Election bannerElection banner
Published:Updated:

`சிம்மாசனத்தில் அமரவைத்த சின்னம்மா... இதுதான் விசுவாசமா?!’ -இணைப்புக்கு `நமது எம்.ஜி.ஆர்’ அச்சாரம்?

சசிகலா - பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
சசிகலா - பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

`பதவி வெறியர்களே, வேஷம் போடாமல் விசுவாசத்தைக் காட்டுங்கள். குதர்க்க அரசியல் செய்யும் கோமாளிகள் போன்று பொய்களை இட்டுக்கட்டிப் பேசுவதை தவிர்த்திடுங்கள்’ - நமது எம்.ஜி.ஆர்

சொத்துக்குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு விடுதலை ஆகிவிட்டார் சசிகலா. தற்போது கர்நாடகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா எப்போது வேண்டுமானாலும் தமிழகம் திரும்பலாம். அவரை வரவேற்க அவரின் ஆதரவாளர்கள் தயாராகிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் தமிழகத்தில் தேர்தல் களமும் உச்சகட்டத்தில் இருக்கிறது. இன்னும் கூட்டணிகள் உறுதிசெய்யப்படவில்லை. என்றாலும், பிரசாரக் கூட்டங்கள் அனல்பறக்க தொடங்கிவிட்டன.

சசிகலா விடுதலை
சசிகலா விடுதலை

இந்தச் சூழலில் சசிகலாவின் வருகை சில தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து. விரைவில் தமிழகம் திரும்பும் சசிகலாவின் அரசியல் நடவடிக்கை என்ன மாதிரியாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். `சட்டப் போராட்டம் நடத்தி, அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதுதான் சசிகலாவின் பணியாக இருக்கும்’ என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். ஆனால், முதல்வர் பழனிசாமியோ `சசிகலாவை அ.தி.மு.க-வில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை’ என்கிறார்.

இந்தச் சூழலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் அ.தி.மு.க – அ.ம.மு.க இணைப்புக்கு மறைமுக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. `ஆணைகள் இட்டு யார் தடுத்தாலும்...’ என தலைப்பிடப்பட்ட கட்டுரையில், ``சின்னம்மா பூரண உடல் நலம்பெற இறைவனிடம் வேண்டுதலை வைத்திட்ட அம்மாவின் விசுவாசிகள், தொண்டர்கள் படையைத் திரட்டி சின்னம்மாவைச் சிறப்பாக வரவேற்க வேண்டும் என்ற பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருவதோடு, தாயின் ஆட்சியைத் தமிழகத்தில் மீண்டும் சின்னம்மா ஒருவரால் மட்டுமே ஏற்படுத்த முடியும் என்பதையும் ஒவ்வொரு தொண்டரும் தெளிவுபடுத்திவருகிறார்கள்.

இதை அறிந்த துரோகக் கூட்டமும், இனி நமக்கு அஸ்தமனம்தான் என்பதை உணர்ந்துகொண்ட அந்தப் பச்சோந்திக் கூட்டங்களும் ஆணையிட்டு தடுத்திடும் வேலைகளை அரங்கேற்றிவருகிறார்கள்.

சசிகலா
சசிகலா

அம்மாவின் மறைவுக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்றி முதலமைச்சர் பதவியை தக்கவைத்துத் தந்திட்ட அத்தகைய ஒப்பற்ற தியாக தலைவியை `கட்சியைவிட்டு நீக்குகிறோம்’, `100% சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை’ என்று மனசாட்சியை விற்றுவிட்டு நன்றிகெட்ட மனிதராக வலம்வருவது, இப்படி உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் துரோகிகளுக்கு இனி சரித்திரத்தில் பச்சோந்திகள், நம்பிக்கை துரோகிகள் என்ற அடையாளம் மட்டுமே வரலாறாகப் பேசப்படுமே தவிர, இவர்களால் அம்மாவின் ஆட்சியை அமைக்க முடியாது. அம்மாவின் தொண்டர்களையும் காத்திட முடியாது என்பதே உண்மை” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் அந்த கட்டுரையில், ``இப்படிப்பட்ட நம்பிக்கை துரோகிகள் எத்தகைய தடைபோட்டாலும், ஆணைபோட்டாலும், அம்மாவின் தொண்டர்களையும் தடுக்க முடியாது. மடை திறந்த வெள்ளம்போல் படை திரண்டு வந்து சின்னமாவை வரவேற்பார்கள். சின்னம்மாவின் தலைமையில் கழகம் மீட்டெடுக்கப்போவதை இனி எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. எத்தனை சதிகளை, தீய சக்திகளோடு சேர்ந்து தீட்டினாலும் அவை புஸ்வணமாகிவிடும்.

தமிழகத்தில் நடப்பதையெல்லாம் நாட்டு மக்கள் அறிவார்கள். விரைவில் தமிழக மக்களை சின்னம்மா சந்திக்கபோகிறார்கள். ஏறிய ஏணியை எட்டி உதைக்கும் வஞ்சகப் பிறவிகளின் சுய ரூபங்களை மக்களிடம் வெளிப்படுத்தும் தருணம் வந்து விட்டது. அப்போது உண்மையை மக்களிடையே வெளிப்படுத்துவார்கள்.

கட்டுரை
கட்டுரை

ஆளாக்கியவரை அவதூறு பேசும் அற்பர்களின் முகத்திரையைக் கிழிப்பார்கள். கோபுர பொம்மைகளெல்லாம் இன்றைக்கு ஆணையிட்டு தடைபோட ஆளாய்ப் பறக்கின்றன. அந்த கோபுரத்தைத் தாங்கி நிற்கும் பூமியாக இருப்பவர் சின்னம்மா அவர்கள்தான். அத்தகையவருக்கே தடைபோடும் பச்சோந்திகள் குறைகூறுவதன் விபரீதத்தை மக்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள்.

பதவி வெறியர்களே, வேஷம் போடாமல் விசுவாசத்தைக் காட்டுங்கள். குதர்க்க அரசியல் செய்யும் கோமாளிகள் போன்று பொய்களை இட்டுக்கட்டி பேசுவதைத் தவிர்த்திடுங்கள். பதவிக்கு வரும் வரை மண்டியிட்டு, கைகட்டி சரணாகதி அடைந்து நிற்பதும், பதவி கிடைத்ததும் பச்சை சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் துரோகிகளுக்கு நாவடக்கம் வேண்டும். திரை மறைவு அரசியல் நடத்துவதை இதயதெய்வம் அம்மா போன்று எப்போதும் சின்னம்மா விரும்புவதில்லை.

சசிகலா விடுதலை: ஜெ.நினைவிடத் திறப்பு...  டி.டி.வி.தினகரன் சூளுரைப்பு... பின்னணி என்ன?

தனியாக நின்று டெபாசிட்கூட வாங்க யோக்கியதை இல்லாத பச்சோந்தி கூட்டங்களெல்லாம் தொண்டர்களிடம் பசப்பு வார்த்தை பேசி, பாசாங்கு நாடகம் நடத்தி, அணைபோட்டுத் தடுத்தாலும் மீண்டும் உங்களால் கூற முடியாது. சீண்டுவார் இன்றிக் கிடந்தவரை சிம்மாசனத்தில் அமரவைத்த சின்னம்மாவுக்கு காட்டும் விசுவாசம் இதுதானா? கீழே விழுந்துவிட்டால் என்ன ஆகும் என்பதை மறந்துவிட்டு, மலை உச்சியில் கொண்டுபோய் அமரவைத்த தியாகத் தலைவியிடமே வாலாட்டுவதா?

சசிகலா
சசிகலா

ஒரு தனிமனிதனுக்கு திடீரென ஏற்பட்டுவிட்ட பதவி வெறி என்னும் பேராசையால் புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்ட, இதயதெய்வம் அம்மா வார்க்கப்பட்ட இயக்கத்தையே சிதைக்க நினைக்காதே..! சின்னாபின்னம் ஆக்கிட முயலாதே. கோடான கோடி தொண்டர்களைக்கொண்ட இயக்கம் பதவி வேறியால் சிதறுண்டு போக வேண்டுமா? சுயமாக சிந்தனை செய்! தீர்க்கமான, தெளிவான முடிவினை, கோடி தொண்டர்கள் எதிர்பார்க்கும் முடிவினை எடு! ஆணைகளை உடைத்தெறிந்து சின்னம்மாவை ஒருசேரக் கூடி வரவேற்போம். மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைக்க களப்பணிக்குத் தயாராவோம்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இன்னும் சில தினங்களில் சசிகலா தமிழகம் திரும்பவிருக்கும் நிலையில், அ.தி.மு.க – அ.ம.மு.க இணைப்புக்கு நமது எம்.ஜி.ஆர் நாளேடு மூலம் அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாக இதைப் பார்க்க முடிகிறது. இதற்கு அ.தி.மு.க தரப்பில் என்ன மாதிரியான எதிர்வினை இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்... இந்தக் கட்டுரை குறித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், `சசிகலாவுவையும் அ.ம.மு.க-வையும், அ.தி.மு.க-வில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமியே தெளிவுபடுத்திவிட்டார்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு