Published:Updated:

“உதயநிதி ஸ்டாலின்தான் தெளிவுபடுத்த வேண்டும்!”

நாஞ்சில் சம்பத்
பிரீமியம் ஸ்டோரி
நாஞ்சில் சம்பத்

- நழுவும் நாஞ்சில் சம்பத்

“உதயநிதி ஸ்டாலின்தான் தெளிவுபடுத்த வேண்டும்!”

- நழுவும் நாஞ்சில் சம்பத்

Published:Updated:
நாஞ்சில் சம்பத்
பிரீமியம் ஸ்டோரி
நாஞ்சில் சம்பத்
‘திராவிடம் என்ற பெயர்கூட இல்லாத கட்சியில் என்னால் பயணிக்க இயலாது’ எனக் கொள்கை முழக்கமிட்டு, தீவிர அரசியலிலிருந்து விலகிய நாஞ்சில் சம்பத் தற்போது இலக்கிய மேடைகளில் வலம்வருகிறார். அண்மைக்காலத் தமிழக அரசியலில், ‘திராவிட மாடல் வளர்ச்சி’ குறித்துத் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவரும் நேரத்தில், `திராவிட இயக்கப் பேச்சாளர்’ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் நாஞ்சில் சம்பத்தை நேரில் சந்தித்தோம்...

“சசிகலா, எடப்பாடி, ஓ.பி.எஸ் மூவருக்குமே கொடநாடு விவகாரத்தில் சம்பந்தம் உண்டு என்கிறாரே கே.சி.பழனிசாமி?’’

“ஜெயலலிதா உயிரோடு இருந்தவரையில், கே.சி.பழனிசாமியைக் கட்சிக்குள் சேர்க்கவில்லை. ஜெ. மறைந்த பிறகு, அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபடுகிறது. அப்போது கே.சி.பழனிசாமி, அஞ்ஞாத வாசம் முடிந்து ஓ.பி.எஸ் அணியில் போய்ச் சேர்கிறார்.கொடநாடு சம்பவம் நடைபெற்றபோது, முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. அதனால் அவருக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு உண்டு. சசிகலாவோ, சம்பந்தப்பட்ட சொத்துக்குத் தொடர்பு உடையவர். எனவே, அவருக்கும் இதில் தொடர்பு உண்டு. ஆனால், ஓ.பி.எஸ் இந்த விவகாரத்தைக் கண்டு சிரித்துக்கொண்டிருக்கிறார். ஏனெனில், ‘எடப்பாடிக்கு வீழ்ச்சி தொடங்கிவிட்டது’ என்று ஓ.பி.எஸ் நினைக்கிறார்.’’

“சட்டசபையில், ‘கரையினில் நெருப்பு, நதியினில் வெள்ளம் இரண்டுக்கும் நடுவே கடவுளின் சிரிப்பு’ என ஓ.பி.எஸ் எதை மனதில்வைத்துப் பாடினார் என்றும் சொல்லிவிடுங்களேன்..?’’

“கரையினில் நெருப்பாக பிரதமர் மோடி இருப்பதால் தான் கரையேற முடியாததையும், நதியினில் வெள்ளமாக எடப்பாடி இருப்பதால் கட்சிக்குள் நீந்தவும் முடியாமல் தான் தவித்துவருவதையும், மு.க.ஸ்டாலின் எனும் இறைவன் சிரிப்புடன் பார்த்துவருவதாகவும் சொல்கிறார் ஓ.பி.எஸ்!’’

“சட்டசபையில், ‘தன்னை யாரும் புகழ வேண்டாம்’ எனக் கண்டிப்பு காட்டுகிற முதல்வர், உதயநிதி ஸ்டாலினைப் புகழ்ந்து பேசுவதை மட்டும் கண்டுகொள்வதில்லையே..?’’

(சிரிக்கிறார்). “முதல்வர் மு.க.ஸ்டாலின், தன் நிலையைத் தெளிவுபடுத்திவிட்டார். இனி, இளைஞரணிச் செயலாளர் நிலையை உதயநிதி ஸ்டாலின்தான் தெளிவுபடுத்த வேண்டும்!’’

“அண்மையில், அரசுக் கட்டடப் பணிக்கான பூமி பூஜையில், செருப்புக் காலுடன் உதயநிதி பங்கேற்றிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறதே... கவனித்தீர்களா?’’

“செருப்பு அணிந்துகொண்டு, பூமி பூஜையில் கலந்துகொள்ளக் கூடாது என்று ஏதேனும் விதி இருக்கிறதா? நான் சொல்வது செருப்பின் தன்மையைப் பொறுத்தது. சில செருப்புகள் எளிதில் கழற்ற முடியாதவையாக இருக்கும் அல்லது தன்னிச்சையாக அந்த நிகழ்ச்சிக்குப் போய்விட்டோம்... கலந்துகொண்டோம்... என்ற நிலையில், இது குறித்தெல்லாம் அவர் யோசிக்காமலும் இருந்திருக்கலாம்... அவ்வளவுதான். மற்றபடி ‘பூமி பூஜையை அவமதிக்க வேண்டும்’ என்ற எண்ணமெல்லாம் உதயநிதிக்கு இருக்க வேண்டிய தேவையும் இல்லை... அப்படி இருக்கவும் இருக்காது!’’

“ ‘திராவிட மாடல்’ என்று பெருமை பேசுகிற தி.மு.க ஆட்சியிலும்கூட, அரசுத் திட்டங்களுக்கு பூமி பூஜை நடத்தப்படுவதெல்லாம் நியாயம்தானா?’’

“நீங்கள் சொல்கிற இந்த நிகழ்ச்சிகளை நான் பார்க்கவும் இல்லை... அது பற்றிய செய்திகளைப் படிக்கவும் இல்லை. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள் ‘பூமி பூஜை’ மீதான நம்பிக்கை கொண்டவர்களாக இருந்திருக்கலாம். மற்றபடி இதையெல்லாம் சர்ச்சையாக்க வேண்டிய தேவையில்லை என்பதுதான் என் கருத்து!’’

“அண்மையில், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன், பெரியார் படத்துடன் ‘கிருஷ்ண ஜயந்தி வாழ்த்துகள்’ தெரிவித்துள்ளாரே?’’

“டாக்டர் மகேந்திரன், மய்யத்திலிருந்து தி.மு.க-வுக்கு வந்திருப்பவர். எனவே, ‘கிருஷ்ண ஜயந்தி’ அன்று தனிப்பட்ட முறையில் தன் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. தி.மு.க-விலிருந்து அதிகாரபூர்வமாக இதுபோல் வாழ்த்து எதுவும் கொடுக்கப்படவில்லையே... தி.மு.க-வைப் பொறுத்தவரையில், ‘நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்; பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டோம்’ என்ற அண்ணாவின் வழியில்தான் நடைபோடுகிறது. இதுதான் ‘திராவிட மாடல்!’ ’’

“தி.மு.க-வின் வாரிசு அரசியலை எதிர்த்து ம.தி.மு.க-வை ஆரம்பித்தவர் வைகோ. இப்போது அவரின் மகனான துரை வைகோ-வே ‘தான் முழுநேர அரசியல்வாதியாகிவிட்டதாக’ அறிவித்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“அண்மைக்காலமாக அண்ணன் வைகோவை நான் நேரில் பார்க்கவில்லை. ஆனால், அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை வீடியோவில் பார்க்கும்போது அவரது உடல்நிலை, சுற்றுப்பயணத்துக்கும் பேச்சுக்கும் ஒத்துழைக்கவில்லை என்பது தெரிகிறது. எனவே, அண்ணன் வைகோவின் சுமையைப் பகிர்ந்துகொள்வதற்கு ஒரு தகுதியான நபராக ‘துரை வைகோ’ இருப்பார் என்று அந்தக் கட்சியில் இருப்பவர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சியும் செய்கிறார்கள்.’’

“உதயநிதி ஸ்டாலின்தான் தெளிவுபடுத்த வேண்டும்!”

“கடந்தகாலத்தில், ம.தி.மு.க-வில் நீண்ட தூரம் பயணித்தவர் நீங்கள்... உங்களுடைய தனிப்பட்ட கருத்தையும் சொல்லலாமே?’’

“ம.தி.மு.க-வில் நான் நீண்டகாலம் பயணித்தேன். அந்தக் கட்சியைத் தூக்கிச் சுமந்தேன். அதற்காகச் சிலுவைகளில் ஆணியால் அறையப்பட்டேன். எல்லாம் உண்மைதான். ஆனால், இந்தக் கேள்வியை நீங்கள் ‘துரை வைகோ’விடம்தான் கேட்க வேண்டும்!’’

“ ‘உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார்?’ என அண்மையில் சீமான் பேசியிருப்பதை காங்கிரஸ் கட்சி கண்டித்திருக்கிறதே?’’

“சீமானும் ஏற்கெனவே இது போன்ற சிக்கல் ஒன்றில் சிக்கியவர். அதனால் இன்னும் நான்கு பேர் இதுபோல் சிக்கினால், தன்னுடைய பயணத்துக்குக் கொஞ்சம் எளிதாக இருக்கும் என அவர் நினைத்திருக்கலாம். ‘தன்னைப்போல் இருப்பவர்களை நேசிக்க வேண்டும்’ என்பதொரு அர்த்தமுள்ள வாசகம். அதை சீமானும் பின்பற்றுகிறார்.’’ (சிரிக்கிறார்).

“கடந்தகாலத்தில், நாஞ்சில் சம்பத் பெயரிலும் ஒரு வீடியோ வைரலானபோது, நீங்கள் அதை மறுத்திருந்தீர்கள்தானே?’’

“இரண்டு வருடங்களுக்கு முன்பு அப்படியொரு வீடியோவை யாரோ வெளியிட்டார்கள். இது பற்றி என்னிடமும் சிலர் கருத்து கேட்டனர். ஆனால், ‘நான் அதை மறுக்கவேண்டிய அவசியம் இல்லை’ என்று சொல்லிவிட்டேன். இது மட்டுமல்ல... பணம் பெற்றுக்கொண்டுதான் நான் அ.தி.மு.க-வுக்குப் போனேன் என்றெல்லாம்கூட செய்திகள் வெளிவந்தன. இதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படுவது இல்லை. ஏனெனில், இவற்றுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

‘தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.’ ’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism