Published:Updated:

பாடம் கற்றுத் தந்த உள்ளாட்சித் தேர்தல்... பாதையை மாற்றுமா நாம் தமிழர் கட்சி?

சீமான்
சீமான்

ஒவ்வொருமுறை தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னும் இரண்டு கட்சிகளும் பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கிவிட்டனர் என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் சீமான். ஆனால், தேர்தல் ஆணையத்தில் அதுகுறித்து முறையாக புகார் அளித்ததாகவோ அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவோ தெரியவில்லை.

கடந்த மூன்றாண்டுகளாக அப்போ இப்போ என தத்தளித்து வந்த தமிழக உள்ளாட்சித் தேர்தல் கப்பல் ஒருவழியாக ஊரகப்பகுதிகளிலாவது கரை சேர்ந்திருக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமுள்ள 27 மாவட்டங்களில், ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் முதலில் தேர்தலை நடத்தத் திட்டமிட்டது தமிழக தேர்தல் ஆணையம். அதன்படி 515 மாவட்ட கவுன்சிலர், 5,090 ஒன்றிய கவுன்சிலர், 9,624 கிராம ஊராட்சித் தலைவர், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பணியிடங்களுக்குக் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக, 77 சதவிகித வாக்குகள் பதிவாகின.

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை
படம்: தி.விஜய்

தொடர்ந்து, ஜனவரி 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. இரண்டு நாள்களாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், மொத்தமுள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் திருவாரூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு கவுன்சிலர் பதவியிடங்களைத் தவிர்த்து 513 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் தி.மு.க 243 இடங்களிலும், அ.தி.மு.க 214 இடங்களிலும் வெற்றி பெற்றன. 5,090 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில், தி.மு.க 2,100 இடங்களையும் அ.தி.மு.க 1,781 இடங்களையும் கைப்பற்றின. 9,624 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளில் 9,613 (99.89%) இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தவிர, 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 76,433 (99.59%) இடங்களுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இரு பெரும் திராவிடக் கட்சிகள் தங்கள் முழு பண பலத்தை இரைத்து இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். நாங்கள் அவர்களை எதிர்த்துக் களமாடி இவ்வளவு வாக்குகளைப் பெற்றதே பெரிய வெற்றிதான். இன்னொன்று, நாங்கள் கீழ்நிலை உள்ளாட்சி இடங்களில் கணிசமான இடங்களில் வெற்றியடைந்துள்ளோம். ஆனால், அது பற்றியெல்லாம் ஊடகங்கள் சொல்வதே இல்லை
சீமான்

ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் ஏறக்குறைய சரிசமமான இடங்களைக் கைப்பற்றினாலும், ஆளும்கட்சி மட்டுமே கோலோச்சி வந்த உள்ளாட்சித் தேர்தல்களில், முதல்முறையாக எதிர்க்கட்சி ஆளும் கட்சியைவிட அதிக இடங்களைக் கைப்பற்றியிருப்பது மகத்தான சாதனையாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தி.மு.க பெரும் கொண்டாட்டத்தில் இருக்கிறது. ஆளும் அ.தி.மு.க வீழ்ச்சிக்கான காரணங்களைக் கண்டறிந்து வருகிறது.

இந்த நிலையில், வெறும் ஒரே ஒரு ஒன்றிய உறுப்பினர் பதவியை மட்டுமே கைப்பற்றிவிட்டு படுஉற்சாகமாக இருக்கிறார்கள் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள். ``கன்னியாகுமாரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற சுனில் மட்டுமல்லாது, எங்கள் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்களாகவும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஊராட்சித் தலைவர்களாகவும் வெற்றி பெற்றிருக்கிறார்கள் கணக்கைத் தொடங்கிவிட்டோம் இனி எங்கள் காலம்தான்'' என உறுமுகிறார்கள் அவர்கள்.

தேர்தலில் வெற்றி பெற்ற சுனில்
தேர்தலில் வெற்றி பெற்ற சுனில்

மறுபுறம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானோ, ``லோக்சபா தேர்தலைவிட அதிக வாக்குகளை பெற்றுள்ளோம். சாதி, பணம் அனைத்தையும் தாண்டி வெற்றிபெற்றிருக்கிறோம். நீங்கள் அதைப்பார்க்க வேண்டும். கிராமங்களில் எல்லாம் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். எங்களின் வாக்கு சதவிகிதம் 4 சதவிகிதமாக இருந்தது. ஆனால், தற்போது நாம் தமிழர் கட்சி 10 சதவிகித வாக்குகளை பெற்றிருக்கிறது. நாங்கள் வேகமாக வளர்கிறோம்'' என்று தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

அவருடைய விளக்கம், கட்சியினரை உற்சாகப் படுத்தியிருக்கிறது. ``2021 சட்டசபைத் தேர்தலை வலிமையாக நாங்கள் எதிர்கொள்வோம். 2021-ல் போட்டியிடுகிற வேட்பாளர்களை இந்த மாதமே தேர்வு செய்வோம். ஒன்றரை வருடம் தேர்தலுக்கு உழைக்கப் போகிறோம்'' என சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டனர் சீமானும் அவர் தம்பி, தங்கைகளும்.

நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தல் முடிவுகளை பாஸிட்டிவாக எடுத்துக்கொண்டாலும், கட்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் ஆகியும், ஆயிரக்கணக்கான பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வெறும் ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாததையே காட்டுகிறது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

எங்கள் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் உற்சாகமாகவே இருக்கிறோம். எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. இது கடினமான வேலை. வெல்வதற்கு சில காலம் ஆகும் என்பதை ஒவ்வொரு கூட்டத்திலும் எங்கள் அண்ணன் சீமான் எங்களுக்குச் சொல்லியிருக்கிறார். மனதளவில் நாங்கள் அதற்குத் தயாராகிவிட்டோம். எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. ஊரக உள்ளாட்சி இடங்களில் பாதிக்குப் பாதி இடங்களில்தான் போட்டியிட்டோம். ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகள் எங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது. நகராட்சி, மாநகராட்சிக்கு நடக்கக்கூடிய தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம்.
பாக்கியராசன், செய்தித் தொடர்பாளர், நாம் தமிழர் கட்சி.

நாம் தமிழர் கட்சியின் சார்பாக, சீமான் எங்கு பேசினாலும், பெரும்கூட்டம் கூடிவிடுகிறது. அவரின் பேச்சுக்கு கைதட்டல்களும் விசில்களும் பறக்கின்றன. தவிர மரம் நடுதல், கண்மாய் தூர்வாருதல், பனைவிதை சேகரித்தல், ரத்ததானம் செய்தல் எனப் பகுதி வாரியாகவும் சில விஷயங்களைச் செய்துவருகிறார்கள் அவரின் தம்பிமார்கள். ஆனாலும், தேர்தல் என்று வரும்போது மட்டும் மக்களின் வாக்குகளைத் திரட்ட முடியாமல் திக்கித் திணறி வருகிறார்கள். `மேடை வேறு... தேர்தல் களம் என்பது வேறு... அதில் வெற்றி பெற சில யுக்திகள் முக்கியம் என்பதை ஒவ்வொருமுறையும் கற்றுக்கொள்ளத் தவறிவிடுகிறார் சீமான். இதேநிலை வரும் சட்டமன்றத் தேர்தலிலும் நீடித்தால், கண்டிப்பாக அக்கட்சி உறுப்பினர்கள் கடுமையான சோர்வுக்கு ஆளாவது நிச்சயம்'' என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சிக்கு முன்னிருக்கும் சவால்கள் என்னென்ன?

ஒவ்வொரு முறை தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னும் இரண்டு கட்சிகளும் பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கிவிட்டனர் என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் சீமான். ஆனால், தேர்தல் ஆணையத்தில் அதுகுறித்த ஆதாரங்களுடன் முறையான புகார் அளித்ததாகவோ அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவோ தெரியவில்லை. காசை வாங்கிக்கொண்டு மக்கள் வாக்களிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டும் நாம் தமிழர் கட்சியினர், மக்களிடம் அதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்களா என்றால் ஒப்பீட்டளவில் மிகக்குறைவே. மாறாக, காசு வாங்கிக்கொண்டு வாக்களித்துவிட்டனர் என மக்களின் மீது குற்றம் சுமத்தும் வேலைகளையே மேடைகளிலும் சமூக வலைதளங்களிலும் செய்து வருகிறார்கள்.

அமெரிக்கா - இரான் சிக்கலும் இடையில் சிக்கிய இந்தியாவும்!

குற்றம் சுமத்துவதை நிறுத்தி, மக்களிடம் சென்று சரியான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களின் மனதில் இடம்பிடிப்பதற்கு நாம் தமிழர் கட்சி முயற்சி செய்ய வேண்டுமென்பதே அக்கட்சியின் மீது அபிமானமுள்ளவர்கள் சொல்லும் ஆலோசனையாக இருக்கிறது. தவிர தமிழகத்தில்; தி.மு.க, அ.தி.மு.க, கம்யூனிஸ்ட், பா.ம.க, வி.சி.க உள்ளிட்ட ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சில பகுதிகளில் வலுவான வாக்கு வங்கி உள்ளது. அப்படி தங்களுக்கான பெல்ட் எது, தங்களுக்கான வாக்கு வாங்கி யார் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். 234 தொகுதிகளிலும் போட்டியிடுவது அந்தக் கட்சி உறுப்பினர்களிடையே ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வெற்றியை இலக்காக வைத்துப் போராட வேண்டியது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது.

அண்ணா
அண்ணா

அடுத்ததாக, தேர்தல் அரசியலில் கூட்டணி என்பது மிக மிக அவசியமானது. கட்சி ஆரம்பித்து இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் ஒரு எம்.எல்.ஏ இடத்தைக்கூடப் பெறமுடியவில்லையே என விமர்சனம் முன்வைக்கும்போதெல்லாம், 1949-ல் கட்சி ஆரம்பித்து 1967-ல் தான் ஆட்சியைப் பிடித்தது தி.மு.க என்கிற வாதத்தை முன்வைப்பார்கள் நாம் தமிழர் கட்சியினர். ஆனால், 1949-ல் கட்சி ஆரம்பித்த தி.மு.க 1957-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலேயே, 13 எம்.எல்.ஏ-க்களுடன் தங்களது எண்ணிக்கையைத் தொடங்கிவிட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளத் தவறிவிடுகிறார்கள். 1967-ல் ஆட்சியைக் கைப்பற்றும்போது எத்தனை கட்சிகளின் கூட்டணியோடு அண்ணா ஆட்சியைக் கைப்பற்றினார் என்பதையும் தெரிந்துகொண்டால் தேர்தல் அரசியலில் கூட்டணியின் முக்கியத்துவத்தை எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். தேசிய, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அடித்துச் சொல்லும் சீமான், குறைந்தபட்சம், தன் கருத்துகளோடு ஒத்துப்போகக்கூடிய பிற கட்சிகளுடனாவது கூட்டணியை உறுதி செய்ய வேண்டும். அப்படி, கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு, ஒரு சில எம்.எல்.ஏ இடங்களைப் பிடித்தால் மட்டுமே இனி அந்தக் கட்சிக்கு எதிர்காலம் என்பதுதான் அரசியல்பார்வையாளர்கள் சொல்லும் ஆலோசனையாக இருக்கிறது.

மாவட்ட கவுன்சிலர் இடங்கள்

தி.மு.க - 243 (47.18%),

அ.தி.மு.க - 214 ( 41.55%),

காங்கிரஸ் - 15 (2.91%),

பா.ஜ.க - 7 (1.36%),

தே.மு.தி.க - 3 (0.58%),

இந்திய கம்யூனிஸ்ட் 7 (1.36%),

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 (0.39%),

பா.ம.க., த.மா.கா உள்ளிட்ட பிறர் 22 (4.27%)

- தேர்தல் ஆணையம்

சரிக்கு சமமாக ஆண்-பெண் வேட்பாளர்கள்; பொதுத்தொகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்துவது; திருநங்கை ஒருவரை வேட்பாளாராக்கியது... போன்ற சீமான் முன்னெடுக்கும் விஷயங்கள் பாராட்டுக்குரிய ஒன்றாக இருந்தாலும் தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை வெற்றி ஒன்றே அந்தக் குறிப்பிட்ட நபருக்கோ, இல்லை அந்தக் கட்சிக்கோ நன்மை பயக்கும். அடுத்தகட்டத்தை நோக்கி அந்தக் கட்சியை நகர்த்தும். அதைவிட முக்கியம் நாம் தமிழர் கட்சி பெறும் வாக்குகளால், ஆட்சி அதிகாரத்தில் இதுவரை இல்லாத, ஊழல் கரை படியாத அவர்களின் கருத்துகளுக்கு நெருக்கமாக வரக்கூடிய கம்யூனிஸ்ட்கள் போன்ற பிற நட்புக் கட்சிகளின் வெற்றியையும் பறித்து, மாறாக அவர்கள் யாருக்கு எதிராகப் போராடுகிறார்களோ அவர்களின் கையிலே மீண்டும் ஆட்சியை ஒப்படைக்கத்தான் பயன்படும் என்கிற யதார்த்தத்தையும் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள். (ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட சில இடங்களில் நாம் தமிழர் கட்சி பிரித்த வாக்குகளால் அல்லது தனித்துப் போட்டியிட்டதால் கம்யூனிஸ்ட்கள், வி.சி.க-வினர் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள், அ.தி.மு.க-வினர் வெற்றி பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது)

வேட்பாளராகப் போட்டியிட்ட திருநங்கை தேவி
வேட்பாளராகப் போட்டியிட்ட திருநங்கை தேவி

2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 1.1 சதவிகிதம், அந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்கு சதவிகிதமும் 1.1 தான். தி.மு.க, அ.தி.மு.க என மாறி மாறி ஆட்சியைப் பிடித்துவந்த தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து தி.மு.க இரண்டு முறை தோற்றதற்கு நாங்கள் பெற்ற  வாக்குகள்தான் காரணம் என மார்தட்டும், அதற்கு கிரெடிட் எடுத்துக்கொள்ளும் நாம் தமிழர் கட்சியினர்,  2016-க்குப் பிறகு ஆளும் மத்திய அரசுக்குப் பணிந்து தமிழகத்தில் அ.தி.மு.க அரசால் அமல்படுத்தப்பட்ட அத்தனை அழிவுத் திட்டங்களுக்கும் மக்கள் விரோதப் போக்குக்கும் மறைமுகமாகத் துணை போய் இருக்கிறார்கள் என்பதற்கும் சேர்த்து பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தமான வாதத்தை முன் வைக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

தமிழக தேர்தல் சூழலைப் பொறுத்தவரை யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட யார் வரக் கூடாது என்கிற வகையில்தான், கட்சி சார்பல்லாத, பொது வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். அவர்களே வெற்றி தோல்வியையும் தீர்மானிக்கக்கூடிய சக்தியாகவும் இருப்பார்கள். சமீப காலமாக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற புதிய கட்சிகளின் வருகை, பொது வாக்குகளில் கணிசமான வாக்குகளை தங்கள் பக்கம் ஈர்த்துவிடுகின்றன. அவைதான் பெரும்பான்மை மக்கள் தேர்வு செய்த வேட்பாளரை வீழ்த்தி, வெற்றியை திசை திருப்பி விடுகின்றன. மக்களையும் தாண்டி, மக்களுக்காகத் தேர்தலில் களத்தில் நிற்கிறோம் எனச் சொல்லக்கூடிய கட்சிகளுக்கு அது நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய  கூடுதல் பொறுப்பிருக்கிறது. குறிப்பாக நாம் தமிழர் கட்சிக்கு.

கமல் - சீமான்
கமல் - சீமான்

இனிவரும் காலங்களிலாவது அவர்கள் அதைச் சரி செய்து கொள்வது அவசியம். நாங்கள் தனித்துவமானவர்கள் என தனித்து நின்று தங்கள் வெற்றியை இழப்பதோடு மட்டுமல்லாமல் மக்கள் யாரைத் தோற்கடிக்க நினைக்கிறார்களோ அவர்களை மீண்டும் வெற்றி பெறச் செய்வதற்கு துணை புரியப்போகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு