Published:Updated:

`போராட்டங்களில் ஈடுபடுவது ஒழுங்கீனம்!' - நந்தனம் அரசுக் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்ட மாணவர்!

அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டதற்காக சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் படிக்கும் மணிகண்டன் என்ற மாணவர் நீக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் நான்கு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நந்தனம் அரசுக் கல்லூரி
நந்தனம் அரசுக் கல்லூரி

அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டதற்காக சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் எனப் புகார் எழுந்துள்ளது. அவருடன் மேலும் 4 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியப் பாடப் பிரிவில் மூன்றாமாண்டு பயின்று வருபவர் மணிகண்டன். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் உறுப்பினராகவும் உள்ளார். கல்லூரி வளாகத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்து, நந்தனம் அரசுக் கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகளிலுள்ள குறைபாடுகளைக் கண்டித்தும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, அம்பேத்கர் சிலை உடைப்பு முதலான அரசியல் பிரச்னைகள் சார்ந்தும் சில போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.

மணிகண்டன்
மணிகண்டன்

ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டபோது, அதைக் கண்டித்து கல்லூரி வளாகத்துக்குள் கடந்த செப்டம்பர் 17 அன்று போராட்டம் நடத்தியுள்ளார் மணிகண்டன். அதைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள் காரணமாக, கடந்த செப்டம்பர் 25 அன்று மணிகண்டன் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இதைப்பற்றி மணிகண்டனிடம் பேசினோம், ``ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பை எதிர்த்து கடந்த செப்டம்பர் 17 அன்று, கல்லூரி வளாகத்துக்குள் 7 மாணவர்களுடன் போராட்டம் நடத்தினோம். போராட்டம் நடந்துகொண்டிருந்த வேளையில், பொருளியல் துறையின் மாணவர் ஜெயசூர்யா தனது துறை மாணவர்களைப் போராட்டத்துக்கு அழைத்து வந்துகொண்டிருந்தார். இதைக் கண்ட பொருளியல் துறைப் பேராசிரியர் உதயகுமார், அனைத்து மாணவர்கள் முன்னிலையில் ஜெயசூர்யாவைக் கடுமையாகத் தாக்கியதோடு, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்த நிகழ்வினால், ஜெயசூர்யா உட்பட அந்த மாணவர்கள் யாருமே போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. நான் போராட்டத்தில் இருந்த அதே நேரத்தில் இது நிகழ்ந்ததால், எனக்குத் தெரியவில்லை. நான்கு நாள்கள் கழித்து, கல்லூரியில் நான் ஜெயசூர்யாவைப் பார்த்தபோது, பேராசிரியர் உதயகுமார் தன்னைத் தாக்கியதை என்னிடம் கூறினார். உடனே, அவரை அழைத்துக்கொண்டு கல்லூரி முதல்வரைக் காணச்சென்றோம்.

மாணவர் போராட்டத்தில் மணிகண்டன்
மாணவர் போராட்டத்தில் மணிகண்டன்

கல்லூரி முதல்வர் ஜெயச்சந்திரன், அலுவலகத்தில் இல்லை; முக்கியமான பணியில் இருக்கிறார் எனப் பல்வேறு காரணங்களைக் கூறி, முதல்வர் அலுவலகப் பணியாளர்கள் அவரைச் சந்திக்கவிடவில்லை. தொடர்ந்து இரண்டு நாள்களாக கல்லூரி முதல்வரைச் சந்திக்க முயன்றோம். அது பயன் தரவில்லை. கடந்த செப்டம்பர் 25 அன்று, மாணவர் ஜெயசூர்யாவைப் பேராசிரியர் உதயகுமார் தாக்கியதைக் கண்டித்து ஏறத்தாழ 40 மாணவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் போராட்டம் நடத்தினோம். அதன்பிறகு கல்லூரி முதல்வர் எங்களை அழைத்துப் பேசினார்; போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறும், பேராசிரியர் உதயகுமார் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். அவர் சொன்னதன் அடிப்படையில், நாங்களும் போராட்டத்தை முடித்துக்கொண்டு கிளம்பினோம். மறுநாள் கல்லூரிக்குச் சென்றபோது, என்னைக் கல்லுாரியிலிருந்து நீக்கிவிட்டதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் நான்கு மாணவர்களை இடைநீக்கம் செய்திருப்பதாகவும் எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பேராசிரியர் உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்றார்.

தான் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டதன் காரணம் என்னவென்று மணிகண்டன் கல்லூரி நிர்வாகத்தில் கேட்டுள்ளார். கல்லூரி வளாகத்துக்குள் முன்னறிவிப்பின்றி போராட்டங்கள் நடத்துவதால் ஒழுங்கீன நடவடிக்கை எடுத்து நீக்கியதாக மணிகண்டனிடம் கூறியுள்ளது கல்லூரி நிர்வாகம். மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைத்ததற்காகக் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் மணிகண்டன். கல்லூரியிலிருந்து மாணவர் நீக்கப்பட்டதை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி முதல்வர் ஜெயச்சந்திரனைத் தொடர்புகொண்டோம். ``இந்தப் பிரச்னை தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் என்னால் இதுபற்றி பேச முடியாது" என்று கூறி, முடித்துக்கொண்டார்.

மாணவர் போராட்டத்தில் மணிகண்டன்
மாணவர் போராட்டத்தில் மணிகண்டன்
போராடியதால் மாணவரின் சேர்க்கை ரத்து... தொடரும் சென்னைப் பல்கலைக்கழக சர்ச்சை!

இரண்டு மாதங்களுக்கு முன்பு, சென்னைப் பல்கலைக்கழக மாணவர் கிருபாமோகன் அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டதை முன்வைத்து, வேறு காரணங்களைக் காட்டி, பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார். அந்த வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. தற்போது நந்தனம் கல்லூரி மாணவர் மணிகண்டன் அதேபோல நீதிமன்றத்தை நாடியுள்ளார். இருவரும் தமிழ்நாட்டின் குக்கிராமங்களிலிருந்து, சென்னைக்குப் படிக்க வந்தவர்கள்.

தமிழ்நாட்டின் இன்றைய பிரதான கட்சிகள், மாணவர் போராட்டங்களால் வளர்ந்தவை. பட்டாக்கத்தியுடன் திரியும் மாணவர்களைப்போல அல்லாமல், தமிழகக் கல்வி நிலையங்களில் அடிப்படை வசதிகளையும், பொதுவான அரசியல் விவகாரங்களையும் முன்வைத்துப் பேசும் மாணவர்களுக்குத் தொடர்ந்து, ஜனநாயக உரிமை மறுக்கப்படும் நிகழ்வுகள் வாடிக்கையாகியிருப்பது பெரும் விவாதமாக எழுந்துள்ளது. எதிர்காலத்தில் இன்னும் இது அதிகரிக்குமோ என்ற அச்சமும் மாணவர்கள் மத்தியில் பரவியிருக்கிறது.