Published:Updated:

`நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிதான் கொரோனா பரவலுக்குக் காரணம்!’ - கொதிக்கும் சிவசேனா

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப் ( ANI )

``எந்தவித திட்டமும் இல்லாமல் ஊரடங்கை தளர்த்துவதற்கான பொறுப்பு மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசிடம் நிலவும் இந்தக் குழப்பம் நெருக்கடியை இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளும்.”

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 1,80,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா பாதிப்பால் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம்தான் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இதையடுத்து தமிழகம், டெல்லி, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குஜராத்துக்கு வந்ததுதான் கொரோனா பரவலுக்குக் காரணம் என சிவ சேனாவின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட நமஸ்தே ட்ரம்ப் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதை, பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த மாதம் அதாவது மார்ச் 20-ம் தேதி குஜராத்தில் முதல் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதுதொடர்பான விமர்சனங்கள் ஏற்கெனவே இருந்துவரும் நிலையில் சஞ்சய் ராவத், ``குஜராத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்கக்கூடிய கூட்டத்தால்தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதை மறுக்க முடியாது. ட்ரம்புடன் வந்த சில அதிகாரிகள், டெல்லி மற்றும் மும்பை பகுதிகளுக்குச் சென்றனர். இது அங்கும் வைரஸ் பரவ வழிவகுத்தது” என்று கூறியுள்ளார்.

`சீன மாணவர்களுக்குத் தடை விதித்த அமெரிக்கா!' - ட்ரம்ப் நடவடிக்கையைச் சாடும் எதிர்க்கட்சிகள்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தவறியதைக் காரணமாகக்கூறி மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டுவருவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விமர்சித்த அவர், ``கொரோனா வைரஸ் தொடர்பான நெருக்கடிகளைக் கையாள்வது ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான அடிப்படியாக இருந்தால், பா.ஜ.க ஆட்சி செய்வது உட்பட 17 மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும். வைரஸைக் கட்டுப்படுத்த எந்தவித திட்டமும் இல்லாததால் மத்திய அரசும் இந்த விஷயத்தில் தோற்றுவிட்டது. எந்தவொரு திட்டமும் இல்லாமல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது, எந்தவித திட்டமும் இல்லாமல் ஊரடங்கை தளர்த்துவதற்கான பொறுப்பு மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசிடம் நிலவும் இந்தக் குழப்பம் நெருக்கடியை இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளும்” என்று கடுமையாக விமர்சனங்களை வைத்துள்ளார்.

பா.ஜ.க-வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாராயன ராணே சமீபத்தில் மகாராஷ்டிராவின் ஆளுநரான பி.எஸ்.கோஷ்யாரியை சந்தித்து, `சிவசேனா தலைமையிலான ஆட்சி கொரோனா வைரஸ் தொடர்பான நெருக்கடியைக் கையாள்வதில் தோல்வியடைந்துள்ளது. எனவே, ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர வரண்டும்’ எனக் கோரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பா.ஜ.க-வின் உறுதித்தன்மை குறித்து பேசிய சஞ்சய், ``மாநிலத்தில் ஆளும் கட்சிகளிடையே உள்மோதல்கள் இருந்தாலும் இதனால், அரசுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. கூட்டணிக் கட்சிகள் இணைந்திருப்பதுதான் ஆட்சி தொடர்ந்து நடப்பதற்கான வழி என்பதை அறிந்துள்ளனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உத்தவ் தாக்கரே - சரத் பவார்
உத்தவ் தாக்கரே - சரத் பவார்

தொடர்ந்து பேசிய அவர், ``தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க-வும் சிவசேனாவும் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது இருகட்சிகளுக்கும் இடையில் உள்மோதல்கள் இருந்தது. ஆனால், ஐந்தாண்டு ஆட்சியையும் நிறைவு செய்தது. ஆழமான உள்கட்சி மோதல்கள் இருந்தபோதும் ஃபாட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி வீழ்ச்சியடையவில்லை என்றால் தற்போதுள்ள ஆட்சி எப்படி வீழ்ச்சியடையும்?” என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும், ``மூன்று கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்கி ஆட்சியைக் கலைப்பது தொடர்பான பா.ஜ.க-வின் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்டன. தற்போது, எதிர்க்கட்சிகள் ஏதாவது நடந்து அரசாங்கம் கலையும் என நம்புகின்றன. தாக்கரேவின் அரசுக்கு அடித்தளமிட்டவர் முக்கிய தலைவர் சரத் பவார். அவரால் மட்டுமே எதிர்காலத்தைக் கணிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

பவாரின் `பவர்' அரசியல்; விட்டுக்கொடுத்த உத்தவ்! - இலாகா பிரிப்பில் சிவசேனா போட்ட `பிஎம்சி' கணக்கு
அடுத்த கட்டுரைக்கு