Published:Updated:

` ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது!' - 7 பேர் விடுதலையில் தமிழக அரசு

ஜெனிஃபர்.ம.ஆ

ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் குறித்த பதிலை, தமிழக அரசு ஆளுநரிடம் கேட்டறிய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

perarivalan and others
perarivalan and others

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் எனப் பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். சமீபத்தில் இதுதொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், எம்.பி தொல்.திருமாவளவன் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து, எழுவர் விடுதலை தொடர்பான கோரிக்கையை முன்வைத்தனர்.

Perarivalan
Perarivalan

இந்தநிலையில், ஆயுள் தண்டனைக் கைதிகளான தங்களை விடுவிக்கக்கோரி நளினி தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், தங்கள் 7 பேர் விடுதலை தொடர்பாக, உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின் பேரில் தமிழக அமைச்சரவை, ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் குறித்த பதிலை, தமிழக அரசு ஆளுநரிடம் கேட்டறிய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதற்குப் பதிலளித்த தமிழக அரசு, முன்கூட்டியே விடுதலை செய்வது, அரசின் தனி அதிகாரம்தானே தவிர, கைதிகள் அதைத் தங்கள் உரிமையாகக் கேட்டுப் பெற முடியாது எனவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 361படி (குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோர் பதவிக்கான அதிகாரங்கள், சிறப்புச் சட்டப் பாதுகாப்பு பற்றிய ஷரத்துகள் அடங்கியது), தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது எனவும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஏ.நடராஜன் தெரிவித்தார்.

Madras High Court
Madras High Court

இதையடுத்து, நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.