Election bannerElection banner
Published:Updated:

`கசங்கிய வேட்டி, வெள்ளை ஜிப்பா; பொன்னாருக்கு சீனியர்’ - சுரேஷ்ராஜனின் அமைச்சர் கனவைக் கலைத்த காந்தி!

நாகர்கோவில் பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி
நாகர்கோவில் பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி

தி.மு.க அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ்ராஜன். கடந்த சட்டசபைத் தேர்தலில் நாகர்கோவில் எம்.எல்.ஏ ஆனார். இந்த முறை பா.ஜ.க-வின் எம்.ஆர்.காந்தியிடம் வெற்றியைப் பறிகொடுத்துவிட்டார்.

ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெறும் கனவுடன் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டவர் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான சுரேஷ்ராஜன். ஏற்கெனவே கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்ற சமயத்தில் தி.மு.க அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ்ராஜன். கடந்த சட்டசபைத் தேர்தலில் நாகர்கோவில் எம்.எல்.ஏ ஆனார். இந்த முறை மீண்டும் நாகர்கோவிலில் போட்டியிட்ட சுரேஷ்ராஜன், பா.ஜ.க-வின் எம்.ஆர்.காந்தியிடம் வெற்றியைப் பறிகொடுத்துவிட்டு தளர்ந்துபோய் அமர்ந்திருக்கிறார் சுரேஷ்ராஜன். கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிட்ட மூன்று தி.மு.க வேட்பாளர்களில் பத்மநாபபுரம் தொகுதியில் மனோதங்கராஜ் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறார். இதனால் மனோ தங்கராஜுக்கு அமைச்சர் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

சுரேஷ்ராஜன்
சுரேஷ்ராஜன்

சுரேஷ்ராஜனின் அமைச்சர் கனவைக் கலைத்து வெற்றிபெற்ற எம்.ஆர்.காந்தி அவ்வளவு பெரிய பண பலமோ, அதிகார பலமோ கொண்டவர் அல்ல. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்காகவும், பா.ஜ.கட்சியின் பணிகளுக்காகவும் திருமணம்கூட செய்துகொள்ளாமல் பணியாற்றுபவர். சொந்தமாக வீடுகூட இல்லை. காலில் செருப்புகூட போடுவது இல்லை. கசங்கிய வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா போட்டுக்கொண்டு மாவட்டம் முழுவதும் சுற்றுவார். பா.ஜ.க-வில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கே சீனியர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பா.ஜ.க-வின் தாய் இயக்கமான ஜனசங்கத்தின் மாவட்ட தலைவராக 1967-ம் ஆண்டே பொறுப்புவகித்தவர். 1975-ல் மிசாவில் ஓராண்டு சிறையில் இருந்தவர். ஜனசங்கம் பா.ஜ.க-வாக மாறியபோது 1980-ல் ஒருங்கிணைப்புக்குழுவில் இடம்பெற்றவர். 2001-ல் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக ஆனார். சட்டசபைத் தேர்தலில் ஆறு முறை தோல்வியடைந்து, ஏழாவது முறை வெற்றிபெற்றிருக்கிறார்.

செருப்பு அணியாத எளியவர் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ
செருப்பு அணியாத எளியவர் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ

1980-ல் நாகர்கோவில் சட்டசபைத் தொகுதியிலும், 1984-ல் குளச்சல் தொகுதி, 1989-ல் மீண்டும் நாகர்கோவில் தொகுதி, 2006-ல் மீண்டும் குளச்சல், 2011-ல் கன்னியாகுமரி தொகுதியிலும், 2016-ல் நாகர்கோவில் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2021 தேர்தலில்தான் எம்.ஆர்.காந்தியால் வெற்றிபெற முடிந்தது. இயக்கப் பணிக்காக வாழ்பவர், மிகவும் எளிமையான மனிதர், மூத்த தலைவர் என்ற அனுதாப அலையும் எம்.ஆர்.காந்தி வெற்றிபெற ஒரு காரணமாக அமைந்தது.

குமரி மாவட்டத்தின் பத்மநாபபுரம் தொகுதிதான் 1996-ல் பா.ஜ.க-வுக்கு முதல் எம்.எல்.ஏ-வைக் கொடுத்தது. அதன் பிறகு குமரியிலிருந்து கோட்டைக்குச் செல்லும் பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு