Published:Updated:

`அதிகாரத்தைப் பெறுவதற்கான முதல் வாய்ப்பு இது!'- 12 ஊராட்சி வார்டுகளைக் கைப்பற்றிய நாம் தமிழர் கட்சி

சீமான்
சீமான்

உள்ளாட்சித் தேர்தல் முடிவில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன. ஆனால், அதற்கு முன்னதாகவே பல பகுதிகளில் போட்டியின்றித் தேர்வானவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட 12 வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ` மக்கள் நமக்குக் கொடுத்த மிகப் பெரிய அங்கீகாரம் இது' என வெற்றி பெற்ற வேட்பாளர்களிடம் உருகியிருக்கிறார் சீமான்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலின் மூலம் 91,975 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 9-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், மொத்தம் 2,98,335 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2,06,657 மனுக்களும் ஊராட்சித் தலைவர் பதவி இடங்களுக்கு 54,747 மனுக்களும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 32,939 மனுக்களும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3,992 மனுக்களும் பெறப்பட்டன.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் நடைபெற்றது. இதில், மாநில தேர்தல் ஆணையத்தின் விதிகளையும் நடைமுறைகளையும் பின்பற்றாத மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. வேட்புமனுக்கள் பரிசீலனை முடிந்த உடன், அந்தந்த மாவட்டங்களில் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்றோ அல்லது நாளையோ வெளியாகலாம் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைவர் பதவி ரூ.50 லட்சம்; துணைத் தலைவர் ரூ.15 லட்சம்- கடலூரில் ஏலம்போன ஊராட்சி மன்றப் பதவிகள் #Video

உள்ளாட்சித் தேர்தல் முடிவில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன. ஆனால், அதற்கு முன்னதாகவே பல பகுதிகளில் போட்டியின்றித் தேர்வானவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில், ஏல முறையில் ஊராட்சித் தலைவர்களை விலைபேசும் காட்சிகளும் பல கிராமங்களில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதற்கு விளக்கம் கொடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ` காலம்காலமாக ஏலத்தில் எடுப்பது சகஜம்தான்' எனக் கூறி அதிரவைத்தார்.

சீமான்
சீமான்

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக 12 பேர் போட்டியின்றித் தேர்வானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், `` கட்சி தொடங்கிய நாள்முதலாக எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்துக் களமிறங்கி தேர்தலைச் சந்திக்கிறோம். ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமான அளவுக்கு மக்கள் எங்களுக்கு நம்பி வாக்குகளை அளித்து வந்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலிலும் நல்ல முன்னேற்றத்தை அடைந்தோம். அடுத்து வரக் கூடிய 2021 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து தேர்தல் பணிகளைத் தொடங்கியிருக்கிறோம்.

`நாங்கள் குடியேற கைலாசா இருக்கிறது!’- சென்னைப் போராட்டத்தில் கலகலத்த சீமான்

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதால், தலைமையின் அனுமதியோடு அந்தந்த மாவட்டங்களில் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களை அடையாளம் கண்டறியும் பணிகளும் நடந்தது. இந்தநேரத்தில்தான், பல்வேறு பகுதிகளில் உள்ள 12 வார்டுகளில் நாம் தமிழர் வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வான தகவல் கிடைத்தது. இதைக் கேட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினார் சீமான்" என விவரித்தவர்கள், வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்களையும் அடுக்கினர்.

சீமான்
சீமான்

`` உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி செல்லம்பட்டி ஒன்றியம், பானாமூப்பன்பட்டியின் 1-வது வார்டுக்கு போலக்காபட்டியின் கட்சிக் கிளைத் தலைவர் டேவிட்குமாரின் தாயார் முத்துப்பிள்ளை போட்டியின்றித் தேர்வாகியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பாகத் தேர்வான முதல் பெண் வேட்பாளர் இவர். அடுத்து, தஞ்சாவூர் வல்லம் பேரூராட்சி துணைத்தலைவர் சுபாஷ் சென்னம்பட்டி ஊராட்சியின் 2-வது வார்டுக்கான தேர்தலிலும், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை இனாம் அகரம் ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினராக நாம் தமிழர் கட்சியை சார்ந்த வே.மணிராஜ் ஆகியோரும் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் வட்டாரத்தில் அமைந்துள்ள லைட்அவுஸ் குப்பம் ஊராட்சி 5வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பிரகாஷ், தர்மபுரி மாவட்ட அரூர் ஒன்றியம் எல்லப்புடையம்பட்டி ஊராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட அபிராமி, நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியத்தில் சத்திநாயக்கன்பாளையம் ஊராட்சியில் 1-வது வார்டு உறுப்பினர் மற்றும் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட பவித்ரா மற்றும் சந்தோஷ் ஆகியோரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் பெருங்குடி ஊராட்சி 4-வது வார்டில் ஊராட்சி உறுப்பினருக்குப் போட்டியிட்ட ரா.மீனாட்சி சுந்தரம், கும்பகோணம் ஒன்றியம், உத்தமதாணி ஊராட்சியின் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டஇளங்கோவன், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், வடக்கு சிலுக்கன்பட்டி ஊராட்சியின் 4-வது வார்டு உறுப்பினராகப் போட்டியிட்ட ஞானசேகர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி வட்டாரத்தில் அமைந்துள்ள சொர்ணக்காடு 6-வது வார்டு உறுப்பினராகப் போட்டியிட்ட சிவரஞ்சனி, உசிலம்பட்டி, சீமானுத்து பஞ்சாயத்து வார்டு எண்-7 ல் போட்டியிட்ட மதுரை மேற்கு மாவட்டத் தலைவர் அ.இராசா ஆகியோர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என விவரித்தவர்கள்,

சீமான்
சீமான்

`` உள்ளாட்சிப் பதவிகளில் தேர்வானவர்களிடம் போனில் உருக்கமாகப் பேசினார் சீமான். அவர்களிடம், ` முதல்முறையாக அதிகாரத்தோடு மக்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நமது கட்சியைக் கொண்டு செல்வதற்கான நல்ல வாய்ப்பு இது. மக்கள் பணியில் நாம் நேர்மையோடு பணியாற்றப் போகிறோம் என்பதற்கு நீங்கள்தான் உதாரணமாக இருக்கப் போகிறீர்கள். இந்த வார்டில் தகுதியான நபர்கள் வேறு யாருமே இல்லை என நினைத்து மக்கள் உங்களை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே முன்மாதிரியான வார்டாக அந்தப் பகுதிகளை நீங்கள் மேம்படுத்திக் காட்ட வேண்டும்' எனக் கூறி வாழ்த்தினார்" என்கின்றனர் விரிவாக.

அடுத்த கட்டுரைக்கு