Published:Updated:

”அதானியை பணக்காரன் ஆக்கியதைவிட பா.ஜ.க செய்த சாதனை என்ன?”

சீமான்
பிரீமியம் ஸ்டோரி
சீமான்

- கொந்தளிக்கிறார் சீமான்...

”அதானியை பணக்காரன் ஆக்கியதைவிட பா.ஜ.க செய்த சாதனை என்ன?”

- கொந்தளிக்கிறார் சீமான்...

Published:Updated:
சீமான்
பிரீமியம் ஸ்டோரி
சீமான்

ஓய்வுக்கும் சீமானுக்கும் இடைவெளி அதிகம்... வேறு வழியில்லாமல் இப்போது வீட்டில் ஓய்வெடுத்துவருகிறார் சீமான். கடந்த வாரம் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மயங்கி விழுந்த சீமான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது டாக்டர்கள் அறிவுறுத்தியதாலேயே இந்த ஓய்வு சாத்தியமாகியிருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி தம்பிகள் வரை தொடர் நல விசாரிப்புகளால் பிஸியாக இருந்தவரிடம் அவரின் உடல்நலன், தி.மு.க அரசின் செயல்பாடுகள், இலங்கை நிலவரம், பெட்ரோல், டீசல் விலையேற்றம் எனப் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்...

”அதானியை பணக்காரன் ஆக்கியதைவிட பா.ஜ.க செய்த சாதனை என்ன?”

``உடல்நிலை எப்படி இருக்கிறது... முதல்வர் தொடங்கி பலரும் விசாரித்திருக்கிறார்கள், என்ன சொன்னார்கள்?”

``வழக்கமாக நான் இரவு உணவு எடுத்துக்கொள்வதில்லை. அன்று கட்சித் தம்பிகள் காத்திருக்கிறார்கள் என்பதால் காலை உணவையும் சாப்பிடாமல் அவசரமாகக் கிளம்பிவிட்டேன். வெயிலால் உடல் வியர்த்து, நீரிழப்பும் ஏற்படவே மயக்கம் வந்துவிட்டது, அவ்வளவுதான். அதுவும் உடனடியாகச் சரியாகிவிட்டது. முதல்வரிடம் விஷயத்தைச் சொன்னேன்... ‘கவனமாக இருங்கள் சீமான்’ என்றார். அன்புமணி, ‘எந்த ஆண்டும் இல்லாத வகையில் வெப்பம் தகிக்கிறது. உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள்’ என்றார். தவிர, தலைவர்கள் பலரும் நலம் விசாரிக்கிறார்கள்.”

``இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``இது போன்ற சூழல் வரும் என்பது முன்பே கணித்ததுதான். ஆனால், இவ்வளவு சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. சிங்கள ராணுவ வீரன் ஒருவன், ‘பிரபாகரன் கொஞ்சம் இடத்தைத்தான் கேட்டார். நீங்கள் கொடுக்கவில்லை... ஆனால், மொத்த நாட்டையும் சீனா எடுத்துக்கொண்டுவிட்டது’ என்று சொல்லும் வீடியோ வைரலாகிக்கொண்டிருக்கிறது. அதுதான் உண்மை. சீனா தன்னுடைய இன்னொரு மாகாணமாக இலங்கையை ஆக்கிரமித்துவிட்டது. போர்ச்சூழலிலும் ஏகப்பட்ட கடன்களை வாங்கிக் குவித்தார்கள். எவ்வளவு நாள்கள்தான் கடனை வாங்கியே சமாளிக்க முடியும்? இந்தியாவிலும் அதே சூழல்தான் உருவாகிக்கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை ஏற்றத்தை நாம் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. அதனால், அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தின் விலையும் அதிகரிக்கும். அந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் மக்கள் வீதிக்கு வருவார்கள்.’’

”அதானியை பணக்காரன் ஆக்கியதைவிட பா.ஜ.க செய்த சாதனை என்ன?”

“ `நாட்டு மக்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இது போன்ற விலையேற்றம் அவசியம்’ என பா.ஜ.க தரப்பில் சொல்லப்படுகிறதே?’’

``ஒரு நாட்டின் குடிமக்களிடமிருந்து வரி வசூலித்து மட்டுமே பொருளாதாரத்தைப் பெருக்கிவிட முடியும் என ஆட்சியாளர்கள் கருதினால் அதைவிட பெரிய பைத்தியக்காரத்தனம் வேறு என்ன இருக்க முடியும்... எல்லாவற்றையும் தனியாருக்குத் தாரை வார்த்து, அதானியை நாட்டின் முதல் பணக்காரன் ஆக்கியதைவிட பா.ஜ.க ஆட்சியில் நிகழ்ந்த சாதனை என்ன? பா.ஜ.க சொத்து வரியைப் பேசுகிறது... தி.மு.க பெட்ரோல், டீசல் விலை உயர்வைப் பேசுகிறது. அவரவர்கள் வசதிக்குப் பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்!’’

``அமைச்சர் நேரு, ‘சொத்து வரி கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 300 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. ஆனால், இப்போது 100 முதல் 150 சதவிகிதம் அதுவும், வெறும் 7 சதவிகித வீடுகளுக்கு மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறாரே..?’’

`` `அந்த ஆட்சியில் அப்படி இருந்தது, எங்கள் ஆட்சியில் இப்படி இருக்கிறது’ என்று சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது. மக்களுக்கு எந்தச் சிரமமும் இல்லாமல் ஆட்சி செய்வதுதான் நல்ல ஆட்சியாளருக்கு அழகு. இந்த வரி விதிப்பால் வீட்டு வாடகை அதிகரித்து ஏழை, நடுத்தரவர்க்க மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். அது குறித்த அக்கறையெல்லாம் இவர்களுக்குக் கொஞ்சம்கூட இல்லை. ‘நாங்கள் நல்ல ஆட்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்’ என்று இவர்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்வார்களா?’’

”அதானியை பணக்காரன் ஆக்கியதைவிட பா.ஜ.க செய்த சாதனை என்ன?”

``ஆனால், தமிழ்நாட்டிலும், மாநிலத்தைத் தாண்டியும் தி.மு.க ஆட்சிக்குப் பாராட்டுகள் குவிகின்றனவே?’’

``மக்கள் வீதிக்கு வந்து பாராட்டுகிறார்களா... போராட்டங்கள் இல்லாத பூமியாகத் தமிழ்நாடு மாறிவிட்டதா... சொல்லுங்கள்?

ஆட்சியாளர்கள் பாராட்டைக் கேட்டு வாங்குகிறார்கள் என்பதுதான் உண்மை. அரசியல், பொருளாதாரம், இலக்கியம் எனப் பல்வேறு துறைகளிலும் ஆளுமைகளாக இருப்பவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு குழுவிலும் பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். நடுநிலையாளர்களாக, பொதுமனிதர்களாக இருந்து கேள்வி கேட்ட அவர்கள், அரசை எதிர்த்து கருத்து சொல்ல முடியாமல் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் பாராட்டும் செய்திகளைப் பார்த்து சிரித்துக்கொள்ளவேண்டியதுதான்!’’

``கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு சதவிகிதத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க அந்த இடத்தைப் பிடித்துவிட்டதே?’’

``உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் மாநிலத் தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. தி.மு.க-தான் பா.ஜ.க-வை வளர்த்துவிடுவதற்காக இப்படியொரு வேலையைத் திட்டமிட்டே செய்கிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது இது போன்று யார், எத்தனை சதவிகித வாக்குகள் பெற்றார்கள் என்ற பட்டியல் வெளியாகவில்லையே...

அப்போது நாங்கள் 12 சதவிகித வாக்குகள் பெற்றிருந்தோம். நாங்கள் ஒன்றுமில்லை என்று காட்டுவதற்காகத்தான் இந்தப் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், நாங்கள் மூன்றாம் இடத்துக்காகப் போட்டியிடவில்லை. முதல் இடத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம்!’’

”அதானியை பணக்காரன் ஆக்கியதைவிட பா.ஜ.க செய்த சாதனை என்ன?”

“ஆனால், பா.ஜ.க-வை தமிழகத்தில் வளர்த்துவிடுவதற்கான அவசியம் தி.மு.க-வுக்கு என்ன இருக்கிறது?’’

``கோட்பாட்டுரீதியாக இந்திய தேசியம் தி.மு.க-வுக்கு பிரச்னை இல்லை. தமிழ்த் தேசியத்தைத்தான் எதிரியாக நினைக்கிறார்கள். இந்துத்துவா என்கிற கோட்பாட்டை பா.ஜ.க முன்னெடுக்கிறது. ‘எங்கள் கட்சியில் 90 சதவிகிதம் இந்துக்கள் இருக்கிறார்கள்’ என்று தி.மு.க பேசுகிறது. அதனால், இரு தரப்புக்கும் ஒத்துப்போய்விடுகிறது. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில், தி.மு.க கவுன்சிலர்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களித்ததாக அண்ணாமலையே சொல்கிறார். இப்படி தி.மு.க-வினர் பா.ஜ.க-வுக்காக பல விஷயங்களில் விட்டுக்கொடுக்கிறார்கள். ‘திராவிட மாடல்’ என்கிற வார்த்தையையெல்லாம் நான் வந்த பிறகுதான் பயன்படுத்துகிறார்கள். சல்மான் கான், அமீர் கான் போன்றவர்கள் மாடலாக வருவதுபோல, இதுவும் ஒரு ‘மாடல்’ மட்டும்தான்!’’

``தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு 68,375 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 2,05,802 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய அளவுக்கு 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்று முதல்வர் கூறியிருக்கிறாரே?’’

“இந்த முதலீடுகளையெல்லாம் வெளிநாடுகளுக்குப் போய் கொண்டு வரவேண்டிய அவசியமே இல்லை. இவர்கள் வைத்திருக்கும் பணத்தை வெளியில் எடுத்தாலே போதும். முன்னாள், இந்நாள் அமைச்சர்களிடம் இல்லாத பணமா வெளிநாட்டில் இருக்கிறது?

தமிழ்நாட்டை ஆறு லட்சம் கோடி ரூபாய் கடனில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள். எந்தத் திட்டத்துக்கு, எவ்வளவு செலவு செய்யப்பட்டது, இதுவரைக்கும் எந்தத் துறையில் எவ்வளவு இழப்பு என்று வெள்ளை அறிக்கை வெளியிடுவார்களா... இவ்வளவு கடனை வைத்துக்கொண்டு மக்கள் கேட்காத இலவசங்களை ஏன் அறிவிக்க வேண்டும்?

”அதானியை பணக்காரன் ஆக்கியதைவிட பா.ஜ.க செய்த சாதனை என்ன?”

``உங்களுக்குச் சரி... ஆனால் விளிம்புநிலை மக்கள் வளர்ச்சியடைய இலவச லேப்டாப், சைக்கிள் உள்ளிட்டவை அவசியம்தானே?’’

``இது அரசின் வேலையல்ல. மக்களுக்கு நல்ல கல்வி, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற சம்பளம் கொடுக்க வேண்டியதுதான் அரசின் வேலை. தரமான கல்வியையும் சரியான மருத்துவத்தையும் கொடுத்துவிட்டாலே பல்லாயிரம் கோடி பணம் மிச்சமாகிவிடும். எந்த வரியையும் உயர்த்தவேண்டிய அவசியமில்லை.’’

``எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘ஒரே நாடு... ஒரே தேர்தல் மூலம் 2024-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்’ என்கிறார்... நீங்கள் அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். காரணம், இந்தியா அடிப்படையில் ஒரு நாடே இல்லை. பல்வேறு மாநிலங்கள் இணைந்த பிரதேசம். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவுகளைக் குறைக்கலாம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. பைத்தியக்காரத்தனத்தின் உச்சம்தான் இது போன்ற சிந்தனை. எடப்பாடி ஐயா ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகப் பேசிக்கொண்டிருக்கிறார்... அவ்வளவுதான்!’’

“நீட் ஆதரவு, ராம ராஜ்ஜியம் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துகளை ஆளுநர் பேசும்போது சீமான் அமைதியாகவே இருப்பது ஏன்?’’

``அது போன்ற விஷயங்களைப் பேசுவதற்காகத்தானே அவர் இங்கு அனுப்பப்பட்டிருக்கிறார். ஆனால், காதில் பஞ்சை வைத்துக்கொண்டு படுத்திருப்பவர்களிடம் நான் பேசி என்ன ஆகப்போகிறது? தேர்தல் ஒன்றுதான் நம் கையில் இருக்கிற ஒரே வாய்ப்பு. ஆட்சி அதிகாரம் நம் கையில் கிடைக்கும்போது பார்த்துக்கொள்ளலாம். அதை விட்டுவிட்டு ஆளுநர் மாளிகைக்கு முன்பாகப் போராடி என்ன ஆகப்போகிறது?!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism