அலசல்
சமூகம்
Published:Updated:

“முதல்வர் ஸ்டாலின் என் அண்ணன்... எங்களுக்குள் நடப்பது அண்ணன், தம்பிச் சண்டை”

சீமான்
பிரீமியம் ஸ்டோரி
News
சீமான்

- திடீர்ப் பாசம் காட்டும் சீமான்!

ராஜீவ் கொலை வழக்கில் பல்லாண்டுகளாகச் சிறையில் இருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். “ஐயா பழ.நெடுமாறன், வைகோ, ராமதாஸ், அண்ணன் திருமாவளவன், கொளத்தூர் மணி எனப் பல்வேறு தலைவர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள், நீதியரசர் கிருஷ்ணய்யர், தடா சந்திரசேகர் போன்றோரின் பங்களிப்பு, என்னைப் போன்றவர்களின் முன்னெடுப்பு என எல்லாமும் சேர்ந்துதான் இந்த விடுதலையைச் சாத்தியப்படுத்தியிருக்கின்றன’’ என்றவரிடம்எழுவர் விடுதலை, பொது சிவில் சட்டம், சி.ஐ.ஏ உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினோம்...

```ஏழு தமிழர் விடுதலை விவகாரத்தில், `தேர்தல் அறிக்கையில் சொன்னபடி செய்துவிட்டோம்’ என்று தி.மு.க சொல்லியிருக்கிறதே?’’

``அதெல்லாம் நாடகம். தேர்தல் அறிக்கையில், `நீட்டையும் மதுவையும் ஒழிப்போம்’ என்றுகூடத்தான் தி.மு.க சொன்னது. சொன்னபடி ஒழித்துவிட்டார்களா என்ன... அரசே இதற்கான முழு முயற்சிகளைச் செய்திருந்தால், அவர்களுடைய வெற்றியாகக் கருதலாம். ஆனால், இது முழுக்க முழுக்க எங்களின் (ஏழு பேரின்) சட்டப் போராட்டத்தால் கிடைத்த வெற்றி. கலைஞர் முதல்வராக இருந்தபோது, ‘அக்கா நளினியின் விடுதலையில் வி.ஐ.பி-க்களுக்குப் பாதுகாப்பில்லை’ எனத் தடுத்த தி.மு.க-வினர், இந்த ஆட்சியில் எதிர்க்கவில்லை. அந்த ஒரு விஷயத்துக்காக வேண்டுமானால் அவர்களைப் பாராட்டலாம். ஆனால் இப்போதும்கூட, வெளியில் வந்த உடனேயே, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகிய நால்வரையும் திருச்சி, சிறப்பு முகாமுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே, 15 மணி நேரத்துக்கும் மேலாக அவர்களுக்கு எந்தவித அறையும் ஒதுக்கீடு செய்யாமல், ஓய்வெடுக்க விடாமல் விடிய விடிய நாற்காலியிலேயே அமரவைத்திருக்கிறார்கள். அது மிகவும் கண்டனத்துக்குரியது. அவர்கள் தங்குவதற்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும். அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்வதற்குத் தேவையான உதவிகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.’’

“முதல்வர் ஸ்டாலின் என் அண்ணன்... எங்களுக்குள் நடப்பது அண்ணன், தம்பிச் சண்டை”

`` `கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும்’ என்கிற கோரிக்கையை பிரதமர் மோடியின் முன்பு முதல்வர் ஸ்டாலின் முன்வைத்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``அதை நான் வரவேற்கிறேன். ஆனால், இவர்கள் செய்த துரோகத்தையும் இந்த நேரத்தில் பேசாமல் இருக்க முடியாது. இந்திரா காந்தி கல்வியைப் பொதுப்பட்டியலுக்குக் கொண்டுபோனபோது அதை எதிர்த்து போராடி உரிமையைப் பெறத் தவறிவிட்டது இவர்கள்தானே... அது போகட்டும், பதினெட்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்திய ஆட்சியில் பங்கெடுத்தார்களே, அப்போது ஏன் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரக் குரல் எழுப்பவில்லை.... இப்போது எங்களைப் போன்றவர்கள் தொடர்ச்சியாக இதற்காகக் குரல் கொடுத்து, அது மக்கள் மத்தியில் பேசுபொருளாவதால் அவர்களுக்கும் பேசவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.’’

``தமிழ்நாடு, கேரளா, டெல்லி என பா.ஜ.க ஆளாத மாநில முதல்வர்களுக்கும், ஆளுநர்களுக்குமான மோதல் நாளுக்குள் நாள் உச்சத்தை அடைவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``ஆளுநர்களைவைத்து ஒன்றிய அரசு, மாநில அரசுகளை உளவு பார்க்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஐயா கலைஞர், அம்மையார் ஜெயலலிதா, ஐயா எம்.ஜி.ஆர் ஆட்சி செய்தபோது ஆளுநர்கள் அரசுக்கு இவ்வளவு நெருக்கடி கொடுத்ததில்லை. ஆளுமையான தலைவர்கள் ஆட்சி செய்யாதபோதுதான் இது போன்ற பிரச்னைகள் உண்டாகின்றன.’’

``ஆனால், ஆளுநர் ரவியைத் திரும்பப் பெற தி.மு.க பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்துவருகிறதே?’’

`` தி.மு.க-வினர், ‘ஆளுநர் பதவியே வேண்டாம்’ என்று சொல்லவில்லை. ‘ஆர்.என்.ரவியைத் நீக்க வேண்டும்’ என்ற கோரிக்கையைதான் வைக்கிறார்கள். அவருக்கு பதில் வேறு ஒருவர் வந்து நெருக்கடி கொடுத்தால் பரவாயில்லையா சொல்லுங்கள்... ஒருபுறம் ஜனாதிபதி யிடம் கடிதம் கொடுக்கிறார்கள். மறுபுறம் அதே ஆளுநருடன் காந்தி கிராமப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் கலந்துகொள்கிறார். இது எந்தவிதமான எதிர்ப்பு?’’

`` `பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான பத்து சதவிகித இட ஒதுக்கீடு செல்லும்’ என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``மிகக் கொடுமையான விஷயம் இது. இட ஒதுக்கீடு என்பது, ஏழை, பணக்காரன் என பொருளாதாரரீதியான ஏற்றத்தாழ்வுகளுக்காகக் கொண்டுவரப்பட்டதல்ல. சாதியின் அடிப்படையில், கல்வி, வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு அதே சாதியின் அடிப்படையில் நீதி வழங்குவதே இட ஒதுக்கீட்டின் அடிப்படை. ஆனால், இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு ‘முன்னேறிய வகுப்பினருக்கு’ என்று சொல்கிறார்கள். பிறகு அவர்களுக்கு எதற்காக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி...’’

“முதல்வர் ஸ்டாலின் என் அண்ணன்... எங்களுக்குள் நடப்பது அண்ணன், தம்பிச் சண்டை”

``இட ஒதுக்கீடு விஷயத்தில் பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சிக்கும் சீமான், இலவசங்களை விமர்சிப்பதில் அதே பா.ஜ.க-வுடன் கைகோக்கிறாரே?’’

``இலவசத்தை நான் பல்லாண்டுகளாக எதிர்த்துவருகிறேன். அவர்கள் எப்போது எதிர்க்க ஆரம்பித்தார்கள்... அதைவிடுங்கள், இலவசங்களை விமர்சிக்கும் அவர்கள் எதற்காக விவசாயிகளுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் மானியம் கொடுக்கிறார்கள்... அது எந்தக் கணக்கில் வருகிறது?’’

``தி.மு.க அமைச்சர்கள் அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சையில் மாட்டிக்கொள்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``நான் பெரிதும் மதிக்கக்கூடிய துரைமுருகன், பொன்முடி போன்ற மூத்த அமைச்சர்களே அப்படிப் பேசுவது வருத்தமாகத்தான் இருக்கிறது. அதற்கு, தம்பி அன்பில் மகேஷ் எவ்வளவோ நாகரிகமாக நடந்துகொள்கிறார்.’’

“பொதுவாக தி.மு.க-வை கடுமையாக விமர்சனம் செய்யும் நீங்கள், தனிப்பட்ட முறையில் தி.மு.க நிர்வாகிகள் பலரை மதிப்பதாகச் சொல்கிறீர்களே?”

“ஆம். தி.மு.க-வில் பலரின்மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. தனிப்பட்ட முறையில் அவர்களுடன் எந்தப் பகையும் கிடையாது. முதல்வரையே என் அண்ணன்போலத்தான் நினைக்கிறேன். நான் அவரை விமர்சிப்பதுகூட அண்ணன், தம்பிச் சண்டைதான். அவரின் மீதிருப்பது செல்லக் கோபம்தான். அதற்காக, பொது எதிரியான பா.ஜ.க-வினரை உள்ளேவிட முடியாது.’’

``ஆனால், பா.ஜ.க-வை எதிர்க்க நீங்கள்தி.மு.க-வுடன் கைகோக்க மறுப்பது ஏன்?’’

``அவர்களை நம்ப முடிவதில்லை. அதனால்தான் இணைந்து பணியாற்றுவதில்லை.’’

``பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் மீண்டும் பா.ஜ.க களம் இறங்கியிருக்கிறதே?’’

``அப்படிக் கொண்டு வரவே முடியாது. என் உணவும், உங்கள் உணவும் ஒன்றில்லை. என் உடையும் உங்கள் உடையும் ஒன்றாக இல்லை. ராணுவத்தில் அனைவரும் தாடியை எடுத்திருக்க வேண்டும். ஆனால், சீக்கிய மக்களிடம் அதைச் சொல்ல முடியுமா... அதேபோலத்தான். பொது சிவில் சட்டமெல்லாம் தேவையில்லாத வேலை. இது குறித்து ஆராய, குழு அமைத்திருக்கும் தமிழ்நாடு அரசு, ‘பொது சிவில் சட்டத்தை ஏற்க முடியாது’ என வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும். ‘என் மாநிலத்துக்குள் சி.பி.ஐ விசாரிக்க முடியாது’ என சந்திரசேகர ராவ் எப்படி வலிமையாக எதிர்க்கிறார்... அந்தத் திமிரும், மேன்மையும் நமக்கு இருக்க வேண்டும்.’’

`` `கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கக் கூடாது’ என அறிக்கை வெளியிட்டது ஏன்?’’

``என் நிலத்துக்குள் என்.ஐ.ஏ-வுக்கு என்ன வேலை... இவ்வளவு பெரிய காவல்துறை இருக்கும்போது என்.ஐ.ஏ எதற்கு வருகிறது... எல்லா அதிகாரத்தையும் மத்திய அரசுக்குக் கொடுத்துவிட்டால் என்னிடம் என்ன மிச்சமிருக்கும்... கேட்டால், தேசப் பாதுகாப்பு என்கிறார்கள். முதலில் பா.ஜ.க-விடமிருந்துதான் இந்த தேசத்தைப் பாதுகாக்க வேண்டும்.’’

``இந்த விஷயத்தில் தமிழக பா.ஜ.க கூறிய விஷயங்களைத்தான் என்.ஐ.ஏ-வும் உறுதிசெய்திருக்கிறது என்கிறாரே அண்ணாமலை?’’

``ஆமாம். என்.ஐ.ஏ-வும் பா.ஜ.க-வும் ஒன்றுதான். இஸ்லாமிய மக்களை எதிர்ப்பதைத் தவிர பா.ஜ.க-வுக்கு எந்த அரசியல் கோட்பாடும் கிடையாது. ‘காஷ்மீர் இஸ்லாமியர்கள் இந்தியர்கள்... நாட்டின் பிறபகுதிகளில் இருக்கும் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டும்’ என்கிற வேடிக்கையான கொள்கைதான் அவர்களுடையது.”

``ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க-வை எதிர்க்கும் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து உடன் செல்கிறார்களே. ஆனால், நீங்கள் காங்கிரஸையும் விமர்சிக்கிறீர்களே?’’

``பா.ஜ.க இவ்வளவு வலிமையாக ஆட்சி அதிகாரத்தில் உட்காருவதற்குக் காரணமே காங்கிரஸ் கட்சிதானே... காங்கிரஸின் பத்தாண்டுக்கால மோசமான ஆட்சியால்தான் மோடி பிரதமராக வந்தார். பணம் செல்லாது என்று சொன்னதைத் தவிர, ஜி.எஸ்.டி., நீட் தொடங்கி தற்போது அவர்கள் கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டவைதான். பா.ஜ.க-வுக்கு மாற்று காங்கிரஸ் என்பது சரியல்ல. இந்தியாவின் பிரதமர்கள் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் சுழற்சிமுறையில் வர வேண்டும். ஒற்றைக்கட்சி ஆட்சிமுறை ஒழிய வேண்டும்.’’