Published:Updated:

சீமானின் கைக்கூலிக்கு எந்தக் குறைவும் வந்துவிடக் கூடாது... சீமான் வாழ்க!

நாஞ்சில் சம்பத்
பிரீமியம் ஸ்டோரி
நாஞ்சில் சம்பத்

- நாஞ்சில் சம்பத் ‘நறுக்’

சீமானின் கைக்கூலிக்கு எந்தக் குறைவும் வந்துவிடக் கூடாது... சீமான் வாழ்க!

- நாஞ்சில் சம்பத் ‘நறுக்’

Published:Updated:
நாஞ்சில் சம்பத்
பிரீமியம் ஸ்டோரி
நாஞ்சில் சம்பத்

தமிழக அரசியல் களத்தில், ‘தி.மு.க-வுக்குப் போட்டி யார்?’ என்ற கேள்விக்கு, `அ.தி.மு.க’ என அனல்பறக்க விடையளித்திருக்கிறது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல். தேர்தல் பரப்புரைக் களத்தில், ‘அரபிக் குத்து’களைத் தாண்டி அ.தி.மு.க கொடுத்த அரசியல் குத்துகளை தி.மு.க ஆதரவுப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் கேள்விகளாக்கினோம்...

“ ‘தி.மு.க-வின் எட்டு மாத ஆட்சியில் சைக்கிள் பயணம், நடைப்பயிற்சி, டீ குடிப்பதைத் தவிர்த்து எந்தத் திட்டத்தையும் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை’ என்கிறாரே எடப்பாடி பழனிசாமி?’’

“எந்தத் தரவையும் வைத்துக்கொண்டு பேசத் தெரியாத ஒரு தகுதியற்றவரின் கையில், தமிழ்நாட்டினுடைய எதிர்க்கட்சித் தலைவர் பதவி சிக்கிக்கொண்டிருக்கிறது. இது தமிழ்நாட்டு அரசியலின் மிகப்பெரிய சோகம். ஒரு முதலமைச்சர் சைக்கிளிங் செல்வதையும், உடற்பயிற்சி செய்வதையும்கூட ஒருவர் கொச்சைப்படுத்துகிறார் என்றால், இது ஒரு குரூரமான மனதின் பார்வை. பந்தாட்ட மைதானத்தில் பந்தை உதைக்க வேண்டுமே தவிர, ஆளை உதைக்கக் கூடாது. இந்திய அரசியல் வரலாற்றிலேயே, ஆளுநர் திருப்பியனுப்பிய ஒரு தீர்மானத்தை, அதே ஆளுநருக்குத் திருப்பியனுப்பிய ஒரே ஆண்மகன் மு.க.ஸ்டாலின். அடிமையாக இருந்து சுகம் அனுபவித்தவர்கள் இதையெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.’’

“ஆனால், ‘அ.தி.மு.க அரசு இயற்றிய நீட் தேர்வு தீர்மானம் ஜனாதிபதி வரை சென்றது. தி.மு.க அரசு இயற்றியுள்ள தீர்மானம் தமிழ்நாட்டையே தாண்டவில்லை’ என்கிறதே அ.தி.மு.க?’’

“ஆமாம்... ஜனாதிபதியின் பார்வைக்குத் தீர்மானத்தை அனுப்பினார்கள். அதன் பிறகு ஜனாதிபதி, அந்தத் தீர்மானத்தைத் திருப்பியனுப்பியதே தெரியாமல் சுமார் இரண்டு வருடம் காலம் கடத்தியதும் அ.தி.மு.க அரசுதான். அது மட்டுமல்ல... ‘தமிழக அமைச்சரவை இயற்றி அனுப்பிய தீர்மானம் எங்கே கிடக்கிறது என்றே தெரியவில்லை’ என்று எகத்தாளம் பேசிய நிர்மலா சீதாராமனுக்கு எந்தவித எதிர்வினையும் ஆற்றத் தெரியாமல் மௌனம் காத்ததும் இதே அ.தி.மு.க-தான்.”

“நீட் தேர்வு தொடர்பாக விவாதிக்க, மு.க.ஸ்டாலின் விடுத்திருந்த சவாலை ஏற்றுக்கொள்வதாக பதில் சவால் விடுத்திருக்கிறாரே எடப்பாடி பழனிசாமி?’’

“தமிழக முதல்வரை சவாலுக்கு அழைப்பதற்கு, எடப்பாடி பழனிசாமிக்குத் தகுதி இல்லை. எடப்பாடி ஆயிரம் பிறவி எடுத்தாலும் ஸ்டாலினின் உயரத்தை அடைய முடியாது. எனவே, எடப்பாடி பழனிசாமியின் சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். எந்த இடம், எப்போது என்று மட்டும் கேட்டுச் சொல்லுங்கள்... நானே விவாதிக்க வருகிறேன்.’’

“எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதன்முதலில் சவாலுக்கு அழைத்திருப்பதே முதல்வர் மு.க.ஸ்டாலின்தானே?’’

“மு.க.ஸ்டாலின், அதிகாரத்தில் இருக்கிற முதலமைச்சர். எடப்பாடி, எதிர்க்கட்சித் தலைவர். எனவே முதல்வரைக் கேள்வி கேட்பதற்கும் விவாதிப்பதற்கும் சட்டமன்றத்தில் வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தால், எடப்பாடி இப்படியொரு சவாலை முதலமைச்சருக்கு விட்டிருக்க மாட்டார். இது காலம் கடந்துவந்த ஞானோதயம். இந்தச் சவாலுக்குப் பின்னால் ஒரு வன்மமான அரசியல் இருக்கிறது. அதனால்தான் சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன்.’’

“ ‘மக்களை நேரில் சந்திக்க பயந்துகொண்டு, காணொலிக் காட்சி மூலமாகப் பரப்புரை செய்கிறார் மு.க.ஸ்டாலின்’ என்ற அ.தி.மு.க குற்றச்சாட்டுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?’’

“தேர்தலுக்குக் குறைவான கால அவகாசமே இருந்தாலும், மாவட்டவாரியாகக் கட்சி நிர்வாகிகள் அனைவரோடும் காணொலிக் காட்சி வாயிலாக தினமும் பேசிவந்தார் ஸ்டாலின். மேலும் கனிமொழி, உதயநிதி, லியோனி, சுப.வீ, நான் உட்பட நட்சத்திரப் பேச்சாளர்கள் அனைவரையும் நாடு முழுக்க அனுப்பித் தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் திட்டமிட்டு செய்துவந்தார். ஆனால், அ.தி.மு.க-வில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் மட்டுமே பரப்புரை செய்தனர். முதல்நாள் காஞ்சிபுரத்தில் ஓ.பி.எஸ் பேசிச் செல்கிறார். மறுநாள் அதே காஞ்சிபுரத்துக்கு எடப்பாடி வந்து பேசுகிறார். அதாவது காஞ்சிபுரத்தில் ஓ.பி.எஸ் யாரைச் சந்தித்தார், ஏதாவது போட்டுக்கொடுத்தாரா, என்ன நடந்தது என்பதையெல்லாம் வேவு பார்க்கவே எடப்பாடி வருகிறார். ஆக, தி.மு.க-வின் திட்டமிட்ட அழகான பரப்புரையின் முன்பு, அ.தி.மு.க பரப்புரை என்பது வெற்று இரைச்சலாக மட்டுமே எஞ்சியிருக்கிறது.’’

சீமானின் கைக்கூலிக்கு எந்தக் குறைவும் வந்துவிடக் கூடாது... சீமான் வாழ்க!

“ஆனால், ‘மக்களை நேரில் சந்திக்க பயந்து, குட்டியைவிட்டு ஆழம் பார்க்கிறார் ஸ்டாலின்’ என்று உதயநிதி ஸ்டாலினின் பரப்புரையை விமர்சித்தாரே ஜெயக்குமார்?’’

“குட்டியைவிட்டு ஆழம் பார்க்கவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. உதயநிதி ஸ்டாலின், தி.மு.க இளைஞரணிச் செயலாளர், சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், நட்சத்திரப் பேச்சாளரும்கூட. ஜெயக்குமார் போன்று ராயபுரத்திலேயே புதைந்துபோனவர் அல்ல.’’

“ ‘அ.தி.மு.க சிங்கம், சிங்கிளாக நிற்கிறது. ஆனால், தி.மு.க..?’ எனக் கேள்வி கேட்டு கேலி செய்திருந்தாரே கடம்பூர் ராஜூ?’’

“அவர்களுக்குக் கூட்டணி அமையவில்லை. எடப்பாடி பழனிசாமி என்ற மண்குதிரையை நம்பினால், கரைசேர முடியாது என்றுதான் பா.ம.க ஏற்கெனவே ஒதுங்கிக்கொண்டது. ‘இந்த ஊழல் பேர்வழிகளைத் தூக்கிச் சுமந்தால், எல்லா இடங்களிலும் நமக்குத் தோல்விதான் கிட்டும்’ என்றெண்ணி ‘போனால் போகட்டும், போய்த் தொலையட்டும்’ என்ற முடிவுக்கு பா.ஜ.க-வும் வந்துவிட்டது. எனவே வேறு வழியில்லாமல், அ.தி.மு.க தனித்துவிடப்பட்டது. ஆனால், தி.மு.க கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி. இந்திய அளவில், பா.ஜ.க-வுக்கு எதிராக ஒரு வலிமையான அணி இயங்குகிறது என்றால், அது எங்கள் அணிதான்.’’

“ஆனால், ‘பா.ஜ.க-வை எதிர்த்து தி.மு.க குரல் கொடுத்தால், தி.மு.க குடும்பத்தில் பல நபர்கள் திகார் சிறையில்தான் இருக்க வேண்டும்’ என்கிறாரே சீமான்?’’

“தான் வாங்கிய கைக்கூலிக்கு ஏற்ப சீமான் பேசிவருகிறார். அவரது கைக்கூலிக்கு எந்தக் குறைவும் வந்துவிடக் கூடாது. எனவே, சீமான் வாழ்க!’’