Published:Updated:

‘வேலைவாய்ப்பும் போச்சு.. நிம்மதியும் போச்சு!..’ - கடுகடுக்கும் சீமான்

தமிழகத்திலுள்ள பொது விநியோகப்பொருட்களை வடநாட்டவர்கள் மிக எளிதாக அபகரித்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.

சீமான்
சீமான்

ஒரே மொழி... ஒரே தேர்தல்... என்ற ஒற்றை அடையாளத்தை நிலைநிறுத்த மத்திய அரசு துடியாய் துடிக்கிறது இது இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து விடும் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சீமான், “ இந்தியா என்பது ஒற்றை நாடல்ல அது பல்வேறு தேசங்களின் கூட்டமைப்பு. நாட்டின் மொத்த அதிகாரத்தையும் ஓரிடத்திலே குவித்துவைத்து மாநிலங்களின் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த முற்படுகிறபோது அது இந்தியா எனும் கட்டமைப்பிற்கே பேராபத்தை உண்டாக்கும்.

மோடி
மோடி

ஒரே மொழி! ஒரே நாடு! ஒரே பண்பாடு! ஒரே தேர்தல்! ஒரே தேர்வு! ஒரே பொதுவிநியோகம்! என ஒற்றை அடையாளத்தை நிலைநிறுத்த துடிதுடியாய்த் துடிக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு.தற்போது கஸ்தூரி ரெங்கன் தலைமையிலான குழு அளித்துள்ள பரிந்துரைகளைக் கொண்டு ‘புதிய கல்விக்கொள்கை’ எனும் பெயரில் மும்மொழிக்கொள்கைத் திட்டத்தின் வாயிலாக இந்தியைத் திணித்திட முற்படுவதும் மாநிலங்களின் கல்வி உரிமையை முழுமையாகப் பறிக்கும் கொடுஞ்செயலாகும்.

நாடு முழுமைக்குமுள்ள அரசின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்த வழிவகைச் செய்வதும் முயல்கின்றன. ஒரே மாதிரியான கற்றல் வாய்ப்புகளையும், அதற்குரிய வசதிகளையும் ஏற்படுத்த முயலாத இந்நாடு ஒரே மாதிரியான தேர்வை மட்டும் நாடு முழுமைக்கும் நடத்த முற்படுவது மிகப்பெரும் மோசடியாகும். 30 கோடி மாணவர்களின் கல்வியுரிமையில் தலையிட்டுக் கல்வியை முழுக்க முழுக்கத் தனியார்வசமாக்குவதும், பாடத்திட்டங்களைப் படிப்படியாக இந்துத்துவமயப்படுத்துமான நோக்கங்களைக் கொண்ட சதிச்செயலின் செயலாக்கமே இது. கல்வியிலே முதன்மையாகத் திகழுகிற நாடுகள் யாவும் தாய்மொழி வழிக்கல்வியைத் தந்து, அரசே கல்விக்கூடங்களை ஏற்று நடத்தி அந்நாட்டின் அறிவுலகத்தைத் தீர்மானிக்கிறது. ஆனால், இந்நாடு கல்வியை முற்றுமுழுதாக மேட்டுக்குடி மக்களுக்கானதாக மாற்றி வணிகமாக்க அணியமாகிவிட்டது.

ஒரே மாதிரியான தேர்வை மட்டும் நாடு முழுமைக்கும் நடத்த முற்படுவது மிகப்பெரும் மோசடியாகும்.
சீமான்

பொதுவிநியோகத்திட்டத்தை மிகச்சிறப்பாக அமல்படுத்தி வரும் மாநிலங்களில் தமிழகம் முதன்மையானது. இப்போது தமிழகத்தின் பொது விநியோகத்தை இந்தியா முழுமைக்குள்ள எந்த மாநிலத்தவரும் பகிர்ந்துகொள்ளலாம் எனும் வாய்ப்பை வழங்கியிருப்பதன் மூலம், தமிழகத்திலுள்ள பொது விநியோகப்பொருட்களை வடநாட்டவர்கள் மிக எளிதாக அபகரித்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. ஏற்கனவே, இலட்சக்கணக்கான வடநாட்டவர்கள் தமிழகத்திற்குள் புகுந்து இங்கேயே வாக்குரிமைப் பெற்று தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து வருகின்றனர். வடநாட்டவர்களின் வரவால் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற வேளையில் வந்திருக்கிற இவ்வறிப்பானது வடவர்களுக்குக் கடைவிரித்துத் தமிழகத்தைப் பந்தி வைக்கிற பேராபத்தான செயலாகும்.

பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும், உள்ளாட்சி மன்றங்களுக்கும் நாடு முழுமைக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த ஆலோசித்து வரும் மத்திய அரசின் முயற்சியானது நாட்டைச் சீர்குலைக்கும் பேரழிவுச் செயலாகும். இது இந்தியாவின் அரசியலமைப்புச் சாசனத்திற்கே எதிரானது. வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையில்லாது 13 நாட்களிலேயே கவிழ்ந்தது போல, ஒரு ஆட்சி கவிழ்க்கப்பட்டால் நாடு முழுமைக்கும் சட்டமன்றங்களையும் கலைத்துவிட்டுப் புதிதாகத் தேர்தல் நடத்துவார்களா.

தேர்தல்
தேர்தல்

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது பொருளாதாரச் சிக்கனத்திற்காக அல்ல. அது தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை மாநிலத்தில் வலுவாக ஊன்றுவதற்கும், நாட்டின் பன்முகத்தைச் சிதைக்கும் தங்களது ஒற்றை அடையாளத்துக்கு வலுசேர்ப்பதற்கும் தான் என்பது இதன்மூலம் மிகத்தெளிவாகிறது. நாட்டின் ஓருமையினையும், பன்முகத்தன்மையினையும் சீர்குலைக்கும் இம்முயற்சிகள் யாவற்றையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.