Published:Updated:

கோபத்தில் பேசிவிடுகிறேன்... ஆனாலும் அது தவறுதான்! - சீமான் ஓப்பன் டாக்

வெற்றிபெறவில்லை என்பதைவிட வெற்றிபெறவிடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வென்றவர்களுக்கும் எங்களுக்குமான வாக்கு வித்தியாசம் அதிகமில்லை.

பிரீமியம் ஸ்டோரி
காங்கிரஸ் தலைவர்களின் தொடர்ச்சியான புகார்கள், நூறு நாள் வேலை குறித்த கருத்துகள், சைவம், வைணவத்துக்குத் திரும்ப அழைப்பு... என ‘லைம்லைட்’டிலேயே இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவரிடம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தோல்வி முதல் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான திட்டம் வரை பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்...

‘‘உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு ஒன்றிய கவுன்சிலர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லையே?’’

‘‘வெற்றிபெறவில்லை என்பதைவிட வெற்றிபெறவிடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வென்றவர்களுக்கும் எங்களுக்குமான வாக்கு வித்தியாசம் அதிகமில்லை. சில இடங்களில் நாங்கள் வெற்றிபெற்றும், ஆளும் தரப்பு வென்றதாக அறிவித்துக்கொண்டார்கள். இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளை அதிகமாகப் பிடித்திருக்கிறோம்.’’

‘‘முடிவுகளை மாற்றி அறிவித்தார்கள் எனில், தேர்தல் ஆணையத்தில் புகார் செய்திருக்கலாமே?’’

‘‘காவல்துறை எங்கள் புகாரை எடுத்துக்கொள்வதே இல்லை. மாவட்ட ஆட்சியரும் சரி, மாநில தேர்தல் ஆணையமும் சரி, எங்களைக் கண்டுகொள்வதே இல்லை.’’

கோபத்தில் பேசிவிடுகிறேன்... ஆனாலும் அது தவறுதான்! - சீமான் ஓப்பன் டாக்

‘‘ஏற்கெனவே வென்றிருந்த உங்கள் கட்சியைச் சேர்ந்த ஓர் ஒன்றியக் கவுன்சிலரும் தி.மு.க-வுக்குப் போய்விட்டாரே?’’

‘‘ஆட்சியில் இருக்கிற கட்சிக்குப் போய்விடலாம் என நினைத்துப் போயிருக்கலாம்.’’

‘‘நீங்கள் அவரைக் கண்டுகொள்ளவில்லை... அதனால்தான் போய்விட்டார் என்று சொல்லப்படுகிறதே?’’

‘‘அப்படியெல்லாம் இல்லை. ஒருமுறை பாராட்டலாம். தினமும் கூப்பிட்டுப் பாராட்டிக்கொண்டிருக்க முடியாது. அவர் மக்கள் பணியைத்தான் செய்திருக்க வேண்டும்.’’

‘‘காங்கிரஸ் கட்சியின் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாகப் பேசுவது சரியா?’’

‘‘அவர்களும்தான் தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கிப் பேசுகிறார்கள். நீங்கள் ஏன் அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதில்லை. அதேவேளையில் அரசியல் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் இழிவாகப் பேசுவதை நான் வரவேற்கவில்லை. நானே அப்படிப் பேசியிருந்தாலும் அது தவறுதான். சில நேரங்களில் கோபத்தில் அப்படிப் பேசிவிடுகிறேன். ஆனால், அவர்களுக்குத் தற்போது அரசியல் செய்ய வேறு விஷயம் இல்லை. தி.மு.கவும் பின்னாலிருந்து உசுப்பிவிடுகிறது.’’

‘‘ `சைவத்துக்கும் வைணவத்துக்கும் திரும்புங்கள்’ என சீமான் யாரை அழைக்கிறார்?’’

‘‘தமிழர்கள் யாரும் இந்துக்கள் இல்லை. வெள்ளைக்காரன் போட்ட கையெழுத்தில் உருவானதுதான் இந்து மதம். அதை நான் ஏன் ஏற்க வேண்டும்? அப்படிச் சட்டப்படி இந்துவாக்கப்பட்டவர்களைத்தான் அழைத்தேன். கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் அழைத்ததாகத் தவறாகத் தகவல் பரப்பப்படுகிறது.’’

‘‘வழிபாடு சார்ந்த விஷயங்களை சீமான் அரசியலாக முன்னெடுப்பதற்கான தேவை எங்கிருந்து வந்தது?’’

‘‘தேசிய இன மீட்சி என்பது பண்பாட்டு மீட்சியையும் உள்ளடக்கியதுதான். ஒரு வீடு கட்டும்போது நான்கு சுவர்களையும்தான் சரியாகக் கட்ட வேண்டும்.’’

‘‘சங் பரிவாரின் தூண்டுதலில்தான் நீங்கள் இது போன்ற விஷயங்களைச் செய்வதாக கார்த்தி சிதம்பரம், திருமாவளவன் உள்ளிட்ட பலர் விமர்சிக்கிறார்களே?’’

‘‘என்னை விமர்சிக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்குக் கருத்து சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சங் பரிவாருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? நான் என் சமயம் குறித்துப் பேசுகிறேன்... அவ்வளவுதான். யார் சங் பரிவாரின் ஆட்கள் எனக் காலம் பதில் சொல்லும்!’’

‘‘உங்கள் கட்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஊடுருவிவிட்டனர் என இயக்குநர் அமீர் சொல்கிறாரே?’’

‘‘அவர் பேசுவதற்கெல்லாம் நான் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. எங்கே ஊடுருவியிருக்கிறார்கள் என ஆதாரத்தோடு அவர் பேச வேண்டும். என் அளவுக்கு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வை எதிர்த்து பேசியது யார் என அவர் சொல்வாரா? அவர் மதச் சிந்தனைகொண்டவர். அந்த அடிப்படையில்தான் என்னை அப்படிப் பேசுகிறார். மொழி, இனம் எனப் பரந்துபட்ட பார்வை அவருக்கு இல்லை. அவர் தி.மு.க-வை ஆதரிக்கிறார். அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.’’

கோபத்தில் பேசிவிடுகிறேன்... ஆனாலும் அது தவறுதான்! - சீமான் ஓப்பன் டாக்

‘‘விடுதலைப்புலிகள் உங்கள்மீது கோபத்தில் இருக்கிறார்கள் என வைகோ சொல்கிறாரே..?’’

‘‘புலிகள் என்னுடன் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும் என ஆலோசனை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். வைகோ அவர்களின் கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.’’

‘‘நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசியது சர்ச்சையானதே?’’

‘‘அந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று சொல்லவே இல்லை. அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும். விவசாய, தோட்ட வேலைகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். வயது முதிர்ந்தவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து ஓய்வளிக்க வேண்டும் என்றுதான் சொன்னேன்.’’

‘‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துத்தான் போட்டியிடுமா?’’

‘‘தேர்தல் என்றாலே தனித்துத்தான் போட்டியிடுவேன். அதில் எப்போதும், எந்த மாற்றமும் இல்லை!’’

‘‘மத்தியில் இப்போது இருக்கும் ஆட்சியே தொடர வேண்டுமா... இல்லை, ஆட்சி மாற்றம் தேவை என நினைக்கிறீர்களா?’’

‘‘காங்கிரஸ் என் இனத்தின் எதிரி; பா.ஜ.க மனிதகுலத்தின் எதிரி. அதனால், இந்த ஆட்சி தொடரக் கூடாது. நிச்சயமாக ஒரு மாற்றம் தேவை. ஆனால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் பா.ஜ.க-வை வீழ்த்த முடியும்!’’

‘‘எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் நாம் தமிழர் கட்சி அந்தக் கூட்டணியில் இணையுமா?’’

‘‘தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாவது அணி அமைத்தால், நாங்கள் தேர்தலில் நிற்க மாட்டோம். அவர்களை ஆதரிப்போம். 2026 சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கான களத்தைப் பார்த்துக்கொள்வோம்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு