Published:Updated:

புதுச்சேரி: `பதவியும் இல்லை; தொகுதியும் இல்லை!’ - பா.ஜ.க-வுக்குத் தாவிய நமச்சிவாயம் அப்செட்

பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் நமச்சிவாயம
பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் நமச்சிவாயம

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இணைந்திருப்பதால் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தின் முதல்வர் கனவு தகர்ந்துபோயிருக்கிறது. அதேபோல அவர் போட்டியிட நினைத்திருந்த மண்ணாடிப்பட்டு தொகுதிக்கும் என்.ஆர்.காங்கிரஸ் குறிவைத்திருப்பதால் துவண்டு போயிருக்கிறார் நமச்சிவாயம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முதல்வர் பதவிக்காக காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பா.ஜ.க-வில் இணைந்தார். அதன் பிறகு புதுச்சேரி பா.ஜ.க அலுவலகத்தில் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, ``நமச்சிவாயம் தலைமையில் தேர்தலைச் சந்திப்போம்” என்று பேசி குதூகலப்படுத்தினார். என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்குள் வந்தாலும், பா.ஜ.க-வின் ராஜதந்திர வியூகம் கண்டிப்பாகத் தன்னை முதலமைச்சராக்கும் என்று நம்பினார் நமச்சிவாயம்.

பா.ஜ.க-என்.ஆர்.காங்கிரஸ்
பா.ஜ.க-என்.ஆர்.காங்கிரஸ்

இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் வில்லியனூர் தொகுதியில் இந்த முறை பா.ஜ.க சின்னத்தில் போட்டியிட்டால் கண்டிப்பாக மண்ணைக் கவ்வுவோம் என்று நினைத்த நமச்சிவாயம், வன்னியர்கள் அதிகம் வசிக்கும் மண்ணாடிப்பட்டு தொகுதியைக் குறிவைத்து சத்தமில்லாமல் தேர்தல் பணிகளைத் தொடங்கினார். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியுடன்தான் தேர்தலைச் சந்திக்க விரும்பியது பா.ஜ.க. ஆனால், முதல்வர் பதவி என்ற வாக்குறுதியுடன் காங்கிரஸிலிருந்து அழைத்துவரப்பட்டிருக்கும் நமச்சிவாயம் அக்கட்சியில் இருப்பதாலும், கேட்ட தொகுதிகளைத் தரத் தயங்கியதாலும் பா.ஜ.க-வுக்கு பிடி கொடுக்காமல் சுற்றலில்விட்டார் ரங்கசாமி.

ஆனால் `என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி இல்லையென்றால் புதுச்சேரியில் அனைத்துத் தொகுதிகளிலும் நாம் டெபாசிட் இழப்பது உறுதி’ என்று உள்ளூர் நிர்வாகிகள் பா.ஜ.க தலைமையிடம் கிசுகிசுத்திருக்கிறார்கள். அதையடுத்து புதுச்சேரியில் எப்படியாவது ஆட்சியை அமைத்துவிட வேண்டும் என்று காய்நகர்த்திவந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரங்கசாமியை நேரடியாகத் தொடர்புகொண்டு ”நீங்கள்தான் முதல்வர். 16 தொகுதிகளை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று ஒரே போடு போட மகிழ்ச்சியுடன் கூட்டணிக்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறார் ரங்கசாமி.

இந்த விவகாரத்தில் கடுப்பான முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், ``காங்கிரஸ் கட்சி செய்ததைத்தான் இப்போது நீங்களும் செய்கிறீர்கள். உங்கள் கட்சியில் இணைந்ததால்தான் சிட்டிங் தொகுதியை விட்டுவிட்டு மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு மாறுகிறேன். ஆனால் நீங்கள் இப்படிச் செய்கிறீர்களே..” என்று நிர்மல்குமார் சுரானாவிடம் குமுறியிருக்கிறார்.

பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் நமச்சிவாயம்
பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் நமச்சிவாயம்

அதற்கு, ``நீங்கள் நினைத்தது கண்டிப்பாக நடக்கும். அதேபோல மண்ணாடிப்பட்டு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பதால் அவர்கள் கேட்கிறார்கள். அதனால் இந்தமுறை நீங்கள் வில்லியனூர் தொகுதியிலேயே நில்லுங்கள். உங்கள் வெற்றியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று சுரானா வீசிய அடுத்த குண்டில் நொந்துபோனார் நமச்சிவாயம். அதன் தொடர்ச்சியாக மார்ச் 9-ம் தேதி நிர்மல்குமார் சுரானா, ரங்கசாமி, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்கள் முன்னிலையில் ஜனநாயகக் கூட்டணியை உறுதி செய்தனர். அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்து தனது எதிர்ப்பைக் காட்டினார் நமச்சிவாயம். ஆனால் தலைவலியால்தான் வர முடியவில்லை என்று அவரைத் தொடர்புகொண்ட செய்தியாளர்களிடம் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மல்குமார் சுரானா, ``தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு ரங்கசாமி தலைமை ஏற்பார். அவரது தலைமையில் தேர்தலைச் சந்திப்போம். 14 தொகுதிகளை நாங்களும் அ.தி.மு.க-வும் பிரித்துக்கொள்வோம்” என்றார். அப்போது முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை முன்னிறுத்துவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ``தேர்தலுக்குப் பிறகு எங்கள் கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் சேர்ந்து அதை முடிவெடுப்பார்கள்” என்று முடித்துக்கொண்டார். தொடர்ந்து நிர்மல் குமார் சுரானாவும், ரங்கசாமியும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர்.

அதையடுத்து நமச்சிவாயத்தை நேரில் சென்று சந்தித்த சுரானா, ``மண்ணாடிப்பட்டு தொகுதியை அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் இருவருமே கேட்கிறார்கள். ஆனால் அதை எப்படியாவது உங்களுக்கு வாங்கித் தர முயன்றுகொண்டிருக்கிறேன்” என்று சமாதானப்படுத்தி அழைத்துவந்திருக்கிறாராம். நம்பி வந்த நமச்சிவாயத்துக்கு முதல்வர் பதவியைத்தான் உறுதிப்படுத்த முடியவில்லை. கேட்ட தொகுதியையாவது கொடுத்துவிட வேண்டுமென்று தவித்துக்கொண்டிருக்கிறாராம் நிர்மல்குமார் சுரானா.

புதுச்சேரி: `சங்கடங்களைத் தீர்க்கும் விநாயகப் பெருமான்!’- ஜெ.பி.நட்டாவைப் புகழ்ந்த நமச்சிவாயம்

2006-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த ரங்கசாமி, சொந்தக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களை மதிக்காமல் ஒன் மேன் ஆர்மியாக வலம்வந்தார். அதனால் அவருக்கு எதிராக அமைச்சர்கள் ஒன்றிணைந்து அவரது முதல்வர் பதவியைப் பறித்தனர். அந்தக் கோபத்தில்தான் என்.ஆர்.காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்தார் ரங்கசாமி. அப்போது அவரது முதல்வர் பதவி பறிபோகக் காரணமாக இருந்த அமைச்சர்களில் ஒருவர்தான் நமச்சிவாயம்.

இந்தப் பழைய சம்பவங்கள் அனைத்தையும் நினைத்துக் குழம்பிப்போயிருக்கும் நமச்சிவாயம், ’எதிர்பார்த்த பதவியும் கிடைக்கவில்லை, கேட்ட தொகுதியும் கிடைக்கவில்லை’ என்று மெல்லமும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்துவருகிறாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு