Published:Updated:

நாம் தமிழர் - பா.ம.க மோதல்! - பின்னணியில் தி.மு.க?

சீமான்
பிரீமியம் ஸ்டோரி
சீமான்

பிரம்மதேச கிராமத்தில் எழுந்த பிரச்னைக்கு முழுக்க முழுக்க தி.மு.க-தான் காரணம். இதற்கு பா.ம.க பின்னணி இருப்பதாகத் தெரியவில்லை.

நாம் தமிழர் - பா.ம.க மோதல்! - பின்னணியில் தி.மு.க?

பிரம்மதேச கிராமத்தில் எழுந்த பிரச்னைக்கு முழுக்க முழுக்க தி.மு.க-தான் காரணம். இதற்கு பா.ம.க பின்னணி இருப்பதாகத் தெரியவில்லை.

Published:Updated:
சீமான்
பிரீமியம் ஸ்டோரி
சீமான்

திருவண்ணாமலை மாவட்டம், பிரம்மதேசத்தில் தொடங்கிய நாம் தமிழர் கட்சி - பா.ம.க இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இரு தரப்பும் சமூக வலைதளங்களில் வார்த்தைகளால் மோதிவருகின்றன. இந்த மோதலின் பின்னணியில் தி.மு.க-வின் தூண்டுதல் இருப்பதாக, நாம் தமிழர் கட்சி குற்றம்சாட்டுவதுதான் ‘டர்னிங் பாயின்ட்.’

ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நினைவிடம் அமைந்திருக்கும் பிரம்மதேச கிராமத்தில், ஜூலை 21-ம் தேதி பெருவிழா கொண்டாடியது நாம் தமிழர் கட்சி. சிறப்பு அழைப்பாளராக அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைக்கப்பட்டிருந்தார். விழாவில், நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க-வைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், நாம் தமிழர் கட்சி மேடைகளில் வழக்கமாக ஒலிக்கும் ‘எடுத்து அடிடா முப்பாட்டன் பறையை...’ என்கிற பாடல் ஒலிக்கக் கூடாது என்றும் மல்லுக்கு நின்றிருக்கிறார்கள்.

ராமதாஸ்
ராமதாஸ்

ஆவேசமடைந்த சீமான், “இது உன் கோட்டைன்னா, தமிழ்நாடே என் கோட்டை. உனக்கு உண்மையிலேயே திராணி இருந்தா, தனிச்சு நில்லு பார்ப்போம்” என்று பா.ம.க-வினருக்குச் சவால்விட்டார். அதைத் தொடர்ந்து, இரு கட்சியினருக்கும் இடையேயான மோதல் சமூக வலைதளங்களில் வலுத்திருக்கிறது. “செய்யாறு தி.மு.க எம்.எல்.ஏ ஜோதியின் தூண்டுதலின்பேரில்தான், அந்த பா.ம.க இளைஞர்கள் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சிக்கும், வன்னியருக்குமான மோதலாக இதை உருவெடுக்க தி.மு.க முனைகிறது” என்றொரு குற்றச்சாட்டும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடமிருந்து முன்வைக்கப்படுகிறது.

சீமான்
சீமான்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன், “பிரம்மதேச கிராமத்தில் எழுந்த பிரச்னைக்கு முழுக்க முழுக்க தி.மு.க-தான் காரணம். இதற்கு பா.ம.க பின்னணி இருப்பதாகத் தெரியவில்லை. இரண்டு பேரை மோதவிட்டு அதில் லாபம் பார்க்கும் தன் வழக்கமான அரசியலை, எங்களிடமும் செய்யப் பார்க்கிறது தி.மு.க. பிரம்மதேசக் கூட்டத்தில், எங்கள் கட்சியின் கொடியை ஏற்றக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த சிலர், தி.மு.க-வைத் தாக்கிப் பேசக் கூடாது என்றும் கூறினர். ‘தி.மு.க-வை தாக்கக் கூடாது’ என்று சொல்வதற்கு இவர்கள் யார்... பிரச்னை செய்தவர்களை காவல்துறை உடனே அப்புறப்படுத்தவில்லை. தேவையற்ற மோதலை தி.மு.க-தான் திட்டமிட்டு உருவாக்குகிறது” என்றார் ஆவேசமாக.

நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, “2009 தேர்தலில் வெறும் ஒரு சதவிகித வாக்குகளை வைத்திருந்த சீமான், 2021 சட்டமன்றத் தேர்தலில் ஏழு சதவிகித வாக்குகளுக்கு உயர்ந்துவிட்டார். அடுத்தகட்டமாக, 18 சதவிகிதமிருக்கும் தேவேந்திர குல வேளாளர், பறையர் சமூக வாக்குகளையும், 13 சதவிகிதமிருக்கும் சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகளையும் குறிவைத்து தன் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியிருக்கிறார். ‘ஆதித்தமிழரை பொதுத் தொகுதியில் நிறுத்துவேன்’ என்று சீமான் சொன்னதும், ‘முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்’ என போராட்டம் செய்வதும் இந்தப் பிரசாரத்தின் ஒரு பகுதிதான்.

பாக்கியராசன்
பாக்கியராசன்

நடந்து முடிந்த தேர்தலில் இந்தச் சமூக வாக்குகள்தான் தி.மு.க-வுக்கு கைகொடுத்து அரியணை ஏற்றியிருக்கின்றன. அதேநேரம், ‘தி.மு.க-வும், பா.ஜ.க-வும் மறைமுக கூட்டணியில் இருக்கின்றன’ என்று பிரசாரம் செய்து, தி.மு.க-வின் வாக்குவங்கியில் சீமான் ஓட்டையைப் போட முயல்கிறார். இதையெல்லாம் அறிவாலயம் ரசிக்கவில்லை. அதனால்தான் நாம் தமிழர் கட்சி - பா.ம.க மோதலை உருவாக்கி, ஒரு சிறிய கட்சியாக நாம் தமிழர் கட்சியை முடக்கிவிட முயல்கிறது. 2009-ல் இதேபோல, தே.மு.தி.க - பா.ம.க மோதல் உருவெடுத்ததால், விஜயகாந்த் கட்சியால் ஒரு கட்டத்துக்கு மேல் வளர முடியவில்லை. அதே சூழலை நாம் தமிழர் கட்சிக்கும் உருவாக்கிவிடப் பார்க்கிறது தி.மு.க. ஆனால், இது தவறான வியூகம். சீமான் குறிவைத்திருக்கும் ஆதித்தமிழர், சிறுபான்மையினர் வாக்குகள் அணிதிரளத்தான் இது வழிவகுக்கும்” என்றார்.

ஜோதி
ஜோதி

இது தொடர்பாக செய்யாறு தி.மு.க எம்.எல்.ஏ ஜோதியிடம் பேசினோம். “பிரம்மதேசத்தில், நாம் தமிழர் கட்சி கூட்டம் நடத்துவதே எனக்குத் தெரியாது. பா.ம.க-வினரால் அங்கு பிரச்னை ஏற்பட்டதாக எனக்கு பிறகுதான் தகவல் வந்தது. பா.ம.க-வுடன் எங்களுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. பிறகு எங்கிருந்து நாங்கள் அவர்களைத் தூண்டிவிடப் போகிறோம்... இவையெல்லாம் அபாண்டமான குற்றச்சாட்டு” என்றார்.

பா.ம.க-வைச் சேர்ந்தவர்கள் தனக்கெதிராகப் பிரச்னையைக் கிளப்பினாலும், இதனால் தனக்கும் மருத்துவர் ராமதாஸுக்கும் மோதல் பெரிதாகிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறாராம் சீமான். அதற்காகத்தான், ராமதாஸ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கையும் அவரிடமிருந்து வெளிவந்திருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இந்த வியூக அரசியலில், வெற்றி பெறப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!