நாகப்பட்டினத்தை அடுத்த கீச்சாங்குப்பம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 28.07.2021 -ம் தேதி அதிகாலை 1 மணியளவில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் கௌதமன் என்பவருக்குச் சொந்தமான (IND TN 06 MM -10 24) என்ற விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்தப் படகில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கலைச்செல்வன், தீபன்ராஜ், ஜீவா, மாறன், அரசமணி, முருகானந்தம், மோகன், ராமச்சந்திரன்,ஆனந்த் உள்ளிட்ட பத்து நபர்கள் இருந்தனர். இவர்கள் நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 நாட்டிக்கல் தூரத்தில் நேற்று 01.08.2021-ம் தேதி மாலை 4:30 மணி அளவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக எச்சரித்து மேற்படி படகில் இருந்தவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் கலைச்செல்வன் என்ற மீனவரின் இடதுபக்கத் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உடனடியாக மற்ற மீனவர்கள் கலைச்செல்வனை கீச்சாங்குப்பம் மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வந்து, அங்கிருந்து ஆட்டோ மூலம் நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். இன்று (02.08. 2021)அதிகாலை 2:30 மணிக்கு கலைச்செல்வன் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். மற்றவர்களுக்குக் காயம் எதுவும் இல்லை.

இதற்கிடையே இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்தவர்களை எச்சரித்து வானை நோக்கிச் சுட்டதாகவும், அதில் குண்டுச் சிதறல் கலைச்செல்வன் தலையில்பட்டு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.