Published:Updated:

காதல் திருமணம்; விபத்தில் சிக்கிய கணவர், வறுமை! - மனு கொடுத்த 2 மணி நேரத்தில் உதவிய நாகை ஆட்சியர்

உதவி
உதவி

அரசு விழாவுக்கு வந்த நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜியிடம் சமூக ஆர்வலர் சிவகுமார், `விபத்தில் சிக்கிய கவியரசனுக்கு சக்கர நாற்காலியும் படுப்பதற்கு வாட்டர் பெட்டும் வேண்டும்’ என மனு கொடுத்தார்.

வேதாரண்யம் அருகே விபத்தில் சிக்கி, படுத்தப்படுக்கையாக இருக்கும் கணவருடன், வருமானமின்றித் தவிக்கும் மனைவி, நாகை ஆட்சியரிடம் உதவி கோரி மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் மாவட்ட ஆட்சியர் எடுத்த நடவடிக்கை அனைவரின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.

மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் உதவி
மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் உதவி

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலம் கிராமத்தைச்  சேர்ந்தவர் சுப்பையன். இவரின் மகன் கவியரசன்  (வயது 26) லாரி ஓட்டநர். கடந்த ஓராண்டுக்கு முன்பு விருத்தாசலம் அருகே லாரி ஓட்டிச் சென்றபோது டயர் பஞ்சர் ஆனதால், அதைச் சரிசெய்யும்போது எதிர்பாராதவிதமாக லாரி இவர்மீது கவிழ்ந்து விபத்தில் சிக்கியிருக்கிறார்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு மாதங்கள் சிகிச்சை  பெற்ற பிறகு மருத்துவர்கள், ``இடுப்பு எலும்புகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டதால் இனி மருத்துவச்  சிகிச்சைகள் பலனளிக்காது" என்று கூறி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். எனவே கடந்த ஓராண்டாகப் படுக்கையில் இருக்கிறார். இவரால் எழுந்து நடக்க முடியாது, இடுப்புக்கு கீழ் உறுப்புகள்  செயலயிழந்துவிட்டதால் நகரக்கூட முடியாத நிலையில் இருக்கிறார்.

கவியரசன் பெற்றோர் எதிர்ப்பை மீறி அருள்நந்தினி என்பவரைக்  காதல் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இந்தத் தம்பதிக்கு ஒரு வயதில் மாதேஷ் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இவர்  காதல் திருமணம் செய்துகொண்டதால், அருள்நந்தினியின் கல்விச்  சான்றிதழ் அனைத்தையும் அவரின் வளர்ப்பு பெற்றோர் ஆத்திரத்தில் தீயிட்டுக் கொளுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அருள்நந்தினி தகுதியான வேலைக்குச் செல்ல முடியாமல் நோயாளியாக  இருக்கும் தன்  கணவரை கவனிக்க வருமானம் இல்லாமல் கைக்குழந்தையுடன் நிற்கதியாக இருக்கிறார்.

அருள்நந்தினியின் வளர்ப்பு பெற்றோர் ``விபத்தில் சிக்கி எதற்கும் உதவாதநிலையிலிருக்கும் கணவனை விட்டுவிட்டு எங்களோடு வந்துவிடு. நாங்கள் நல்ல வாழ்க்கை ஏற்படுத்தித் தருகிறோம்" எனக் கூறியுள்ளனர். ஆனால், காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவனைக் கைவிட்டுவிட்டு வர மறுத்து கணவனுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்துகொண்டு மிகுந்த சிரமத்தில் வாழ்ந்துவருகிறார்.

கவியரசன்
கவியரசன்

இந்தநிலையில் வேதாரண்யத்தில் நடந்த அரசு விழாவுக்கு வந்த நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜியிடம் சமூக ஆர்வலர் சிவகுமார், `விபத்தில் சிக்கிய கவியரசனுக்கு சக்கர நாற்காலியும், படுப்பதற்கு வாட்டர் பெட்டும் வேண்டும்" என மனு கொடுத்தார்.

மனு கொடுக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில்  மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உத்தரவின் பேரில் அவரின் வீட்டுக்கு சக்கர நாற்காலியும் வாட்டர்பெட்டும் அதிகாரிகளால்  வழங்கப்பட்டன. மேலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் துரைமுருகன் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று கவியரசன் குடும்பத்தைச் சந்தித்து  அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்தனர்.

கொரோனா நிவாரணமாக தங்கச் சங்கிலியை வழங்கிய பள்ளி ஆசிரியை; வாங்க மறுத்து ஆட்சியர் செய்த உதவி!

மேலும், வருமானம் இல்லாமல் அந்தக் குடும்பம் இருப்பதால், கவியரசனின் மனைவியின்  கல்விச் சான்றுகளை அவர் பயின்ற பள்ளியில் மீண்டும் பெற்று, அவருக்கு அரசு வேலை கொடுப்பது பற்றியும், அவரது கூரை வீடு சேதமடைந்து மழைநீர் உள்ளே ஊற்றுவதால் அவருக்கு நிரந்தர கான்கிரீட் வீடு அமைத்துக் கொடுப்பது பற்றியும் ஆலோசனை செய்து, இன்னும் ஒரு மாத காலத்தில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என உறுதி அளித்தனர்.

வருமானம் இல்லாமல் வாடிக்கொண்டிருக்கும் இந்தக் குடும்பத்துக்கு ஒரு சிலர் அரிசி, மளிகைச் சாமான்களை வாங்கிக் கொடுத்து ஓராண்டாகக்  காப்பாற்றிவருகின்றனர். மிகவும் துயரமான நிலையிலுள்ள இந்தக் குடும்பத்துக்கு மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்ட நாகை ஆட்சியரின் செயல்பாடு அனைவரின் பாராட்டுதலையும் பெற்றிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு