Published:Updated:

“ரஜினியை எச்சரிக்கை செய்தேன்... கமலைப் பார்த்து வேதனைப்படுகிறேன்... விஜய் குரல் கொடுக்க வேண்டும்!”

 சீமான்
பிரீமியம் ஸ்டோரி
சீமான்

- மனம் திறக்கிறார் சீமான்

“ரஜினியை எச்சரிக்கை செய்தேன்... கமலைப் பார்த்து வேதனைப்படுகிறேன்... விஜய் குரல் கொடுக்க வேண்டும்!”

- மனம் திறக்கிறார் சீமான்

Published:Updated:
 சீமான்
பிரீமியம் ஸ்டோரி
சீமான்

“ஐம்பது வருடங்களாக புகழ்ச்சியை மட்டுமே பார்த்தவரால் விமர்சனங்களைத் தாங்கமுடியாது. அவர் குணநலன்களுக்கு அரசியல் சரிவராது. அவர் எடுத்ததுதான் மிகச் சரியான முடிவு. நானும் அதைத்தான் விரும்பினேன்.''

ரஜினி தன் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது பற்றி சீரியஸாகச் சொல்லிவிட்டு, நம்மை சிரித்தபடி வரவேற்றார், ‘நாம் தமிழர் கட்சி'யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தன் கட்சித் தம்பிகளுக்காக என்றில்லை, நடிகர்கள் சூர்யா, விஜய்க்கு ஒரு பிரச்னை என்றாலும் ‘அண்ணனாகத் துணை நிற்பேன்' என அதிரடி அறிக்கைகளை வெளியிட்டு வரும் சீமானிடம் தற்கால அரசியல் சூழல் குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?

‘‘நான் பார்த்தவரையில் இந்த 60 நாள்களில், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை அங்கும் இங்கும் இடமாறுதல் செய்ததைத் தவிர இந்த அரசாங்கம் எதையும் உருப்படியாகச் செய்யவில்லை. தேர்தலுக்கு முன்பாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகின்றனர். உதாரணமாக, நீட் தேர்வால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும். அதற்குத் தனியாகக் குழு அமைத்து கருத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.''

நீட் விஷயத்தில் வேறு என்ன செய்திருக்கவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

‘‘நீட் தேர்வு கொண்டு வரப்பட்டபோதே அதை எதிர்த்திருக்க வேண்டும். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த தி.மு.க அதைச் செய்யவில்லை. இப்போதாவது, ‘எங்கள் மாநிலத்தை விட்டுவிடுங்கள், எங்களை இந்திய மருத்துவக் குழுமம் அங்கீகரிக்கவே வேண்டாம். எங்கள் பிள்ளைகளை மருத்துவர்களாக நாங்கள் அங்கீகரித்தால் போதும்' என்கிற துணிச்சலான நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்க வேண்டும்.''

 “ரஜினியை எச்சரிக்கை செய்தேன்... கமலைப் பார்த்து வேதனைப்படுகிறேன்... விஜய் குரல் கொடுக்க வேண்டும்!”

தமிழக அரசுப்பணிகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை, எட்டாம் வகுப்பு வரை கட்டாயம் தமிழ் என மாநில உரிமைகள் சார்ந்த தி.மு.க அரசின் நடவடிக்கைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

‘‘வெற்று அறிவிப்புகளாக மட்டும் இல்லாமல் நடைமுறைக்கு வரவேண்டும். உதாரணமாக, தமிழக அரசுப் பணிகளில் 85 சதவிகித வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். மீதமுள்ள 15 சதவிகிதத்தை மற்றவர்களுக்குக் கொடுக்கலாம். பல மாநிலங்களில் ஏற்கெனவே அதற்கான சட்டமும் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அத்தகைய சட்டம் இயற்ற வேண்டும். ஏற்கெனவே பணியில் இருப்பவர்களையும் அவரவர் மாநிலத்துக்குத் திருப்பி அனுப்பவேண்டும். அந்த இடங்களில் நம்மவர்களைப் பணியில் அமர்த்தவேண்டும்.''

‘நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் பா.ஜ.கவின் கொள்கைகளோடு ஒத்துப் போகின்றன. இந்துத்துவ அஜென்டாபடிதான் சீமான் செயல்படுகிறார்' என்கிற விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றனவே?

‘‘அதெல்லாம் சும்மா கிளப்பிவிடுவது. நான் இறை நம்பிக்கையற்று நீண்டகாலம் பயணம் செய்தவன். இன மீட்சி என்று வரும்போது தமிழர் வழிபாட்டை மீட்பதற்காக சில வேலைகளைச் செய்தேன். உடனே, ‘பாருங்கள், சீமான் இந்துத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்' என விமர்சனம் செய்கிறார்கள். நான் என் மெய்யியல் கோட்பாட்டைத்தான் தூக்கிப் பிடிக்கிறேன். அதைப் பார்த்து இளைஞர்கள் எழுச்சியோடு என்னை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள். பா.ஜ.க அதைக் காப்பியடித்தது, அரசியல் செய்ய நினைத்தது. ஆனால், அது எடுபடவில்லை. என் அளவுக்கு பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விமர்சனம் செய்தவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இல்லை. என்னை பி.ஜே.பியின் ‘பி' டீம் என்பவர்கள்தான் மெயின் டீமாக இருக்கிறார்கள்.''

 “ரஜினியை எச்சரிக்கை செய்தேன்... கமலைப் பார்த்து வேதனைப்படுகிறேன்... விஜய் குரல் கொடுக்க வேண்டும்!”

நாம் தமிழர் கட்சி எப்போது ஆட்சிக்கு வரும்?

‘‘எப்போது வேண்டுமானாலும் வரட்டும். நான் எங்கள் முன்னவர்களின் எச்சம்தான். சமகாலத்தில் அறிவுமதி, சுப.வீரபாண்டியன், கொளத்தூர் மணி, ஐயா வீரமணி, பழ.நெடுமாறன், என்னுடைய பேராசிரியர் தொ.பரமசிவன் போன்றவர்கள் தூவிய விதையில்தான் நான் முளைத்து வந்திருக்கிறேன். எனக்கு இயல்பிலேயே இருந்த தமிழ் மொழி, இன உணர்வு என்னை இவர்களை நோக்கித் தள்ளியது. தேர்தல் வெற்றி எனக்கு ஒரு பொருட்டே அல்ல. வாக்குக்கு காசு கொடுத்து அடையும் வெற்றியில் என்ன பெருமை இருக்கிறது? எனக்கு, ‘இவ்வளவு சீட்டு தருகிறோம், பணம் தருகிறோம்' என்று பலர் பேரம் பேசினார்கள். ஆனால், நான் அவர்களிடம் சரணடையவில்லை. நான் கட்சியை அடமானம் வைத்துவிடமாட்டேன் என்கிற நம்பிக்கையில்தான் என்னோடு லட்சக்கணக்கான தம்பி, தங்கைகள் நிற்கிறார்கள். எங்களுக்கு இலக்கு ஒன்றுதான், அது என் இனத்தின் விடுதலை.''

கமல்ஹாசன் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் வெளியேறியிருக்கிறார்களே?

‘‘அவர்கள் வெளியேறியது நல்லதுதான். பல எதிர்பார்ப்புகளோடு வந்திருக்கிறார்கள் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஒருவேளை தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து சில இடங்களில் வென்றிருந்தால் யாரும் கட்சியிலிருந்து போயிருக்க மாட்டார்கள்.''

அரசியலுக்கு வரவே போவதில்லை என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டாரே ரஜினி?

‘‘அண்ணன் கமலுக்குத் தற்போது ஏற்பட்டிருக்கிற நிலையை, தூரத்தில் இருந்து பார்க்கும் நமக்கே மிகுந்த வேதனையாக இருக்கிறது. கட்சியை விட்டு வெளியேறிவர்களிடம், ‘இப்படி விட்டுவிட்டுப் போகலாமா' என்றுகூட நான் கேட்டேன். அண்ணன் கமல், தனிப்பட்ட முறையில் பல வெற்றி, தோல்விகளைப் பார்த்தவராக இருந்தாலும் அவரின் மனசுக்குள் ஒரு வருத்தம் இருக்கும். அது மாதிரியான ஒரு சூழல் ஐயா ரஜினிகாந்துக்கு வந்துவிடக்கூடாது என ஆரம்பம் முதலே நினைத்தேன். ‘ஐயா, இந்த விளையாட்டு உங்களுக்கு வேண்டாம். உங்களை உசுப்பேத்தி களத்தில் இறக்கிவிட்டவர்களே, வந்தபிறகு உங்களை விமர்சனம் செய்வார்கள்' என எச்சரிக்கை செய்தேன்.''

விஜய் எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா?

‘‘வரவேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், தம்பி சூர்யாவைப் போல் தம்பி விஜய்யும் மக்கள் பிரச்னைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுக்க வேண்டும். திடீரென்று கட்சி ஆரம்பித்து தலைவராவது கடினம். ரசிகர்கள் மட்டுமே வாக்குச் செலுத்தி ஒருவர் நாடாள முடியாது என்றுதான் சொல்கிறேன்.''

 “ரஜினியை எச்சரிக்கை செய்தேன்... கமலைப் பார்த்து வேதனைப்படுகிறேன்... விஜய் குரல் கொடுக்க வேண்டும்!”

மூச்சுக்கு முன்னூறு முறை பிரபாகரன் பற்றிப் பேசும் நீங்கள் ‘மேதகு' படம் பற்றி வாய் திறக்கவில்லையே?

‘‘அது அவசியப்படவில்லை. படம் எடுத்தவர்களுக்கே என் கருத்து தேவைப்படவில்லை. என்னைப் படம் பார்த்துக் கருத்துச் சொல்லச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. பிறகு, தேவையில்லாமல் நான் ஏன் பேச வேண்டும்? என்னைப் பொறுத்தவரை பிரபாகரன் தமிழ்ப் பேரினத்தின் தலைவர். அவரைப் பற்றி பிரமாண்டமான படைப்பாக வெளியாக வேண்டும். மிகச்சிறிய அளவில் தீப்பெட்டிப் படமாக எடுத்திருக்கக் கூடாது. அதிகாரத்துக்கு வந்தபிறகு அதற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி, ‘பிரேவ் ஹார்ட்’, ‘பென்ஹர்’, ‘டென் கமாண்ட்மென்ட்ஸ்’ போல பல கட்டங்களாகத் திரையில் ஆவணப்படுத்தப்பட வேண்டும். நானும் தம்பி வெற்றிமாறனும் வெப் சீரிஸாக எடுக்கவேண்டும் எனப் பல ஆண்டுகளாகப் பேசிவருகிறோம்.''

‘நடக்காத விஷயங்களைக் கதைகளாகச் சொல்லி நீங்கள்தான் பிரபாகரனை இழிவுபடுத்துகிறீர்கள்’ என வன்னி அரசு உள்ளிட்ட பலர் விமர்சனம் செய்கிறார்களே?

‘‘அவர் என் தம்பிதான். அவருக்கு அண்ணனை இப்படி விமர்சித்துப் பார்க்கவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ‘தம்பிதானே, விமர்சித்துவிட்டுப் போகட்டும்' என நானும் விட்டுவிடுவேன். தவிர, என்னை விமர்சிப்பவர்களுக்கு என்னை விமர்சிக்க ஏதோவொரு தேவை இருக்கிறது. ஆனால் அதற்கு பதில் சொல்லவேண்டிய அவசியமோ, தேவையோ எனக்கு இல்லை.''

நாம் தமிழர் கட்சியினர் மேடைகளிலும் சமூக வலைதளங்களிலும் மிகவும் அநாகரிகமாகப் பேசுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றனவே?

‘‘மற்றவர்கள் எங்களைப் பேசிய அளவுகூட எங்கள் தம்பி, தங்கைகள் மற்றவர்களைப் பேசியதில்லை. என்னை, என் கட்சி தங்கைகளை மிகக் கடுமையாக விமர்சிப்பதையும் நீங்கள் பார்க்கவேண்டும். முந்திக்கொண்டு வெளியில் சொல்லிவிடுபவர்கள் நேர்மையாளர்களாகவும், கடந்து அமைதியாகச் செல்லவேண்டும் என நினைக்கும் நாங்கள் கெட்டவர்களாகவும் ஆகிவிடுகிறோம். பொது மேடைகளிலும் உள்ளரங்குக் கூட்டங்களிலும் தொடர்ந்து 'பெண்களை அவதூறாகப் பேசக்கூடாது' என தொடர்ந்து சொல்லிவருகிறேன். எங்கள் கட்சி உறுப்பினர்கள், யாராவது அப்படிப் பேசினால்கூட அவர்களைக் கண்டிக்கிறோம். தொடர்ந்து செய்தால், அவர்கள்மீது உடனடியாக நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். துரையைக்கூட (சாட்டை துரைமுருகன்), என் பேச்சைக் கேட்காமல் உணர்ச்சிவசப்பட்டு அப்படிப் பேசிவிடுகிறாரே என்றுதான் கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறோம்.''

‘சாட்டை' துரைமுருகன் கைதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

‘‘வேண்டுமென்றே திட்டமிட்டுதான் அவரைக் கைது செய்திருக்கிறார்கள். பேசுவதெல்லாம் சர்வதேசக் குற்றமா என்ன? கட்சியில் அவர் இல்லாவிட்டாலும், அவரை வெளியில் எடுப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள்தான் எடுத்துவருகிறோம்.''

நீங்கள் கடுமையாகப் பேசும் ஒலிப்பதிவுகள் அடிக்கடி வெளியாகின்றன. ஒரு கட்சித்தலைவரான உங்களால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையா?

‘‘நம்பிக்கையாகப் பேசுகிறோம் ஆனால், அதை வெளியில் விட்டுவிடுகிறார்கள். உதாரணமாக, ‘மேதகு' திரைப்படம் குறித்து ஒரு ஆடியோ வெளியானது. முன்னாள் விடுதலைப்புலி ஒருவரிடம் பேசியதுதான் அது. தலைவரைப் பற்றி தவறாகப் படம் வந்துவிட்டால் அப்போதும் என்னை நோக்கித்தான் கேள்விகள் வரும். அதனால்தான், அது என்னவென்று அவரைப் பார்க்கச் சொன்னேன். அவர் ஏன் அதை வெளியில் விட்டார் என்று தெரியவில்லை. அதனால் யாரிடமும் தற்போது அலைபேசியில் பேசுவதில்லை. ஏதாவது பேச வேண்டும் என்றால் நேரில் வரச் சொல்லிவிடுகிறேன்.''

‘மீ டூ' குற்றச்சாட்டைக் கண்டுகொள்ளாமல் வைரமுத்துவைப் பாராட்டுவது குறித்து?

‘‘இந்த நூற்றாண்டில் எங்கள் இனத்துக்குக் கிடைத்த மிகப்பெரும் ஆளுமை, தமிழ்ப்புலவன். அவரை மிகப்பெரிய படைப்பாளியாக நான் பார்க்கிறேன். விமர்சனங்கள் எல்லோர்மீதும் முன்வைக்கப்படும். பெண் பேசுவதால் அது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அவர் மீது முன்வைக்கப்படுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அவர் தவறு செய்ததற்கான ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்துக்குச் சென்று அவருக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கட்டும். ஆண்டாள் குறித்து கவிப்பேரரசு பேசியபிறகுதான் அவரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்படுகிறது. காலம் காலமாகத் தமிழினத்துக்கு எந்தப் பெருமையும் இருக்கக்கூடாது என மொத்தமாக அழித்தவர்களின் திட்டமிட்ட வேலை இது.

தம்பி விஜய்யும் கூட வரி ஏய்ப்பு செய்யவில்லை. எட்டாண்டுகளாக வரி கட்டிக்கொண்டிருக்கிறார். விலக்குத் தாருங்கள் என்றுதான் கேட்டிருக்கிறார். அவருக்கு முன்பாகவும் பலர் கேட்டிருக்கிறார்கள் அது தவறேதும் இல்லையே. அந்த காரைக் கூட அவர் இன்னும் பயன்படுத்தவில்லை. இங்கிலாந்து ராணி ஓட்டிய கார் என்கிறார்கள். ஏன் அதை ஒரு தமிழன் ஓட்டக்கூடாதா?''

உங்கள் மீதான நடிகை விஜயலட்சுமியின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் குறித்து?

‘‘அதைப்பற்றி நான் துளியளவும் கவனத்தில் கொள்வதில்லை. என் மனைவிதான் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டும். அவர்களே கண்டுகொள்வதில்லை.''

தமிழக பா.ஜ.க-வின் தலைவராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து?

‘‘அண்ணாமலையைத் திட்டமிட்டுத்தான் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், அவரைவிடத் தகுதியானவர், மக்கள் செல்வாக்கு உடைய எங்கள் மாமா நயினார் நாகேந்திரன்தான். நியாயமாக அவரைத்தான் தலைவராக்கியிருக்க வேண்டும். அவருக்குத்தான் கொடுப்பார்கள் எனவும் நான் எதிர்பார்த்தேன்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism