Published:Updated:

பா.ஜ.க-வினரின் செயல் அநாகரிகமானது, தி.மு.க-வினரின் செயல் அதைவிட அநாகரிகமானது! - பளீர் சீமான்

சீமான்
பிரீமியம் ஸ்டோரி
சீமான்

பா.ம.க என்னை எதிரியாக கருதலாம்!

பா.ஜ.க-வினரின் செயல் அநாகரிகமானது, தி.மு.க-வினரின் செயல் அதைவிட அநாகரிகமானது! - பளீர் சீமான்

பா.ம.க என்னை எதிரியாக கருதலாம்!

Published:Updated:
சீமான்
பிரீமியம் ஸ்டோரி
சீமான்

கட்சி மேடையில் தொடர்ச்சியாக ஆக்ரோஷம், செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் மோடி படம் வைக்காதது தொடர்பாக தி.மு.க மீது விமர்சனம், பேனா சிலை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் வாக்குவாதம்... என மீண்டும் தமிழ்நாடு அரசியல் களத்தின் லைம்லைட்டுக்கு வந்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவரிடம் தற்போதைய அரசியல் சூழல் குறித்துச் சில கேள்விகளை முன்வைத்தேன்...

``திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேயத்தில் நடந்த கூட்டத்தில், அப்படி என்னதான் நடந்தது?’’

``அங்கே எங்கள் பொதுக்கூட்டத்துக்காகக் கட்சிக்கொடியை ஏற்றும்போதே அந்த ஊரைச் சேர்ந்த சிலர் பிரச்னை செய்தார்கள். அப்போதே டி.எஸ்.பி செந்தில்குமாரிடம் கட்சித் தம்பிகள் புகாரளித்திருக்கிறார்கள். தொடர்ந்து கூட்டம் நடக்கும்போதும் தகராறு செய்தார்கள். காவல்துறையினர் உடனே அவர்களைக் கைதுசெய்து, கூட்டம் முடிந்தவுடன் வெளியே விட்டிருந்தால் எந்தப் பிரச்னையும் ஏற்பட்டிருக்காது. ஆனால், காவல்துறையினர் அமைதியாக இருந்தார்கள். அனைத்துக்கும் காரணம் டி.எஸ்.பி செந்தில்குமார்தான். எங்கள் கூட்டத்தில் இது போன்ற சூழல் ஏற்பட வேண்டுமென ஆளுங்கட்சியினர் உள்ளிட்ட பலர் விரும்புகிறார்கள். இது அவசியமற்றது.’’

பா.ஜ.க-வினரின் செயல் அநாகரிகமானது, தி.மு.க-வினரின் செயல் அதைவிட அநாகரிகமானது! - பளீர் சீமான்

``பா.ம.க-வினர் பிரச்னை செய்ததாகத்தானே செய்திகள் வந்தன?’’

``எனக்கும் அப்படித்தான் செய்தி வந்தது. எந்தக் காலத்திலும் பா.ம.க-வையோ, ராமதாஸ் ஐயாவையோ விட்டுக்கொடுத்ததும் இல்லை, எதிர்த்துப் பேசியதும் இல்லை. அது அவர்களுக்கே தெரியும். நான் அவர்களுக்கு எதிரியா... எதிர்க்க வேண்டிய எதிரி எங்கேயோ இருக்கும்போது எங்களுக்குள் இது தேவையில்லை என்றுதான் கடந்து போக நினைக்கிறேன். ஒருவேளை பா.ம.க என்னை எதிரியாகக் கருதலாம். அது அவர்களின் கட்சி நிலைப்பாடு. அதில் நான் ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால், நான் ஒருபோதும் அவர்களை எதிரியாகக் கருதப்போவதில்லை. மருத்துவர் ஐயாவின்மீதும், அன்புமணி ஐயாவின்மீதும் வைத்திருக்கும் மரியாதையோ, அன்போ குறையப்போவதில்லை.’’

``தி.மு.க-வை இந்த விஷயத்தில் நீங்கள் குற்றம்சாட்டக் காரணம் என்ன?’’

``பா.ம.க-வைச் சேர்ந்தவர்கள்தான் பிரச்னை செய்தார்கள். ஆனால், அந்தத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ஜோதி அதே சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் நேரடியாக தி.மு.க-வினரை ஈடுபடுத்தினால் பிரச்னை என்பதற்காக, இந்தத் தம்பிகளைத் தூண்டிவிட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது.’’

``செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமரின் படம் இடம்பெறாததைக் கண்டித்த சீமான், பிரதமரின் படத்தை வலுக்கட்டாயமாக அதில் ஒட்டிய பா.ஜ.க-வினரைக் கண்டிக்கவில்லையே?’’

`` `சதுரங்க விளையாட்டை நான் வந்து தொடங்கிவைக்கிறேன்’ என்று பிரதமர் வந்து இவர்களிடம் கேட்கவில்லை. இவர்கள்தான் அவரை அழைத்தார்கள். பகையாளியாக இருந்தாலும், பண்பாட்டோடு நடத்தி அனுப்புவதுதான் தமிழர் மரபு. ஆனால், அவருடைய படம் இல்லாமல் பல்லாயிரம் பதாகைகளை ஒட்டியிருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான், பா.ஜ.க-வினர் அவற்றின்மீது பிரதமரின் படத்தை ஒட்டவேண்டிய சூழல் வருகிறது. விழாவுக்கு அழைத்துவிட்டு, அவர்களின் தலைவரைச் சிறுமைப்படுத்துவதை அவர்கள் எப்படி ஏற்பார்கள்... மோடியின் படத்தை பா.ஜ.க-வினர் ஒட்டியது அநாகரிகமான செயல் என்றால், தி.மு.க-வினரின் செயல்கள் அதைவிட அநாகரிகமானவை. பிரதமரை எதிர்க்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டால், சந்திரசேகர ராவ் மாதிரி, மம்தா பானர்ஜி மாதிரி முழுமையாக எதிர்க்க வேண்டும். ஆனால், இவர்களே நலத் திட்டங்களைத் தொடங்கிவைக்கவும், விளையாட்டுப் போட்டியைத் தொடங்கிவைக்கவும் அழைத்துவிட்டு, உரிய மரியாதை கொடுக்காமல் நடந்துகொள்வது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.’’

பா.ஜ.க-வினரின் செயல் அநாகரிகமானது, தி.மு.க-வினரின் செயல் அதைவிட அநாகரிகமானது! - பளீர் சீமான்

`` `எங்களிடம் வாய்க்கொழுப்பைக் காட்டினால் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும்’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உங்களைக் கடுமையாக எச்சரித்திருக்கிறாரே?’’

``லட்சக்கணக்கான துப்பாக்கிகளைக் கடந்துபோனவன் நான். அவர் ஒரு பரிதாபம். என்னை எச்சரித்து அவர் என்ன செய்யப்போகிறார்... கடலுக்குள் ‘பேனா நினைவுச்சின்னம்’ வைப்பது தொடர்பாக அவரின் நிலைப்பாடு என்ன என்பதை மட்டும் அவர் பேசட்டும்.’’

`` `கலைஞருக்கு பேனா வடிவிலான நினைவுச்சின்னம் வைப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனச் சொல்பவர்களின் டி.என்.ஏ-வைப் பரிசோதிக்க வேண்டும்’ என்கிறாரே கே.எஸ்.அழகிரி?’’

``ஆமாம்... ஆனால், நினைவுச்சின்னம் வேண்டும் என்று சொல்பவர்களின் மரபணுவைத்தான் முதலில் பரிசோதிக்க வேண்டும். யார் இந்த இனத்துக்கு எதிரான சிந்தனைகொண்டவன், யார் என் இனம் சாகும்போது சகித்துக்கொண்டிருந்தவன் என்பது எனக்குத் தெரிய வேண்டும். அதற்கு அது நிச்சயமாக உதவும். குறிப்பாக ஐயா அழகிரியின் மரபணுவை அவசியமாகச் சோதனை செய்ய வேண்டும்.’’

``75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடியை பா.ஜ.க., தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் முகப்புப் படமாக வைத்திருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியினர் வைப்பீர்களா?’’

``வைக்கலாம். இந்தியா என் தேசம்தான். பாரத நாடு பைந்தமிழர் நாடுதான். அண்ணல் அம்பேத்கரே அதை உறுதிசெய்திருக்கிறார். ஆனால், தேசியக்கொடியை வைத்துக் கொண்டாட வேண்டும் என்கிற உணர்வை எங்களுக்கு யார் தந்திருக்க வேண்டும்... `எனக்கொரு பிரச்னை என்றால் என் நாடு நிற்கும்’ என்கிற நம்பிக்கையை வளர்த்திருக்கவேண்டியது யார் பொறுப்பு... எங்கள் மீனவர்கள் 850 பேர் செத்து விழுந்தபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் செத்தபோது, எங்கள் விவசாயிகள் 200 பேர் செத்து விழுந்தபோது... இந்த நாடு எங்களுக்கு என்ன செய்தது... சொந்த நாட்டுக்குள்ளேயே காவிரி நதி நீருக்காக, முல்லைப்பெரியாறு நீருக்காகப் போராடவேண்டியிருக்கிறதே... துணியாலான ஒரு கொடியில் ஒன்றுமே இல்லை. கொள்கை, கோட்பாட்டில் இருக்க வேண்டும். சகோதரத்துவம், சமத்துவம், வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளில் இருந்து ஒரு பயனுமில்லை. வெள்ளைக்காரன் இந்த நாட்டை ஆண்டபோது விடுதலைக்காகப் போராடியவர்கள் இன்று பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இருக்கிறார்கள். ஆனால், விடுதலைக்குப் போராடாத ஆர்.எஸ்.எஸ் இங்கிருக்கும் இஸ்லாமியர்களையும் அங்கே போகச் சொல்கிறது.’’

``ஆனால், `அந்தமான் சிறையில் 10 ஆண்டுகள் தனிமைச் சிறையிலிருந்து நாட்டுக்காகப் போராடியிருக்கிறார் சாவர்க்கர். அவரை எதிர்ப்பவர்கள் ஒரு நாளாவது தனிமைச் சிறையில் இருக்க முடியுமா...’ என்கிறாரே ஆளுநர் தமிழிசை?’’

``பேருக்கு முன்னாள் ஒரு `வீர’த்தைப் போட்டால் அவர் வீரசாவர்க்கர் ஆகிவிடுவாரா... எத்தனை முறை மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்திருக்கிறார் அவர். அந்தக் கடிதத்தை நான் வெளியிடவா... பகத் சிங், சாவர்க்கர் இரண்டு பேர் எழுதிய கடிதங்களைப் படிப்போம். எது தேசப்பற்று, யார் விடுதலைப் போராளி என்று முடிவுக்கு வருவோம். பிரிட்டிஷாரிடம் எனக்கு ஊக்கத்தொகை கொடுங்கள் எனக் கேட்டவர் சுதந்திரப் போராட்ட வீரரா?’’

``5ஜி ஏலத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றனவே?’’

``அரசு நடத்தும் பி.எஸ்.என்.எல்-க்கு இப்போதுதான் 4ஜி வருகிறது. ஆனால், அம்பானி, அதானிக்குச் சொந்தமான தனியார் நிறுவனங்களுக்கு 5ஜி கொடுத்துவிட்டார்கள். அதுவும் குறைவான தொகைக்கு. இது இழப்பு, ஊழல் மட்டுமல்ல. இந்த நாட்டு மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம்.’’

`` `பெரியாரின் சிலையை என்றைக்கு உடைத்து அப்புறப்படுத்துகிறோமோ, அன்றைக்குத்தான் இந்துக்களுக்கான உண்மையான எழுச்சி நாள்’ என்று ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``கருத்தியலால், கோட்பாட்டால் புரிதல் வராமல், பெரியாரின் சிலையை உடைத்தால்தான் எழுச்சி வரும் என்றால் அந்த அளவுக்குத்தான் இந்துக்கள் இருக்கிறார்களா... முதலில் கனல் கண்ணன் இந்துவா, அவர் எப்போது இந்துவானார்?’’

``சோழர்களின் பெருமைகளைத் தொடர்ச்சியாகப் பேசிவருகிறீர்கள்... `பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

``வைரமுத்து அந்தத் திரைப்படத்திலிருந்து வெளியேறியதிலிருந்தே எனக்குப் பெரிய ஆர்வம், ஈடுபாடு இல்லை. அதைப் பற்றிப் பேசவும் எனக்கு விருப்பமில்லை!’’