Election bannerElection banner
Published:Updated:

நயினார் நாகேந்திரன்: வேட்பு மனுத்தாக்கலில் முந்தியவர்; பாஜக வேட்பாளர்களில் முதலாமவர்#TNelections2021

நயினார்  நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

அதிமுக-வில் இருந்தபோது 2001 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்; அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். அந்த வகையில் தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர்தான் நயினார் நாகேந்திரன்.

கடந்த காலங்களில் திமுக-வும் அதிமுக-வும் மாறி மாறி வெற்றிபெற்ற தொகுதி திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி. கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு, மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வியுற்ற நயினார் நாகேந்திரன், இந்த முறை அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராகக் களமிறங்கினார். 2016 சட்டசபைத் தேர்தலுக்கு முந்தைய தேர்தல் வரை, திருநெல்வேலி தொகுதியில் யார் வெற்றிபெற்றார்களோ, அவர் சார்ந்த கட்சியே தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வேட்பாளரான ஏ.எல்.எஸ்.லட்சுமணன் வெற்றிபெற்றாலும், அதிமுக-வே ஆட்சி அமைத்தது. இந்தத் தொகுதியில் 1952 முதல் 2016 வரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக-வும், திமுக-வும் தலா ஆறு முறை வெற்றிபெற்றுள்ளன. மூன்று முறை காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. 1986-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் வெற்றிபெற்றார். கடந்த 2016-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க சார்பாகப் போட்டியிட்ட ஏ.எல்.எஸ்.லட்சுமணன் 601 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரனுக்குக் கிடைத்த வாக்குகள் 81,160.

வேட்பு மனுத்தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன்
வேட்பு மனுத்தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பாஜக-வில் இணைந்தார் நயினார் நாகேந்திரன். ஏற்கெனவே இவர் அதிமுக-வில் இருந்தபோது 2001 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். அந்த வகையில் தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். இந்தநிலையில், இந்த முறை எப்படியும் தான் சார்ந்த பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதற்காக, தேர்தலுக்குப் பல மாதங்கள் முன்னரே களப்பணியைத் தொடங்கியிருந்தார். திருநெல்வேலி தொகுதி தனக்குத் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே அவர் பாஜக-வில் இணைந்ததாகச் சொல்லப்பட்டது. இந்தநிலையில், தேர்தல் நெருக்கத்தில் இத்தொகுதி நடிகை குஷ்புவுக்கு ஒதுக்கப்படலாம் என்ற ஒரு பேச்சு எழுந்ததால், முன்னெச்சரிக்கையாக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் முன்னரே, அவர் அவசர அவசரமாக தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தது கட்சித் தலைமையை மட்டுமல்ல, கூட்டணிக் கட்சியான அதிமுக-வையுமே அதிர்ச்சியடையவைத்தது. இத்தொகுதியை பாஜக-வுக்கு ஒதுக்கியதால் அதிமுக-வினர் அதிருப்தி அடைந்திருந்த நிலையில், பழைய நட்பின் அடிப்படையில் அவர்களை ஒருவாறு நயினார் நாகேந்திரன் சமாதானப்படுத்தி, ஒத்துழைப்பைப் பெற்றார். அந்த வகையில் அதிமுக வாக்குகள்தான் அவரது பலமாகவே இருந்தன. மேலும், நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவான தேவர் சமுதாய வாக்குகளைப் பிரிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அமமுக வேட்பாளர் பால்கண்ணன் மனு நிராகரிக்கப்பட்டதும் கூடுதலான சாதகமாகப் பார்க்கப்பட்டது. அதே சமயம், கடந்த 2016 தேர்தலில் பெரிய அளவுக்கு கூட்டணி இல்லாமல் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணனுக்கு இந்த முறை கூட்டணி பலம் அதிகரித்ததால், இருவருக்கும் இடையேயான போட்டி கடுமையாகவே காணப்பட்டது.

ஆனால் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே நிலைமை லட்சுமணனுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது. காலை முதலே தொடர்ந்து முன்னிலையில் இருந்தார் நயினார் நாகேந்திரன் . ஒவ்வொரு சுற்றின் போதும் முன்னிலை வகித்தவர் இறுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட, கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணனைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்த்தபோது பெரிய அளவில் போட்டி இல்லாமல் நயினார் நாகேந்திரனுக்கு வெற்றிமுகமே அமைந்தது. இறுதியில் அனைத்ச்து சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 23,107 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் நயினார் நாகேந்திரன். முதன்முறையாக பாஜக சார்பில் சட்டமன்றம் செல்லவிருக்கும் நயினார் நாகேந்திரன்தான் பாஜக வேட்பாளர்களிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு