Published:Updated:

பின்னாலிருந்து தூண்டிவிடுகிறதா தி.மு.க?

சீமானுக்கு எதிராகத் திரளும் காங்கிரஸ் தலைவர்கள்...

பிரீமியம் ஸ்டோரி

நாம் தமிழர் கட்சிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கும் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சீமானை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்தாக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வரிசையாகக் காவல் துறையிடம் புகார் அளித்துவருகிறார்கள். மறுபுறம், “காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பேசியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யச் சொல்வது எந்தவிதத்தில் நியாயம்? இதன் பின்னணியில் தி.மு.க இருக்கிறது!” என்று கொதிக்கிறார்கள் நாம் தமிழர் தம்பிகள்!

பின்னாலிருந்து தூண்டிவிடுகிறதா தி.மு.க?

கடந்த 2009-ல் நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்ததிலிருந்தே காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்துவருகிறார் சீமான். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திலும் ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் தலைவர்கள் குறித்து சீமான் பேசிய பேச்சுகள் காங்கிரஸ் கட்சியினரை ஆத்திரமடையச் செய்துள்ளன. இதையடுத்து, “காங்கிரஸ் தலைவர்கள் ராஜீவ் காந்தி, சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார் சீமான். தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் சீமானை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்’’ என்று அறிக்கை வெளியிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி. காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவரும் எம்.பி-யுமான ஜெயக்குமார், ஊடகப்பிரிவுத் தலைவர் கோபண்ணா இருவரும் டி.ஜி.பி சைலேந்திரபாபுவைச் சந்தித்து ‘சீமான் மீது நடவடிக்கை வேண்டும்’ என்று புகார் அளித்துள்ளனர். காங்கிரஸ் சட்டமன்றக்குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, கரூர் எம்.பி ஜோதிமணி ஆகியோரும் ‘சீமானைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்’ என்று புகார் அளித்துள்ளனர்.

பின்னாலிருந்து தூண்டிவிடுகிறதா தி.மு.க?

“பத்தாண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியை சீமான் விமர்சித்துவரும் நிலையில், இப்போது அவரை கைதுசெய்வதில் தீவிரம் காட்டுவது ஏன்?” என்று காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணாவிடம் கேட்டோம்... “2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில், ‘ராஜீவ் காந்தியைக் கொன்றது நாங்கள்தான்’ என்று சீமான் பேசினார். அப்போதே நாங்கள் காவல்துறையில் புகார் அளித்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் மீண்டும் காங்கிரஸ் தலைவர்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியிருக்கிறார். சீமானுக்கு எந்தக் கொள்கையும் இல்லை. சகட்டுமேனிக்கு அனை வரையும் திட்டுவது மட்டுமே அவரது கொள்கை. தொடர்ந்து அவர் தேசத்தின் இறையாண்மைக்கு எதிராகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிவருவதாலேயே அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்யச் சொல்லி புகார் அளித்துள்ளோம்’’ என்றார்.

பின்னாலிருந்து தூண்டிவிடுகிறதா தி.மு.க?

“காங்கிரஸ் கட்சியின் இந்தச் செயலுக்கு பின்னால் தி.மு.க இருக்கிறது’’ என்று குற்றம்சாட்டுகிறார் நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன்... “நேற்று, இன்றல்ல... காங்கிரஸ் கட்சியை நாங்கள் பத்தாண்டுகளாக எதிர்த்துவருகிறோம். இதைவிட மூர்க்கமாகவும் கடுமையாகவும் பேசியிருக்கிறோம். ஆனால், மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு பா.ஜ.க ஆட்சியாளர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்துத்தான் பேசிவருகிறோம். காங்கிரஸின் மீதான விமர்சனங்களைக் குறைத்திருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் எங்களுக்குப் பல்வேறு குடைச்சல்களைக் கொடுத்தனர். பல இடங்களில் எங்கள் கட்சி வேட்பாளர்களை மிரட்டினார்கள். அதனால்தான் சீமான் அண்ணன் அப்படிப் பேசினார். அதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திலும் கைதுசெய்யச் சொல்லி புகார் அளிப்பதில் உள்நோக்கம் இருக்கிறது. தமிழ்நாட்டில் நாங்கள் மாற்று சக்தியாக வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அந்தச் சட்டங்களில் கைதுசெய்யச் சொல்கிறார்கள். இதற்குப் பின்னால் கண்டிப்பாக தி.மு.க இருக்கிறது. இதை அவர்கள் நேரடியாகச் செய்ய முடியாமல், காங்கிரஸ் கட்சியினரைத் தூண்டிவிடுகிறார்கள்’’ என்றார் கோபமாக!

கோபண்ணா - பாக்கியராசன் -  கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கோபண்ணா - பாக்கியராசன் - கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

“நாம் தமிழர் கட்சியினரை நாங்கள் பொருட்டாகவே கருதுவதில்லை” என்கிறார் தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன். “எம்.பி., எம்.எல்.ஏ போன்ற உயர்ந்த பதவிகளில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள்தான் சீமான் மீது புகார் அளித்துவருகிறார்கள். எந்த முகாந்திரமும் இல்லாமல் இதை அவர்கள் செய்வார்களா? தி.மு.க நினைத்தால் சீமான் உள்ளிட்டவர்கள் பேசிய பேச்சுகளுக்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க முடியும். ராஜீவ் காந்தி கொலை வழக்கே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள்ளாக இவரே, ‘நாங்கள்தான் கொன்றோம்’ என்கிறார். இவர்களின் பல்வேறு பேச்சுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு மட்டுமல்லாமல் தமிழினத்துக்கே அவப்பெயரை ஏற்படுத்திவருகின்றன. ஒரு கட்சியில் இளைஞர்கள் கட்டுப்பாட்டை மீறிப் பேசினால், கட்சித் தலைவர் அந்த மேடையிலேயே அதைத் தடுக்க வேண்டும்; கண்டிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த நாளாவது மறுப்பு கொடுக்க வேண்டும். இவற்றில் எதையும் செய்யாமல், கட்சித் தலைவரே கண்டபடி பேசுகிறார். அதனால்தான், நாங்கள் இவர்களை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அதேசமயம், நாங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது போன்று காங்கிரஸ் தலைவர்கள் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவர்களின் புகாரில் நியாயம் இருந்தால் நிச்சயமாக அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

நா காப்பதே எல்லோருக்கும் நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு