Published:Updated:

நாம் தமிழர் கட்சி: தயாராகும் வேட்பாளர் பட்டியல் - உள்ளாட்சித் தேர்தலுக்கு சீமானின் திட்டம் என்ன?

நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி

மற்ற கட்சிகளுக்கு முன்பாக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டனர் நாம் தமிழர் கட்சியினர். இது குறித்து, அந்தக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே...

''பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., உட்கட்சிப் பிரச்னையைச் சமாளிக்க முடியாம டெல்லிக்குப் படையெடுத்துட்டு இருக்காங்க. ஆளும்கட்சியோ கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாம திணறிட்டு இருக்காங்க. ஆனா நாங்க ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகிட்டோம். ஒன்றிய, மாவட்ட அளவுல கலாந்தாய்வு நடத்திக்கிட்டு இருக்கோம். தேர்தல் தேதி அறிவிச்சவுடனே, எங்க கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியாகிடும்'' என சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகான தங்களின் கட்சி நடவடிக்கைகள் குறித்து மிகவும் உற்சாகமாகப் பேசுகின்றனர் நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகிகள்.

 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாளை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் சீமான்  செம்பனார் கோவில் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த போது...
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாளை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் சீமான் செம்பனார் கோவில் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த போது...

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 30,41,974 (6.6%) வாக்குகள் பெற்று தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. 2016 தேர்தலில், ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்தாயிரத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெறுவதே அந்தக் கட்சிக்குப் பெரிய விஷயமாக இருந்தது. பல தொகுதிகளில் மூன்றிலக்க வாக்குகளையே பெற்றது. ஆனால், 2021 தேர்தலில் அது அப்படியே மாறியிருக்கிறது. போட்டியிட்ட 234 தொகுதிகளில் 183 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்தான் மூன்றாமிடம்.

தவிர, நாற்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை ஒரு தொகுதியிலும், முப்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை மூன்று தொகுதிகளிலும், இருபதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை 19 தொகுதிகளிலும், பதினைந்தாயிரத்துக்கும் அதிகமாக 36 தொகுதிகளிலும், பத்தாயிரத்துக்கும் அதிகமாக 103 தொகுதிகளிலும், 6-9 ஆயிரம் வாக்குகளை 68 தொகுதிகளிலும் பெற்றது. ஐந்தாயிரத்துக்கும் குறைவாக வெறும் நான்கு தொகுதிகளில் மட்டுமே பெற்றது. 2016 தேர்தலில், கடலூர் தொகுதியில் போட்டியிட்டு, வெறும், 12,497 வாக்குகளை மட்டுமே பெற்ற சீமான், இந்தமுறை கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

நாம் தமிழர் மேடையில் சீமான்
நாம் தமிழர் மேடையில் சீமான்

மாற்றத்தை முன்வைத்துக் களமிறங்கிய மக்கள் நீதி மய்யம் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட குறைவான வாக்குகளைப் பெற, நாம் தமிழர் கட்சியோ கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமான வாக்குகளைப் பெற்றது. அதற்கு, கிராம அளவிலான அந்தக் கட்சிக்கு இருக்கும் கட்டமைப்பே காரணமாகச் சொல்லப்பட்டது. இந்தநிலையில், மற்ற கட்சிகளுக்கு முன்பாக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளையும் அந்தக் கட்சியினர் தொடங்கிவிட்டனர். இது குறித்து, அந்தக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``எங்கள் கட்சியில் விருப்ப மனு வாங்கும் பழக்கம் எப்போதும் கிடையாது. ஆனால், பகுதி நிர்வாகிகளிடமிருந்து, யாரை வேட்பாளராக நிறுத்தலாம் எனப் பரிந்துரைகள் வாங்குவோம். சட்டமன்றத் தேர்தல் என்றால், தொகுதிப் பொறுப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் வாங்குவோம். உள்ளாட்சித் தேர்தல் என்பதால் முதலில் தொகுதி அளவிலும், பிறகு ஒன்றிய அளவிலும் கலந்தாய்வு நடத்தி பரிந்துரைப் பட்டியலை மாவட்ட நிர்வாகிகளுக்கு அனுப்புவார்கள். பிறகு, மாவட்ட அளவில் கலந்தாய்வு நடத்தி, அந்தப் பரிந்துரைகள் தலைமைக்கு வரும். பிறகு அண்ணன் சீமான், யார் வேட்பாளர் என்பதைத் தேர்வு செய்வார். தற்போது மாவட்டவாரியாக பரிந்துரைகள் வந்துகொண்டிருக்கின்றன. தேர்தல் தேதியை அறிவித்தவுடனே வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிடும்.

நாம் தமிழர் கட்சி  (2021 சட்டமன்றத் தேர்தல் பிரசார படம்)
நாம் தமிழர் கட்சி (2021 சட்டமன்றத் தேர்தல் பிரசார படம்)

ஆனால், பரிந்துரைப் பட்டியலில் பெயர் இருக்கும் தம்பி, தங்கைகள் இப்போதே களத்தில் இறங்கி வேலைகளைத் தொடங்கிவிட்டனர். காரணம், மக்களைச் சந்திப்பது, அவர்களிடம் கட்சிக் கொள்கைகளை எடுத்துச் செல்வது, வாக்கு கேட்பது என்பது எங்கள் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ஒரு கொண்டாட்டமாக மாறிவிட்டது. தவிர, கடந்த உள்ளாட்சித் தேர்தலில், ஊராட்சி அளவில் வெற்றிபெற்ற எங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் மரியாதை, மற்ற உறுப்பினர்களிடமும் தேர்தலில் நிற்க வேண்டும், வெல்ல வேண்டும் என்கிற உணர்வைக் கொடுத்திருக்கிறது.

3.8 டு 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி! - நாம் தமிழர் சாதித்தது எப்படி?

தேர்தல் நடைபெறவிருக்கிற ஒன்பது மாவட்டங்களுக்கு அண்ணன் சீமான் சுற்றுப்பயணம் செல்லவும் திட்டமிட்டிருக்கிறார். இந்தத் தேர்தலிலும் சரிபாதி இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்க முடிவு செய்திருக்கிறார்.

சீமான்
சீமான்

இதுவரைக்கும், எங்கள் கட்சியைச் சேர்ந்த 32 பேர் ஊராட்சி மன்றத் தலைவர்களாகவும், 40 பேர் ஊராட்சி மன்ற உறுப்பினர்களாகவும் ஒரு ஒன்றியக் கவுன்சிலரும் இருக்கின்றனர். கண்டிப்பாக வரும் உள்ளாட்சித் தேர்தலில் அந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். காரணம், கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்தத் தொகுதி, அந்தத் தொகுதி என்றில்லாமல், தமிழகத்தின் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களுக்குக் கணிசமான வாக்குகள் கிடைத்தன. அதன் முழுமையான பலனை, வெற்றியை இந்த உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் நிச்சயம் பெறுவோம்'' என்கிறார்கள் நம்பிக்கையோடு.

அடுத்த கட்டுரைக்கு