Published:Updated:

ஜெயலலிதா ஊழல் வழக்கு: `ரூ.3000 கோடி சொத்து மதிப்பு!’ - ஸ்டாலினிடம் நல்லம நாயுடு வைத்த வேண்டுகோள்

தமிழக முதல்வர் ஸ்டாலினை, நல்லம நாயுடு அவருடைய மகனுடன் போய் நேரில் சந்தித்திருக்கிறார். அப்போது முதல்வரிடம் மனம் விட்டு 20 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

பெரவள்ளூரில் உள்ள தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் எஸ்.பி. நல்லம நாயுடு வீட்டில் கடந்த ஜூன் மாதம் அவரை பேட்டிக்காக சந்தித்தோம்.

கணீரென்ற குரல். லஞ்ச ஊழலுக்கு எதிரான போர்க்குணம். ஆட்சியாளர்கள் கொடுத்த டார்ச்சர்களை ஊதித்தள்ளிய மனோதிடம் ஆகியவற்றை அவரிடம் கண்டோம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தவர் லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் எஸ்.பி. நல்லம நாயுடு. ஜெயலலிதாவுக்கு எதிரான ஊழல், லஞ்ச புகார்களை விசாரித்து, அவரை கைது செய்து, குறுகிய காலத்தில் அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகையையும் இவர் தாக்கல் செய்தார். நல்லம நாயுடு போட்ட ஸ்கெட்சில் ஜெயலலிதாவும் அவரின் கூட்டாளிகள் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் தப்பிக்கவே முடியவில்லை.

 நல்லம நாயுடு
நல்லம நாயுடு

பிரபல வழக்கறிஞர்களை வைத்து ஜெயலலிதா எவ்வளவோ வாதாடியும் அசைக்கமுடியாத ஆதாரங்கள் இருந்ததால், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கும் அவரின் கூட்டாளிகளுக்கும் தண்டனை அறிவித்தார் நீதிபதி குன்ஹா.

இதை எதிர்த்து பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீடு விசாரணையில் ஜெயலலிதாவையும் அவரின் கூட்டாளிகளையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார் நீதிபதி குமாராசாமி. ஆனால், கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 2017-ம் வருடம் ஜெயலலிதா, அவரின் கூட்டாளிகளுக்கு தண்டனை உறுதிபடுத்தப்பட்டது. இந்த தீர்ப்பு வெளியாகும் முன், உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா இறந்துபோனார். அதே ஊழல் புகாரில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறைச்சாலையில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்திருக்கிறார்கள்.

 நல்லம நாயுடு
நல்லம நாயுடு

தனது போலீஸ் பணியில் இருந்து ரிட்டயர்டு ஆன பிறகும் ஜெயலலிதா வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தியிருக்கிறார். சென்னை, பெங்களூரு, டெல்லி என்று வெவ்வேறு நீதிமன்றங்களில் இந்த வழக்கு நடந்தபோது, தனது சொந்த செலவில், தனது மகன் சரவணணை உடன் அழைத்துப்போய் வழக்கிற்கு தேவைப்பட்ட பாயின்டுகளை அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு தந்து உதவியிருக்கிறார். இந்த வழக்கு தி.மு.க ஆட்சியில் போடப்பட்டாலும், அதன் விசாரணை நடந்தபோது அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததது. 1997 முதல் 2017 வரை சட்டப்போராட்டமே நடத்தினார் நல்லம நாயுடு. அ.தி.மு.க ஆட்சி நடந்த போது ஏகப்பட்ட மிரட்டல்கள். குடும்பத்தினருக்கு பாதிப்புகள். இவையெல்லாம் நினைவுப்படுத்தி நம்மிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார் நலலம நாயுடு. அவரின் மிஷன் இன்னும் ஒயவில்லை என்கிற தலைப்பில் விரிவான பேட்டி கொடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Vikatan

``ஜெயலலிதா, அவரின் கூட்டாளிகளுக்கு தண்டனையெல்லாம் வாங்கிக்கொடுத்துவிட்டேன். ஊழல் பணத்தில் சேர்த்த சொத்துக்களை கைப்பற்றிவிட்டோம். ஆனால், அவற்றை விற்று நாட்டு உடமை ஆக்கவேண்டும். அப்போதுதான் ஊழலுக்கு எதிரான என் மிஷன் முடியும்'' என்று ஆக்ரோஷமாக பேட்டிகொடுத்தார். அந்தப் பேட்டி ஜூ.வி-யிலும், விகடன் டி.வி-யூடியூப் சேனலிலும் வெளியானது.

நேர்மைக்கு இலக்கணமாக திகழ்ந்த நல்லம நாயுடு, உடல்நலக்குறைவு காரணமாக இன்று (16.11.2021) அதிகாலை சென்னை அருகே பெரவள்ளூரில் உள்ள அவரின் இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 83.

இரண்டு வாரம் முன்பு, தமிழக முதல்வர் ஸ்டாலினை, நல்லம நாயுடு அவருடைய மகனுடன் போய் நேரில் சந்தித்திருக்கிறார். அப்போது முதல்வரிடம் மனம் விட்டு 20 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Stalin M.K
Stalin M.K

``ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் 1997-ம் வருட நிலவரப்படி 66 கோடி ரூபாய் மதிப்புள்ள 146 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அவற்றின் இன்றைய மதிப்பு சுமார் ரூ.3000 கோடிகளுக்கு மேல்! அவைகளை பறிமுதல் செய்து, ஏலம் விட்டு நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்று நீதிமன்றம் சொல்லியது. இது நடந்தது 2017-ம் வருடம். அ.தி.மு.க அரசு ஆட்சியில் இருந்ததால், அந்த விவகாரத்தை வேண்டுமென்றே கிடப்பில் போட்டுவிட்டனர். நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. உங்கள் அப்பா காலத்தில் போடப்பட்ட வழக்கு. அவர் மகனா நீங்கள் இப்போது முதல்வராக இருக்கிறீர்கள். நீங்களாவது, அந்த சொத்துக்களை விற்று அரசு கஜானாவில் சேர்க்கவேண்டும். அதற்கான நடவடிக்கை எடுங்கள் '' என்றாராம் நல்லமநாயுடு.

உடனே, சட்டநிபுணர்களை அழைத்த முதல்வர், அதுதொடர்பான விவரங்களை என் கவனத்துக்கு கொண்டுவாருங்கள் என்று உத்தரவிட்டாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு