Election bannerElection banner
Published:Updated:

24 வருடங்களுக்குப் பிறகு போட்டியிடும் திமுக; ஹாட்ரிக் வெற்றியை நோக்கி அதிமுக - நாமக்கல் கள நிலவரம்

நாமக்கல்
நாமக்கல் ( நா.ராஜமுருகன் )

பாஸ்கர் தொகுதியில் ஓரளவு திட்டங்களை செயல்படுத்தியிருந்தாலும், மறைமுகமாக மக்களிடையே அதிருப்தியே நிலவுகிறது. காரணம், நாமக்கல் எம்.பி ஏ.கே.பி.சின்ராஜ், அவ்வப்போது எம்.எல்.ஏ நிதியில் கட்டப்பட்ட கட்டடங்கள், தரமற்ற சாலைகளை ஆய்வு செய்து, அதில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் 24 வருடங்களுக்கு பிறகு, தி.மு.க நேரடியாக போட்டியிடுகிறது. அ.தி.மு.க-வோ, ஹாட்ரிக் வெற்றிக்கான உத்வேகத்தில் இருக்கிறது. நாமக்கல் சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக கே.பி.பி.பாஸ்கர், வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். தி.மு.க சார்பில், நாமக்கல் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் பி.இராமலிங்கத்துக்கு சீட் கிடைத்திருக்கிறது.

நாமக்கல்
நாமக்கல்
நா.ராஜமுருகன்

நாமக்கல் தொகுதி, கடந்த 2006 - ம் ஆண்டு தேர்தல் வரை தனித் தொகுதியாக இருந்தது. கடந்த 2011 - ல் இருந்து பொதுத் தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 2001, 2006 சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய, தற்போதைய திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார் வெற்றி பெற்று இங்கு எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேபோல், கடந்த 2011, 2016 தேர்தல்களில் அ.தி.மு.க வெற்றி பெற்று, கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ.வாக உள்ளார். 2011- ல் தி.மு.க கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் தலைவரான தேவராசன் போட்டியிட்டு, தோல்வியடைந்தார். அடுத்து, 2016 - ல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் ஆர்.செழியன் போட்டியிட்டு, தோல்வியடைந்தார். கடந்த, 1996 - ம் ஆண்டு தி.மு.க சார்பில் வேலுச்சாமி என்பவர் களமிறங்கி, வெற்றி பெற்றார். அதன் பிறகு, கூட்டணி கட்சிகளுக்கே நாமக்கல் தொகுதியை தி.மு.க தலைமை ஒதுக்கி வந்தது. ஆனால், 'இந்தமுறை கண்டிப்பாக நாமக்கல்லை தி.மு.கவுக்கு ஒதுக்க வேண்டும்' என்று தி.மு.க-வினர் தலைமைக்கு வலியுறுத்தி வந்தனர். இதனால், தி.மு.க தலைமையும், பி.இராமலிங்கத்தை வேட்பாளராக அறிவித்தது.

கே.பி.பி.பாஸ்கர் (நாமக்கல் அ.தி.மு.க எம்.எல்.ஏ)
கே.பி.பி.பாஸ்கர் (நாமக்கல் அ.தி.மு.க எம்.எல்.ஏ)
நா.ராஜமுருகன்

தி.மு.கவை பொறுத்தமட்டில், வேட்பாளராகியிருக்கும் பி.இராமலிங்கம், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளராக இருக்கிறார். நாமக்கல் தொகுதி மாவட்டப் பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ.காந்திச்செல்வன் ஆகிய இருவரில் யாரோ ஒருவருக்கு தான் சீட்' என்று சொல்லப்பட்டது. ஆனால், 'காந்திச்செலவனும், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் ராஜேஷ்குமாரும், எலியும், பூனையுமாக இருக்கிறார்கள். ராஜேஷ்குமாருக்கு சீட் வழங்கினால், காந்திச்செல்வனும், காந்திச்செல்வனுக்கு சீட் வழங்கினால், ராஜேஸ்குமாரும் பரஸ்பரம் உள்ளடி பார்த்து, ஒருவர் மற்றவரை தோற்கடித்துவிடுவார் என்பதால் தான், இருவருக்கும் பொதுவானவரான இராமலிங்கத்துக்கு சீட் வழங்கப்பட்டது' என்று இராமலிங்கம் சீட் பெற்ற பின்னணியை திமுக-வினர் விவரிக்கிறார்கள். ராமலிங்கம் கோஷ்டி சேர்க்காதவர், அமைதியானவர், 'பசை'யுள்ள பார்ட்டி என்பது அவருக்கு ப்ளஸாக வரிசைகட்டுகின்றன.

`இங்கு வெற்றி பெறுவது கௌரவப் பிரச்னை!' - கரூரில் மோதும் செந்தில் பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இத்தொகுதியில் கவுண்டர், வன்னியர், பட்டியலினத்தவர், முதலியார் சமூகத்தினர் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையாக கவுண்டர் சமூகத்தினரும், பட்டியலினத்தவரும் உள்ளனர். கோழிப் பண்ணை மற்றும் அதனை சார்ந்த உப தொழில்கள், சரக்குப் போக்குவரத்து, ஜவ்வரிசி ஆலைகள், லாரி கூண்டு கட்டும் தொழில் ஆகிய இங்கு பிரதான தொழில்கள்.

இவை தவிர, கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இத்தொகுதிக்கு உட்பட்ட காவிரிக் கரையில் அமைந்துள்ள மோகனூரில் கரும்பு, வாழை, நெல் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த தொழில் சம்பந்தப்பட்டவர்களை கவரும் வகையில் வாக்குறுதி கொடுத்து, வாக்குகள் கேட்பவர்களுக்கு வெற்றிக்கான சாத்தியம் இருக்கிறது.

ராமலிங்கம் (நாமக்கல் தி.மு.க வேட்பாளர்)
ராமலிங்கம் (நாமக்கல் தி.மு.க வேட்பாளர்)
நா.ராஜமுருகன்

நாமக்கல் தொகுதியில் செலம்ப கவுண்டர் பூங்கா, கொண்டிச்செட்டிப்பட்டி ஏரியில் அமைக்கப்பட்ட பூங்கா, கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் அமைக்கப்பட்ட புதிய சாலைகள், சாக்கடைக் கால்வாய்கள், அரசு சட்டக் கல்லூரியை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது, அரசு மருத்துவமனையை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தியது உள்ளிட்ட திட்டங்களை முன்னிறுத்தி, வாக்கு சேகரித்து வருகிறார் பாஸ்கர்

தொகுதிக்காக அவர் செய்த வேலை ஒருபுறம் இருந்தாலும், மறைமுகமாக மக்களிடையே அதிருப்தியே நிலவுகிறது. காரணம், நாமக்கல் திமுக எம்.பி., ஏ.கே.பி.சின்ராஜ், அவ்வப்போது எம்.எல்.ஏ நிதியில் கட்டப்பட்ட கட்டடங்கள், தரமற்ற சாலைகளை ஆய்வு செய்து, அதில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். இதனால், பாஸ்கரின் 'திட்டப்பணிகள்' பல இடங்களில் சந்தி சிரிக்கின்றன. இது அவருக்கு பின்னடவை ஏற்படுத்தியிருக்கிறது.

நாமக்கல் தொகுதியில் தீர்க்கப்பட வேண்டிய ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன. புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது நாமக்கல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. நாமக்கல் முதலைப்பட்டி தொடங்கி சேந்தமங்கலம் சாலை வழியாக துறையூர் சாலை, திருச்சி சாலை, லத்துவாடி, கரூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலான சுற்றுவட்டச்சாலை திட்டம் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. கொசவம்பட்டி ஏரி ரூ. 40 கோடியில் புனரமைக்கப்படும் என அறிவித்தபோதும் திட்டம் தொடங்கப்படாமல் உள்ளது. நாமக்கல் மக்களுக்கு நீராதாரமாக விளங்கிய கொசவம்பட்டி ஏரி குப்பைகள், கழிவுகள் தேங்கும் கூடாரமாக உள்ளது. மோகனூர் சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை பெற்று தராதது என்று தொகுதியில் பிரச்னைகளின் பட்டியல் ஏராளம். தீர்க்கப்படாத மக்களின் பிரச்னை தான் ராமலிங்கத்தின் அஸ்திரங்களாக உள்ளன. இது ராமலிங்கத்துக்கு ஒரு ப்ளஸ்.

நாமக்கல் பேருந்து நிலையம்
நாமக்கல் பேருந்து நிலையம்
நா.ராஜமுருகன்

ஆனால், தங்களுக்கு சீட் கிடைக்காத கோபத்தில் இருக்கும் காந்திச்செல்வனும், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் ராஜேஸ்குமாரும், ராமலிங்கத்தின் வெற்றிக்காக இறங்கி வேலை செய்வார்களா என்பது கேள்விக்குறியே என்கின்றன திமுக நிர்வாகிகள்.

ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு இங்கு கணிசமாக வாக்கு வங்கி இருக்கிறது. கடந்த, நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட அந்த கட்சியை சேர்ந்த ஏ.கே.பி.சின்ராஜ், நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 40,000 வாக்குகள் கூடுதலாக பெற்றார். ராமலிங்கத்துக்கு இது கூடுதல் பலமாக இருக்கிறது.

இருவரும் தங்களது வெற்றிக்காக கடுமையாக வேலை செய்கிறார்கள். ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க, பாஸ்கர் வைட்டமின் 'ப'வை தண்ணீராக செலவழிக்க ஆரம்பித்திருக்கிறார் என்கின்றனர். ராமலிங்கமும் தனது வெற்றிக்காக, பணத்தை தாராளமாக புழங்கவிடுகிறார் என்ற தகவலும் வருகிறது. இப்போதைய சூழலில், நாமக்கல் தொகுதியில் முதல்கட்ட பிரசார ரேஸில் இழுபறி நிலையே நிலவுகிறது. போகப்போகத்தான் நாமக்கல் தொகுதியில் வெல்லப்போவது யார் என்ற தெளிவு கிடைக்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு