Published:Updated:

``பெரும் பணமோசடிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர் குருதாஸ் தாஸ்குப்தா!” - நல்லகண்ணு இரங்கல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான குருதாஸ் தாஸ்குப்தா நேற்று மறைந்தார். இந்திய தொழிற்சங்க இயக்கம் அதன் ஆதர்ச முகங்களில் ஒருவரை இழந்துள்ளது.

குருதாஸ் தாஸ்குப்தா
குருதாஸ் தாஸ்குப்தா

பிரிவினைக்கு முன்பான வங்கத்தின் Barisal நகரில் 3 நவம்பர் 1936-ம் ஆண்டு பிறந்தவர் குருதாஸ் தாஸ்குப்தா. கல்லூரிக் காலத்தில் மாணவச் செயற்பாட்டாளராகச் செயல்பட்டு வந்தார். தொழிற்சங்கங்களில் பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்தவர், பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டார். அடல் பிகாரி வாஜ்பாய் தொடங்கி மம்தா பானர்ஜி வரை பலருடனும் நட்பு கொண்டவர்.

குருதாஸ் தாஸ்குப்தா
குருதாஸ் தாஸ்குப்தா
Indian Express

அகில இந்தியத் தொழிற்சங்கத்தில் இயங்கிவந்த காலத்தில் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பலகாலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், இரண்டு முறை மக்களவை உறுப்பினராகவும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றப் பணியாற்றியுள்ளார். 2G முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் உறுப்பினராக இருந்தவர். பி.சி சாக்கோ தலைமையிலான அந்தக் குழு அளித்த அறிக்கை பிழையானது எனக் கண்டித்திருந்தார். 2G விவகாரத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தன்னுடைய கடமையை தவறிவிட்டதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

குருதாஸ் தாஸ்குப்தா அவர்களுடனான நினைவுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நம்மிடம் பகிர்ந்து கொண்டார், ``அகில இந்தியத் தொழிற்சங்கத்தைக் கட்டமைத்ததில் குருதாஸ் அவர்களினுடைய பங்கு அளப்பியது. கள அரசியலில் மட்டுமல்லாது நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி சிறந்த நாடாளுமன்றவாதி பட்டமும் பெற்றிருக்கிறார். நாடாளுமன்றவாதியாக மக்கள் நலன் சார்ந்து அவர் எழுப்பிய விஷயங்களுக்காகப் பெரிதும் மதிக்கப்பட்டார். கட்சிகளைக் கடந்து அனைத்துத் தரப்பினருடனும் நல்ல நட்பு பாராட்டி வந்தார். ராஜ்ய சபா உறுப்பினராக மிகப்பெரும் பணமோசடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார். அதற்காக வருமான வரித்துறை கொடுத்த சன்மானத்தைக் கூட பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக அளித்துவிட்டார்.

நல்லகண்ணு
நல்லகண்ணு

நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தபோது பல தருணங்களில் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. தொழிற்சங்கங்களை ஒருங்கிணைப்பதை கடந்து நாடாளுமன்றத்திலும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும் ஒலித்தார். சரியாக நேற்றுதான் அகில இந்தியத் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டதன் நூறாவது ஆண்டு. அதன் சிறப்பு மாநாடு மும்பையில் நேற்று நடந்தது. அதில் குருதாஸ் தாஸ்குப்தா கலந்துகொள்ள இருந்த நிலையில், உடல்நலக் குறைவால் கலந்துகொள்ள முடியாமல் போனது. அவரின் மறைவு செய்தி தொழிற்சங்க இயக்கத்திற்கு மட்டுமல்ல, இடதுசாரி இயக்கத்திற்கும் மிகப்பெரிய இழப்பு" என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் நம்மிடம் பேசுகையில், ``கல்லூரிக் காலம் முதலே இடதுசாரி இயக்கத்தோடு தொடர்புடையவர் குருதாஸ் தாஸ்குப்தா. மாணவ அரசியல் மூலம் உருவான அரசியல் தலைவர்களில் மிகவும் முக்கியமானவர். அவரின் தனித்துவமான விஷயம் அகில இந்தியத் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்தபோது கட்சி, கொள்கை பேதமற்று அனைத்துத் தொழிற்சங்கங்களையும் (பா.ஜ.கவின் தொழிற்சங்கம் உட்பட) ஒருங்கிணைத்து தேசிய அளவிலான தொழிற்சங்கங்களின் மத்திய குழுவை உருவாக்கியது. இன்றுவரை தொழிலாளர் போராட்டங்களில் இதுதான் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது விவசாயத் தொழிலாளர்கள் நிலைபற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவின் தலைவராகச் செயல்பட்டார். இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இவர் தலைமையிலான குழு அளித்த அறிக்கைதான் விவசாயத் தொழிலாளர் உரிமைக்காக இந்தியாவில் அளிக்கப்பட்ட மிக முக்கியமான ஆவணம். அதில் விவசாயத் தொழிலாளர்களுக்கு என்று தனியாக மத்திய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. தொழிற்சங்க இயக்கத்திற்கு இவரின் பங்கு அளப்பறியது, இவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது" என்றார்.

முத்தரசன்
முத்தரசன்

2014 தேர்தலுக்கு முன்பாக கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்களை ராகுல் காந்தியும், நரேந்திர மோடியும் சந்தித்ததைக் கடுமையாகச் சாடியவர், கார்ப்பரேட் மீதான விமர்சனத்தில் சமரசமின்றி இருந்தார். கார்ப்பரேட் சார்புத்தன்மையில் காங்கிரஸ், பா.ஜ.க இரண்டுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இல்லை என வெளிப்படையாகவே விமர்சித்தார். தொழிற்சங்கங்களும், இடதுசாரி இயக்கங்களும் வரலாற்றில் பெரும் சரிவைச் சந்தித்து வருகிற தற்போதைய காலகட்டத்தில் குருதாஸ் தாஸ்குப்தா போல பலர் தேவைப்படுகின்றனர்.