Published:Updated:

சின்னத்தை பா.ஜ.க முடக்கும்... அதில் அ.தி.மு.க தீர்ந்துபோகும்! - நாஞ்சில் சம்பத் ‘நறுக்’

நாஞ்சில் சம்பத்
பிரீமியம் ஸ்டோரி
நாஞ்சில் சம்பத்

அவருக்கு அறிவு இருக்கிறதா, ஆற்றல் இருக்கிறதா, ஆளுமை இருக்கிறதா, எழுத்தாற்றல் மிக்கவரா, பேச்சாற்றல் உள்ளவரா

சின்னத்தை பா.ஜ.க முடக்கும்... அதில் அ.தி.மு.க தீர்ந்துபோகும்! - நாஞ்சில் சம்பத் ‘நறுக்’

அவருக்கு அறிவு இருக்கிறதா, ஆற்றல் இருக்கிறதா, ஆளுமை இருக்கிறதா, எழுத்தாற்றல் மிக்கவரா, பேச்சாற்றல் உள்ளவரா

Published:Updated:
நாஞ்சில் சம்பத்
பிரீமியம் ஸ்டோரி
நாஞ்சில் சம்பத்

``அ.தி.மு.க-வில் பொதுக்குழு என்கிற பெயரில் மிகப்பெரிய ஜனநாயக அநீதியை அரங்கேற்றியிருக்கிறார்கள். இடைச்செருகலாக வந்தவர், பத்தாண்டுக் காலத்தில் கொள்ளையடித்த பணத்தை வைத்து அ.தி.மு.க என்கிற விளிம்புநிலை மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். இதற்குப் பின்னால் பா.ஜ.க-வின் விளையாட்டு இருக்கிறது என்பதை நாடு புரிந்துகொண்டிருக்கிறது’’ என அ.தி.மு.க-வில் தற்போது நிகழ்ந்துவரும் களேபரங்கள் குறித்து அதிரடியான பல கருத்துகளைத் தெரிவித்துவருகிறார், திராவிட இயக்கப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

``சாப விமோசனமே கிடையாது என்கிற அளவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நீங்கள் விமர்சிப்பது ஏன்?’’

`` ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு’ என்பது வள்ளுவனின் மொழி. எந்தக் குற்றத்தைச் செய்தவனுக்கும் பரிகாரம் உண்டு; பிராயச்சித்தம் உண்டு. ஆனால், நன்றி கொன்றவனுக்கு அது கிடையாது. எடப்பாடியைத் தாண்டி பழனிசாமி என்றால் யார் என்றே தெரியாத ஒரு நபரை, அன்னைத் தமிழகத்தின் முதலமைச்சர் என்கிற உன்னதமான ஆசனத்தில் உட்காரவைத்துவிட்டு, உடைந்து சிதறிய நெஞ்சுடன் சிறை சென்ற சசிகலா அம்மையாரைக் கட்சியைவிட்டு காலி செய்து, தன்னுடைய சுயலாபத்துக்காக நன்றி கொன்ற எடப்பாடி பழனிசாமிக்கு விமோசனமே கிடையாது. அறத்துக்கு வலிமை இருக்குமானால், சத்தியத்துக்கு ஜீவன் இருக்குமானால், நீதி உண்மையாக இயங்குமானால் அவர் ஒரு பேரழிவைச் சந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை.’’

``செங்கோட்டையன், பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த அ.தி.மு.க தலைவர்களே அவரின் பக்கம்தானே நிற்கிறார்கள்?’’

``ஜனநாயகத்தில் இது ஒரு சரித்திர விசித்திரம். ஓர் ஆபத்தானவரை இன்றைக்கு அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். இதற்காகப் பட்டுவாடா செய்யப்பட்ட பணம் மட்டும் மாவட்டத்துக்கு ஐந்து கோடி. அதையும் முதல் தவணை என்றுதான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே கூவத்தூர் கூத்தில், ஒரு கிலோ தங்கமும் மூன்று கோடியும் கொடுத்து, முதலமைச்சர் பதவியைத் தனதாக்கிக் கொண்டவர் என்கிற அடிப்படையில், இரண்டாவது தவணைக்கு அவர்கள் காத்திருக்கிறார்கள். பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்று படித்திருக்கிறேன். ஆனால், கோடிக்கணக்கான விளிம்புநிலை மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியை இப்போது சூறையாடியிருக்கிறது.’’

``பணத்துக்காக மட்டுமே ஆதரிக்கிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?’’

``வேறு என்ன காரணம் இருக்க முடியும்... அவருக்கு அறிவு இருக்கிறதா, ஆற்றல் இருக்கிறதா, ஆளுமை இருக்கிறதா, எழுத்தாற்றல் மிக்கவரா, பேச்சாற்றல் உள்ளவரா, சிறை சென்றவரா, சித்ரவதை அனுபவித்தவரா, திராவிட இயக்கத்தின் போர்க்குணம் ஏதாவது அவரிடம் இருக்கிறதா, பெரியார், அண்ணா பெயரை எப்போதாவது உச்சரித்திருப்பாரா... ஆகவே இவர் ஓர் இடைச்செருகல். பணத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஓர் அறமற்ற அரசியலுக்கு இன்று வழிவகுக்கப்பட்டிருக்கிறது.’’

``நான்காண்டுக் காலம் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தவர் என்கிற அடிப்படையில், எடப்பாடி பழனிசாமி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர், ஆளுமைமிக்கவர் அவரே ஒற்றைத் தலைமையாக வர வேண்டும் என்று கோகுல இந்திரா, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் சொல்கிறார்களே..?’’

``ஒற்றைத் தலைமையாக கோகுல இந்திராவே வந்திருக்கலாம். எடப்பாடி பழனிசாமி எப்படி வர முடியும்... 13 பேரை தூத்துக்குடியில் வைத்துச் சுட்டுக் கொன்றது ஆளுமையா... ஜெயராஜையும், அவரின் மகன் பென்னிக்ஸையும் சித்ரவதை செய்து கொலை செய்தது ஆளுமையா... தமீழீழப் போரில் கல்லறைக் குயிலாகிப்போன எங்களின் ஈழத்துக்குச் சொந்தங்களுக்காக மெழுகேந்திய திருமுருகன் காந்தியைத் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்தது ஆளுமையா... எது ஆளுமை?’’

சின்னத்தை பா.ஜ.க முடக்கும்... அதில் அ.தி.மு.க தீர்ந்துபோகும்! - நாஞ்சில் சம்பத் ‘நறுக்’

``அ.தி.மு.க பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமைக்கான கோரிக்கையைத்தானே முன்வைத்தார்கள்... எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகத்தானே கோஷங்களை எழுப்பினார்கள்?”

``அது பொதுக்குழு அல்ல புதுக்குழு. அங்கீகரிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், வரிசையில் நின்று அழைப்பிதழைக் காண்பித்து, கையெழுத்து போட்டு பொதுக்குழு அரங்குக்குச் செல்ல வேண்டும். அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. கையெழுத்து போடும் நோட்டு எங்கே என்று கேட்டால், கொண்டு போய்விட்டதாக ஒருவன் சொல்கிறான் இது எப்படி பொதுக்குழு... 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டதாகக் கடுமையான குரலில், கோபம் தொனிக்க அடவடியாக ஒருவர் அறிவிக்கிறார். இணை ஒருங்கிணைப்பாளர் ஒருவர் அதற்கு மேல் எகிறிக் குதிக்கிறார். அடுத்ததாக ஒரு பெண்மணி எம்.ஜி.ஆர் பாடலைப் பாடி இந்தத் தற்குறிக்கு முட்டுக்கொடுக்கிறார். நீண்ட தூரம் பயணித்து ஒரு திருவிழாவுக்கு வருவதைப்போல பொதுக்குழுவுக்கு வந்த தொண்டர்களின் கண்ணீருக்கு இவர்களிடத்தில் பதில் இருக்கிறதா?’’

``அ.தி.மு.க-வைப் பற்றிப் பேச, தி.மு.க-வுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் தகுதியில்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கொந்தளித்துள்ளாரே?’’

``இதைச் சொல்வதற்கான தகுதி சி.வி.சண்முகத்துக்கு இல்லை. தி.மு.க அரசு கடமை உணர்வோடு நடந்துகொண்ட காரணத்தால்தான் பொதுக்குழு நடந்தது. எனக்குத் தெரிந்து, தமிழ்நாட்டில் ஒரு பொதுக்குழுவுக்கு 2,000 காவலர்கள் பாதுகாப்புக்குப் போட்டப்பட்டது இப்போதுதான். உயர் நீதிமன்ற உத்தரவாலும் அண்ணன் ஸ்டாலின் அவர்களின் கண்காணிப்பினாலுமே இந்தப் பொதுக்குழு அசம்பாவிதங்கள் இல்லாமல் கடந்துசென்றது. இல்லாவிட்டால், அசம்பாவிதங்கள் நடந்திருக்கும். ரத்த அத்தியாயங்கள் அரங்கேறியிருக்கும்.’’

``அ.தி.மு.க பிரச்னைகளுக்குப் பின்னால், பா.ஜ.க-வின் விளையாட்டு இருக்கிறது என்று எதனடிப்படையில் சொல்கிறீர்கள்?’’

``பா.ஜ.க-வின் சட்டமன்றக்குழுத் தலைவரும், என் நண்பருமான நயினார் நாகேந்திரன் ‘ஒற்றைத் தலைமைதான் கட்சிக்கு வலிமை சேர்க்கும்’ என்று கருத்து தெரிவிக்கிறார். அ.தி.மு.க-வை வலிமையிழக்கச் செய்து, அதன் வழியே கட்சியை வளர்க்க வேண்டும் என்பதே பா.ஜ.க-வினரின் நோக்கம். இனிமேல் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர அண்ணன் ஓ.பி.எஸ்-ஸுக்கு வழியில்லை. அப்படி அவர் நீதிமன்றத்தை நாடினால், தேர்தல் ஆணையத்தை அணுகினால், அதைவைத்து சின்னத்தை முடக்குவதே பா.ஜ.க-வினரின் முதல் தீர்வாக இருக்கும். அந்தத் தீர்விலேயே அ.தி.மு.க தீர்ந்துபோகும்.’’