Published:Updated:

பேரறிவாளன் நிரபராதி இல்லையென்றால் மோடி, அமித் ஷா மட்டும் நிரபராதிகளா? - சீமான் காட்டம்

சீமான்
பிரீமியம் ஸ்டோரி
சீமான்

வெறும் அறிவிப்புகளைச் செய்துவிட்டு பெரிய சாதனை என்கிறார்கள். செய்தி அரசியல் மட்டும்தான் இவர்களிடம் இருக்கிறது.

பேரறிவாளன் நிரபராதி இல்லையென்றால் மோடி, அமித் ஷா மட்டும் நிரபராதிகளா? - சீமான் காட்டம்

வெறும் அறிவிப்புகளைச் செய்துவிட்டு பெரிய சாதனை என்கிறார்கள். செய்தி அரசியல் மட்டும்தான் இவர்களிடம் இருக்கிறது.

Published:Updated:
சீமான்
பிரீமியம் ஸ்டோரி
சீமான்

பேரறிவாளன் விடுதலை, தி.மு.க அரசின் ஓராண்டு ஆட்சி, `திராவிட மாடல்’ குறித்த கேள்விகளுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, அவரது கட்சி தலைமையகத்தில் சந்தித்தோம். அவரது பேட்டி இங்கே...

“பேரறிவாளன் விடுதலையான பிறகு நீங்கள் பேசிய பேச்சு சர்ச்சை ஆகியிருக்கிறதே?”

“அந்த ஏழு பேரும் சிறையில் இருப்பதையே தமிழ்ச் சமூகம் மறந்திருந்தது. மீனவர் நலனுக்காக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தியதற்காக என்னை வேலூர் சிறையில் அடைத்தார்கள். அங்கு நான் இருந்தது தனிச் சிறை. பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் இருந்தது தனிச் சிறை. வெளியே போகும்போது அனுமதி கேட்டு அவர்களைச் சந்தித்தேன். என்னைச் சந்திக்க வந்தவர்களிடமும் `முதலில் தம்பிகளைப் பாருங்கள்’ என நான் சொன்ன பிறகுதான் நிறைய பேருக்கு அவர்கள் அங்கே இருக்கிறார்கள் என்பதே தெரிந்தது. அதைத்தான் இப்போது சொன்னேன். இதிலென்ன சர்ச்சையும் தவறும் இருக்கிறது?”

“ `பேரறிவாளன் ஒன்றும் நிரபராதி இல்லை’ என்கிறார் அண்ணாமலை. காங்கிரஸ் இந்த விடுதலையை எதிர்த்து அறப்போராட்டம் நடத்துகிறது. இதையெல்லாம் எப்படிப் பார்க்கிறீர்கள்?

“காங்கிரஸ், பா.ஜ.க இரு கட்சிகளுக்கும் கொள்கை வேறுபாடு கிடையாது. பேரறிவாளனிடம் வாக்குமூலம் வாங்கிய தியாகராஜனே, ‘அவர் சொன்னதை நான் பதிவு பண்ணாமல் விட்டுட்டேன்’ என்று சொல்லியிருக்கிறார். நிரபராதி இல்லை என்று சொன்னால் குற்றவாளி என்பீர்களா... குஜராத் கலவரத்தின்போது முதல்வர் யார்... மோடிதானே... அவருக்கே தெரியாமல் பல மாதங்கள் கலவரம் நடந்து பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டிருப்பார்களா... அந்தக் கலவரத்தில் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் சம்பந்தம் இல்லையா... அவர்களை நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்ததே... அப்படியென்றால் மோடி, அமித் ஷா மட்டும் நிரபராதிகளா... காங்கிரஸையும் பா.ஜ.க-வையும் மானங்கெட்டுப் போய், இந்த திராவிடக் கும்பல் தோளில் தூக்கிச் சுமக்கின்றன. அதனால்தான் அவர்களது வண்டி ஓடுகிறது!”

பேரறிவாளன் நிரபராதி இல்லையென்றால் மோடி, அமித் ஷா மட்டும் நிரபராதிகளா? - சீமான் காட்டம்

“ஓராண்டு தி.மு.க ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“வெறும் அறிவிப்புகளைச் செய்துவிட்டு பெரிய சாதனை என்கிறார்கள். செய்தி அரசியல் மட்டும்தான் இவர்களிடம் இருக்கிறது... செயல் அரசியலோ, சேவை அரசியலோ கிடையாது. காவல் நிலையத்தில், பேருந்திலெல்லாம் முதல்வர் ஆய்வு செய்வார். அது திடீர் ஆய்வாம். ஆனால் இவருக்கு முன்பு ஊடகத்தினரெல்லாம் அங்கிருப்பார்களாம்... எல்லாம் நாடகம். ஓராண்டு சாதனை என்றால் மக்களுக்குத் தானாகத் தெரிய வேண்டும். முழுப்பக்க விளம்பரம் கொடுத்து, தெரியவைக்கவேண்டிய சூழல்தானே இங்கு இருக்கிறது!”

“ ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று முன்வைக்கிறார்களே?”

“இதுவா திராவிட மாடல்... கல்வி, மருத்துவம், மின் விநியோகம், சாலைப் பராமரிப்பு, வரி, தேர்வு எல்லா உரிமையையும் விட்டுக் கொடுத்துவிட்டார்கள். இதோடு, `ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல் எல்லாம் வரவிருக்கின்றன. எதை எதிர்த்தீர்கள் நீங்கள்... இந்தியாவிலேயே மத்திய அரசில் 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒரு கட்சி கூட்டணியில் இருந்தது என்றால் அது தி.மு.க-தான். அப்போதெல்லாம் சாதிக்காமல், உரிமையைப் பெறாமல் இப்போது கூப்பாடு போடுகிறார்கள். எல்லாம் மக்களை ஏமாற்றும் நாடகம்.”

“சமூகநீதியை முன்னிறுத்தித்தானே ஆளும் அரசு பேசுகிறது?”

“இவர்களா... கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரே, ‘தலையில் செருப்பைச் சுமந்த சமூகம்’ என்று பேசுகிறார். எவ்வளவு ஆணவமான பேச்சு. இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர எங்கேயும் பெண்கள் படிக்காததுபோல், ‘நாங்கள்தான் பெண்களைப் படிக்கவைத்தோம்’ என்கிறார்கள். நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற கேரளாவில் எங்கே திராவிட மாடல் இருக்கிறது... இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சமூகநீதி இல்லையா.... அவர்கள் பேசாத இடத்தில்தான் மாயாவதி, மம்தாவெல்லாம் முதலமைச்சர் ஆகியுள்ளனர். படிக்கவைத்தது காமராஜர். குடிக்கவைத்தது திராவிட மாடல்.”

“நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து மாற்றுக் கட்சியை நோக்கிச் செல்கிறார்களே?”

“நான் நீக்கியவர்கள்தானே போகிறார்கள்... விசுவாசமில்லாத துரோக சிந்தனை கொண்டிருப்பவர்களை அவர்கள் அடையாளம் கண்டு அழைத்துச் செல்வது எனக்கு மகிழ்ச்சிதான். ‘கட்சிக்குப் பயன்படுகிற ஒரு கூட்டம் இருக்கும். கட்சியைப் பயன்படுத்துகிற ஒரு கூட்டம் இருக்கும். இதைக் கண்டுபிடித்தால்தான் வெல்ல முடியும்’ என்று பெரியார் சொல்வார்.”

“ ‘சசிகலா - அ.தி.மு.க இணைய வேண்டும்’ என்று பேசியிருந்தீர்கள். அது குறித்து அவர்களிடம் எப்போதாவது பேச்சுவார்த்தை நடத்தினீர்களா?”

“சாத்தியப்படுத்த வேண்டுமென்றால் அவர்கள்தான் விரும்ப வேண்டும். அம்மா மட்டும் விரும்பிப் பயனில்லை. இது இன்னொரு கட்சி விவகாரம். அதில் நாம் தலையிட முடியாது.”

“உள்ளாட்சித் தேர்தல்களில் நா.த.க-வுக்கு எதிராக விஜய் முன்னிறுத்தப்படுவதாகச் சொல்லப்பட்டதே, அது எந்த அளவுக்கு உண்மை?”

“என்னையும் தம்பியையும் மோதவிட்டுப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களின் வதந்திதான் அது. பிரித்தாளும் சூழ்ச்சி திராவிடக் கட்சிகளுக்கு கைதேர்ந்த கலையாயிற்றே... ஒன்று தம்பி விஜய், ‘அண்ணன் எனக்குப் போட்டி’ என்று சொல்ல வேண்டும். அல்லது நான் சொல்ல வேண்டும். எனக்கு இந்திய, திராவிடக் கட்சிகள்தான் எதிரி. இப்போதைக்கு பா.ஜ.க, தி.மு.க ஆட்சியில் இருக்கின்றன. கட்சியே ஆரம்பிக்காதவரைப் போட்டி என்றால் எப்படி... போட்டியெல்லாம் இல்லாமல், அண்ணாவோடு எம்.ஜி.ஆர் சேர்ந்ததுபோல என்னோடு தம்பி வந்தார் என்றால் மகிழ்ச்சிதான்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism