Published:Updated:

“துரோகி எடப்பாடி... ஆள்காட்டி பன்னீர்!” - பிரித்துமேயும் நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத்
பிரீமியம் ஸ்டோரி
News
நாஞ்சில் சம்பத்

சசிகலா வருகையால் தமிழக அரசியல் சூழலில் எந்தத் தாக்கமும் ஏற்படாது. ஆனால், அ.தி.மு.க-வில் மிகப்பெரிய பாதிப்பை அவர் ஏற்படுத்துவார்.

சசிகலா விடுதலையான பிறகு, தமிழக அரசியல் சூழல் அவரைச் சுற்றிச்சுழல ஆரம்பித்திருக்கிறது. அமைச்சர்களையும் கட்சியினரையும் ‘அணைகட்டி’ வைப்பதற்கு படாதபாடு பட்டுவருகிறார் அ.தி.மு.க-வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. இந்தநிலையில்தான், முன்னாள் அரசியல்வாதியும் இந்நாள் இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத்திடம் பேசினேன்...

“சசிகலா விடுதலை, தமிழக அரசியல் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?’’

“சசிகலா வருகையால் தமிழக அரசியல் சூழலில் எந்தத் தாக்கமும் ஏற்படாது. ஆனால், அ.தி.மு.க-வில் மிகப்பெரிய பாதிப்பை அவர் ஏற்படுத்துவார். ‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது’ என்று நாடகமாடி, துணை முதலமைச்சர் பதவிக்காக விலைபோன பன்னீர் செல்வத்துக்கும். முதலமைச்சராக்கி அழகு பார்த்தவருக்கே துரோகம் செய்து நன்றி கொன்ற துரோகி எடப்பாடி பழனிசாமிக்கும் மிகப்பெரிய தண்டனையைத் தருவார் சசிகலா. அந்தத் தண்டனை சிறைத் தண்டனையல்ல... அரசியலி லிருந்தே அவர்கள் தூக்கியெறியப் படுவார்கள்!’’

“நீங்கள், ‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை’ என்கிறீர்கள். ஆனால், ‘ஜெயலலிதா மர்ம மரணக் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவோம்’ என்கிறாரே ஸ்டாலின்?’’

“ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொல்லி தர்மயுத்தம் நடத்தியவர் பன்னீர்செல்வம். இது சம்பந்தமாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று வற்புறுத் தியதும் அவர்தான். ஆனால், இப்போது விசாரணை கமிஷனின் விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பிக்கப் பார்ப்பதும் அவரேதான். ஆகவே, இதன் பின்னணியிலுள்ள உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதற்கு ஒரு பொறுப்புள்ள தலைவராக மு.க.ஸ்டாலின் மக்களுக்கு உறுதி கொடுத்திருக்கிறார்.’’

“சசிகலா தலைமையில் அ.தி.மு.க-வை ஒருங்கிணைத்து, தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க முயல்வதாகத்தானே சூழல்கள் நிலவுகின்றன?’’

“சசிகலா வரவை ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவருமே விரும்பவில்லை. இதில் பன்னீர், பா.ஜ.க-வுக்கு ஆள்காட்டி வேலையைத்தான் செய்கிறார். தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்தி பக்கம் பக்கமாக அவர் கொடுத்துவரும் விளம்பரங்களின் பின்னணியில் பா.ஜ.க இருக்கிறது. எப்படியாவது அ.தி.மு.க-வை உடைத்துவிட வேண்டும் என்கிற அவரது உண்மை முகம் இப்போது வெளிறியிருக்கிறது. ‘அ.தி.மு.க-வை உடைப்பதற்கு சசிகலாவையும் பயன்படுத்தலாமா?’ என்று பா.ஜ.க நடத்தும் ஒத்திகை எங்கே போய் முடியும் என்பது, சசிகலாவின் இனிவரும் நடவடிக்கைகளைப் பார்த்தே நானும் தெரிந்துகொள்ள முடியும்.’’

“துரோகி எடப்பாடி... ஆள்காட்டி பன்னீர்!” - பிரித்துமேயும் நாஞ்சில் சம்பத்

“தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்துவரும் நீங்கள், ‘மதிக்கத்தக்க பெண்மணி சசிகலா’ என்றெல்லாம் உயர்வாகப் பேசிவருகிறீர்களே... எப்படி?’’

“சசிகலா உடல்நலம் பெற்றுத் திரும்பி வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வாழ்த்தியிருக்கிறார். கனிமொழியும் அறிக்கை விடுத்திருக்கிறார். நான் சசிகலாவை மதிக்கிறேன்... அதை என்னிடம் யாரும் கேள்வி கேட்க முடியாது. எப்படி ஸ்டாலின் வாழ்த்தினாரோ, கனிமொழி அறிக்கை வெளியிட்டாரோ அந்த அடிப்படையில்தான் நானும் சசிகலாவைப் பார்க்கிறேன்.’’

“அப்படியென்றால், சசிகலா தலைமையிலான அ.ம.மு.க., இந்தத் தேர்தலில் அ.தி.மு.க வாக்கு வங்கியைச் சிதறடிக்குமா?’’

“ஓ.பி.எஸ் அ.தி.மு.க-வில் நீடிக்க முடியும் என்றே நான் நம்பவில்லை. அ.தி.மு.க-வை உடைப்பதுதான் பா.ஜ.க-வின் திட்டமே. இந்தத் தேர்தலில், அ.தி.மு.க எனும் பேரியக்கத்தைச் சிதைப்பது மட்டுமே அவர்களது நோக்கம்; சிதைந்துபோன அ.தி.மு.க-வின் ஒரு பகுதியைத் தனதாக்கி, தன் கட்சியை வளர்த்துக்கொள்ள நினைக்கிறது பா.ஜ.க. வடமாநிலங்களில் செய்த இந்த அரசியலைத்தான் இங்கேயும் அந்தக் கட்சி செய்யப் பார்க்கிறது!’’

“கொரோனா ஊரடங்குக்குப் பிறகு தி.மு.க-வில் இணைவேன் என்றீர்கள். ஆனால், இன்னமும் ஆதரவாளராக மட்டுமே தொடர்கிறீர்களே... ஏன்?’’

“ஒரு கட்சிக்காரனாக என்னால் இனி கடமையாற்ற முடியாது. அதனால்தான், தி.மு.க-வில் நான் இயங்கிவந்தாலும் அதிகாரபூர்வமாக இணைய வில்லை. கருத்தரங்கு, பொது மேடை, இலக்கிய மேடை என எனது பயணத்துக்கு ஒரு கட்சியில் இருந்தால், எனக்கு நெருடலாக இருக்கும். அதேசமயம் பாசிச, வகுப்புவாத அரசியலை வேரறுக்கும் வல்லமை தமிழ்நாட்டில், தி.மு.க-வுக்கு மட்டுமே உண்டு. அதனால், ‘தி.மு.க வெற்றிபெற வேண்டும்’ என்பதைக் கொள்கை முடிவாக எடுத்துக்கொண்டு பிரசாரம் செய்துவருகிறேன்.’’

“தி.மு.க-வே கையில் ‘வேல்’ எடுத்துவரும் சூழலில், ‘மதவாத சக்திகளை முறியடிப்பதற்காக தி.மு.க-வுக்குப் பிரசாரம் செய்கிறேன்’ என்று நீங்கள் சொல்வது முரண்பாடாக இல்லையா?”

“குன்றக்குடி ஆதீனத்துக்குச் செல்லும்போது நெற்றி நிறைய நீறு பூசிக்கொண்டவர் பெரியார். வடலூருக்குச் சென்றபோதும் சத்திய ஞானசபையின் விதிகளை மதித்து நடந்துகொண்டார். அனைத்து தரப்பினரையும் மதிப்பதுதான் இந்த மண்ணுக்கு இப்போது தேவை. அதற்கு ஒரு முகமாக இன்றைக்குக் கண்ணுக்குத் தெரிகிற தலைவர் ஸ்டாலின்தான். பா.ஜ.க-வினரின் வேல் யாத்திரைக்கும், ஸ்டாலின் கையில் ஏந்தியிருக்கும் வேலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஸ்டாலின் கையில் ஏந்தியிருப்பது கபட அரசியல்வாதிகளை சூரசம்ஹாரம் செய்வதற்கான வேல்!”