Published:Updated:

`நாங்கள் குடியேற கைலாசா இருக்கிறது!’- சென்னைப் போராட்டத்தில் கலகலத்த சீமான்

ராமதாஸ் கூறிய வார்த்தையை நான் எதிர்பார்க்கவில்லை. தி.மு.க, அ.தி.மு.க கூட்டணியில் இருந்தபோது அரசு செய்யும் தவறுகளை நேர்மையாக சுட்டிக்காட்டியவர்.

சீமான்
சீமான்

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் ``இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும். மம்தா பானர்ஜி மட்டும் போராடினால் போதாது. அதில் எந்தப்பயனும் இல்லை. எல்லா உரிமைகளையும் பறிகொடுத்துவிட்டு வாழ்வதற்குப் பெயர் சுதந்திரம் இல்லை. அ.தி.மு.க-வினர் மிகப்பெரிய வரலாற்று தவற்றைச் செய்துவிட்டனர். மீதமிருக்கும் ஓராண்டு கால ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய வரலாற்றுப் பிழையை செய்திருக்கக் கூடாது.

சீமான்
சீமான்

இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோர் பூர்வ குடிமக்கள், அவர்கள் சிறுபான்மையின மக்கள் இல்லை. சிறுபான்மையினர் என்ற சொல்லை என் முன்னே பேசாதீர்கள். தமிழகத்தில் போராட அனுமதிக்கப்படவில்லை. இதுதொடர்பாக, ராமதாஸ் கூறிய வார்த்தையை நான் எதிர்பார்க்கவில்லை. தி.மு.க, அ.தி.மு.க கூட்டணியில் இருந்தபோது அரசு செய்யும் தவறுகளை நேர்மையாக சுட்டிக்காட்டியவர். கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமை சட்டத்தை ஆதரிக்க வேண்டி இருந்தது என அவர் பேசியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். அ.தி.மு.க அரசு எடுத்த நிலைப்பாட்டின் மூலம் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது.

`விஜய், வடிவேலுவை விசாரித்த பிரபாகரன்!' - சீமான் அன்று விகடனிடம் பகிர்ந்ததும் இன்று மேடைகளில் சிலாகிப்பதும்!

நாட்டின் பாதுகாப்பு எனப் பேசுவது சரியானதல்ல, அப்படியானால், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை எல்லாம் எதற்கு. எல்லா அட்டையும் நீங்கள் கொடுத்தது தான். ஆதார் அட்டைதான் நாட்டின் குடியுரிமைக்கான அடையாளம் எனக் கூறினீர்கள். இப்போது இந்தச் சட்டத்தை கொண்டு வருகிறீர்கள். மாநிலங்களிடமிருந்து அதிகாரத்தைப் பறித்துக்கொண்டு அனைத்தையும் மத்திய அரசு கையில் வைத்துக்கொள்ளப்போகிறது. இதைத்தவிர வேறு எந்த சாதனையும் இல்லை” என்றார்.

சீமான்
சீமான்

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் பேசிய சீமான், ``எங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. கைலாசா என ஒரு நாடு உருவாகிவிட்டது. குடியுரிமையற்றவர்களாக எங்களை மாற்றினாலும் பிரச்னை இல்லை. எங்கள் அதிபர் நித்யானந்தா இருக்கிறார். `கைலாசா’ன்னு ஒரு நாட்டை அவர் உருவாக்கிவிட்டார். அங்கே போய் இருப்போம்” என்றார் சிரித்தபடியே.