Published:Updated:

'உங்கள் கைவிரல் நீட்டப்பட்டால்... துண்டிக்கப்படும்' - பாஜக-வுக்கு எச்சரிக்கைவிடுத்த திமுக மேயர்

மேடையில் சைகை காட்டும் நாகர்கோவில் மேயர் மகேஷ்

கழுத்தில் கையைவைத்து, துண்டிப்பதுபோல் சைகை காட்டிய மேயர் மகேஷ் தொடர்ந்து, "தெரிந்துகொள், அதைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.

'உங்கள் கைவிரல் நீட்டப்பட்டால்... துண்டிக்கப்படும்' - பாஜக-வுக்கு எச்சரிக்கைவிடுத்த திமுக மேயர்

கழுத்தில் கையைவைத்து, துண்டிப்பதுபோல் சைகை காட்டிய மேயர் மகேஷ் தொடர்ந்து, "தெரிந்துகொள், அதைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.

Published:Updated:
மேடையில் சைகை காட்டும் நாகர்கோவில் மேயர் மகேஷ்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகர தி.மு.க சார்பில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான மகேஷ், தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, முனைவர் பொன்னேரி சிவா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் மாநகராட்சி மேயர் மகேஷ் பேசுகையில், "நான் கவுன்சிலராக இருக்கும் நான்காவது வார்டில் கிராமசபைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு கூட்டத்தைத் தொடங்கிவைக்க வந்திருந்தார். அதற்காகக் கட்சித் தோழர்கள் பார்வதிபுரம் பகுதியில் தி.மு.க கொடிகளைக் கட்டிவைத்திருந்தனர். ஆனால், தி.மு.க கொடிகளுக்கிடையே பா.ஜ.க கொடியைக் கட்டிவைத்திருந்தனர். பா.ஜ.க கொடிகளை இரவோடு இரவாக எங்கள் கழகத் தோழர்கள் அப்புறப்படுத்தினார்கள்.

நாகர்கோவிலில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டம்
நாகர்கோவிலில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டம்

பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்களே... அன்று உங்கள் தலைவர்கள் யாராவது வந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் யாரும் வரவில்லை, வேண்டுமென்றே பிரச்னையைக் கிளப்ப வேண்டும் என்ற நோக்கில் நீங்கள் கொடிகளைக் கட்டியதால் அதை நாங்கள் அப்புறப்படுத்தினோம். நான் வார்டு உறுபினராகவும், மேயராகவும், தி.மு.க மாவட்டச் செயலாளராகவும் இருக்கும் இடத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்தும்போது ஊறுவிளைவிக்க வேண்டும் என்று நினைத்து பா.ஜ.க கொடியை அல்ல... எதையாவது தலையை நீட்டினால்..." எனக் கூறியபடி கழுத்தில் கையைவைத்து துண்டிப்பதுபோல் சைகை காட்டியவர் தொடர்ந்து, "தெரிந்துகொள், அதைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

என்மீது வழக்கு வந்தாலும் பரவாயில்லை. அதைச் சந்திக்க நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். தலைவர் ஆட்சிக்கு ஊறுவிளைவிக்கக் கூடாது என்பதற்காகப் பொறுத்துப்போகிறோம். பா.ஜ.க இந்த மாவட்டத்தில் மதக் கலவரத்தை உருவாக்கி, மாற்றத்தைக் கொண்டுவரலாம் என நினைத்தால் அது நடக்காது. எங்கள்மீது உங்கள் கைவிரல் நீட்டப்பட்டால் துண்டிக்கப்படும்" என ஆவேசமாகப் பேசினார்.

கோட்டாறு காவல்நிலையத்தில் திரண்ட பா.ஜ.க-வினர்
கோட்டாறு காவல்நிலையத்தில் திரண்ட பா.ஜ.க-வினர்

இதற்கிடையே பா.ஜ.க கட்சியினரை மிரட்டும் தொனியில் பேசிய நாகர்கோவில் மேயர் மகேஷ்மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும் எனக் கூறி பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்‌.காந்தி தலைமையில் கட்சித் தொண்டர்கள் நேற்று இரவு கோட்டார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் தி.மு.க - பா.ஜ.க இடையேயான உரசல் அதிகரித்துவருகிறது.