. ஒருவருக்கு எந்த மொழியில் சொன்னால் புரியுமோ, அந்த மொழியில்தான் புரியவைக்க வேண்டும்.”

“ `அருந்ததியர் சமூகத்தினரை `வந்தேறி’ என சீமான் அவமானப்படுத்திவிட்டார்’ என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றனவே?”
“ஒருநாளும் ‘வந்தேறி’ என்கிற சொல்லை நான் பயன்படுத்தியதே இல்லை. ஆனால், அந்தச் சொல்லை நான் சொல்லிவிட்டதாக தி.மு.க-வினர்தான் தவறாகக் கட்டமைக்கிறார்கள். விஜயநகரப் பேரரசு காலத்தில், தூய்மைப் பணிக்காக தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டவர்கள்தான் அருந்ததியர்கள். டி.கே.எஸ்.இளங்கோவன், எரிமலை ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் இதையேதான் சொல்லியிருக்கிறார்கள். ஐயா தொ.பரமசிவன் விரிவாகப் பேசிய காணொளியே இருக்கிறதே... அவரும் நான் சொன்னதைத்தான் உறுதிப்படுத்தியிருக்கிறார். வரலாற்றில் இல்லாத ஒன்றை நான் பேசவில்லை. அருந்ததியர்கள் இப்போதும் தெலுங்கு, கன்னட மொழி பேசவில்லையா... இதைச் சொன்னால் ஏன் கோபம் வருகிறது?”
“இது ஒரு சமூகத்தின் மீதான தாக்குதல் இல்லையா..?”
“நான் உண்மையைப் பேசுகிறேன். இது எப்படித் தாக்குதலாகும்... நயந்து நயந்து என்னால் பேச முடியாது. அருந்ததியர் சமூகம் தொடர்பாக நான் பேசியதற்கு வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன. நீ எனக்கு ஓட்டுப் போடு, போடாத. அதற்காக, என்னால் பொய் பேச முடியாது.”
“பிரதமர் மோடியை உதயநிதி சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“தி.மு.க - பா.ஜ.க இரு கட்சிகளுமே ஒரு புரிதலோடுதான் இருக்கின்றன. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்கூட, நலத்திட்ட விழாக்களுக்கு பிரதமரை அவர்கள் அழைப்பதில்லை. ஆனால், எல்லாவற்றுக்கும் பிரதமரை அழைத்துவருவது தி.மு.க-தான். மேலே இருக்கிற அதிகாரத்தை அனுசரித்துப் போக வேண்டுமென்ற துடிப்புதான் இதற்கெல்லாம் காரணம்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்குள் மனிதப் பட்டிகளை உருவாக்கி, அதில் வாக்காளர்களை அடைத்துவைத்து, எங்களை வாக்குச் சேகரிக்கக்கூட விடாமல் தடுக்கப் பார்த்தது தி.மு.க. அந்த மனிதப் பட்டிகளில் திரைப்படங் களைத் திரையிட்டவர்கள், பி.பி.சி-யின் ஆவணப்படத்தை ஏன் திரையிடவில்லை... குஜராத் கலவரத்தை ஆதரித்து பாராளுமன்றத்தில் பேசியவர்கள்தானே தி.மு.க-வினர். ‘இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலைச் செய்வோம்’ எனச் சொன்னது என்னாச்சு... இவ்வளவுதான் இவர்களது பா.ஜ.க எதிர்ப்பு அரசியல்.”
“அ.தி.மு.க பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்திருப்பது பற்றி..?”
“இந்தத் தீர்ப்பு எதிர்பார்த்ததுதான். தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக ஐயா ஓ.பி.எஸ் சொன்னவுடனேயே, ஐயா எடப்பாடி பழனிசாமி பக்கம் கட்சி முழுவதுமாகச் சென்றுவிட்டது. இதன் பின்னணியில் பா.ஜ.க இருப்பது கண்கூடு. இங்கே கேள்வி கேட்கவேண்டியது நீதிமன்றங்களைத் தான். மக்களின் வழக்குகள் பத்தாண்டுகளுக்கு மேலாக நீதிமன்றங்களில் கிடப்பில் கிடக்கின்றன. ஆனால், அரசியல் வழக்குகள் மட்டும் உடனுக்குடனே தீர்த்துவைக்கப்படுகின்றன. கட்சிகளின் தலைமை அலுவலகமாக மாறிவிட்டனவா நீதிமன்றங்கள்... நீதிபதிகள், ஐ.பி.எஸ் அதிகாரிகளை ஏன் ஆளுநராக்குகிறது பா.ஜ.க... இதன் பின்னால் இருக்கும் அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.”
“40,000 ரூபாய்க்கு டி-ஷர்ட் வாங்கி நீங்கள் போட்டுக்கொண்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் வருகிறதே... பார்த்தீர்களா?”
“பார்த்தேன். என் தம்பிகள் வெற்றிக்குமரனும் துரைமுருகனும் ஆசைப்பட்டு அதை வாங்கிவந்தார்கள். ‘ராகுல் காந்தி இந்த மாடல் பனியனைப் போட்டுத்தான் நடைப்பயணம் போனாரு. நீங்களும் போடுங்கண்ணே’ என்று சொன்னார்கள். அவர்களின் ஆசைக்காக அதைப் போட்டேன். உடனே, ‘40,000 ரூபாய் டி-ஷர்ட் போட்டுட்டாரு...’ எனக் கிளம்பிவிட்டனர். நானும் என் மகனும் 16,000 ரூபாய்க்கு ஒரு சைக்கிளை வாங்கினோம். அந்த சைக்கிளை ஒன்றே கால் கோடி என்று சமூக வலைதளங்களில் எழுதியவர்கள்தான் இவர்கள். இதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு நம் பணியைப் பார்க்கப் போய்விட வேண்டும்.”