அரசியல்
அலசல்
Published:Updated:

“ஆறுமுகசாமி அறிக்கையில் உப்புச்சப்பில்லை... அருணா ஜெகதீசன் அறிக்கை படுஜோர்!”

நாஞ்சில் சம்பத்
பிரீமியம் ஸ்டோரி
News
நாஞ்சில் சம்பத்

- விமர்சிக்கும் நாஞ்சில் சம்பத்

தி.மு.க-வில் அதிகாரபூர்வமாக இணையாமலேயே, ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’யில் ஊரெங்கும் முழங்கிவருகிறார் நாஞ்சில் சம்பத். சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

“தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பேசிவரும் உங்களை, ஏன் இன்னும் கட்சியில் இணைத்துக்கொள்ளவில்லை?”

“நானும் இணைய வேண்டும் என்று கேட்கவில்லை, அவர்களும் இணையுமாறு வற்புறுத்தவில்லை. அரசியல்வாதியாகக் காலம் தள்ளுவதில் எனக்குச் சில நெருக்கடிகள் இருக்கின்றன. ஒரு தலைமையின் கட்டளையை மனப்பூர்வமாக நிறைவேற்றுவதில் நான் தோற்றுப்போகக்கூடும். அதற்கு இடமளிக்காத வகையில் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படாமல், கட்சியில் சேராமலேயே தி.மு.க-வுக்கு அதிக பங்களிப்பை என்னால் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்துவருகிறேன்.”

“தி.மு.க-வை மட்டும் ஆதரிப்பது ஏன்?”

“மறிக்கும் வரை மானத் தமிழனாக இருக்க விரும்புவதால், தி.மு.க-வை ஆதரிக்கிறேன். காலைச் சுற்றுகிற கலாசார பாசிசத்தை வேரோடு வீழ்த்த, தி.மு.க-வை ஆதரிப்பதைத் தவிர மானத் தமிழர்களுக்கு வேறு வழியில்லை.”

“ஆறுமுகசாமி அறிக்கையில் உப்புச்சப்பில்லை... அருணா ஜெகதீசன் அறிக்கை படுஜோர்!”

“இதற்கு முன்பாக பல கட்சிகள் மாறியதில் ஏற்பட்ட அனுபவம்தான் இந்த முடிவுக்குக் காரணமா?”

“தவறு. நான் எந்தக் கட்சியும் மாறவில்லை. பிறந்ததிலிருந்து, கல்லறை வரை தி.மு.க-வில்தான் இயங்க வேண்டும் என்று கருதி மேடைக்கு வந்தவன் நான். ஆனால், வைகோவுக்காகக் கலகம் செய்துவிட்டு வெளியேறினேன். என் இருப்பைத் தாங்கிக்கொள்ளாமல், வைகோ சத்தமின்றி என்னைச் சாகடிக்க முயன்றபோது, தப்பித்தோம் பிழைத்தோம் என்று அ.தி.மு.க-வுக்குள் விழுந்தேன். விழுந்த பின்னர்தான் தெரிந்தது அது மிகப்பெரிய பள்ளமென்பது. அந்தப் பள்ளத்திலிருந்து கரையேறி, எந்தப் பெரியாரின் கொள்கையையும், அண்ணாவின் லட்சியத்தையும் பற்றி முழங்க ஆசைப்பட்டேனோ அதற்கான தளமும் களமும் இன்று கிடைத்திருக்கின்றன. ஸ்டாலினுக்கு வலிமை வாய்ந்த கருவியாக இருக்க விரும்புகிறேன். எனவே, என்னைக் கட்சி மாறும் பச்சோந்தி என்று குறை சொல்ல முடியாது.”

“அ.தி.மு.க-வின் இரு அணிகளையும் இணைக்கவே சட்டமன்றத்தில் அருகருகே இருக்கை அமைக்கப்பட்டது என்று பேசியிருக்கிறீர்கள். அவர்கள் இணைவதில் உங்களுக்கும் தி.மு.க-வுக்கும் என்ன அக்கறை?”

“அ.தி.மு.க இருப்பதும் இயங்குவதும் தமிழ்நாட்டுக்கு நல்லது. அ.தி.மு.க-வின் இருப்புக்கு ஆபத்து வருமானால், அந்த இடத்தைச் சனாதன சக்திகள் ஆக்கிரமித்துவிடும். எல்லா மாநிலங்களிலும் பலமாக இருக்கிற கட்சிகளுக்குள் ஊடுருவி, அவற்றை உருக்குலைத்து, அங்கே விழும் வெற்றிடத்தில் குந்திக்கொள்வது பா.ஜ.க-வின் பாணி. அத்தகைய பா.ஜ.க-வின் வஞ்சகத்துக்கு அ.தி.மு.க பலியாகிவிடக் கூடாது என்கிற, லட்சக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்களின் மனநிலையைத்தான் நான் எதிரொலித்தேன்.”

“ஆனால், நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்கிறதே பா.ஜ.க?”

“அப்படியொரு தோற்றத்தை ஏற்படுத்து கிறார்கள். அதுவொரு மாயத்தோற்றம். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பா.ஜ.க-வினர். வெறுப்பு அரசியலை விதைத்து, அமைதியின் மடியில் இருக்கிற தமிழகத்தை அமளிக்காடாக்கி, தங்கள் இருப்பைத் தக்கவைக்க முயல்கிறார்கள்.”

“வெடிகுண்டுச் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்துவருகின்றனவே?”

“தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்ற தோற்றத்தை உருவாக்க பா.ஜ.க முயல்கிறது. அதற்காக பா.ஜ.க-வே பல இடங்களில் அப்படியான செயல்களில் ஈடுபடுகிறது. அதற்கான ஆதாரங்களை நானே கொடுப்பேன். மற்றபடி, ஸ்டாலின் தலைமையில் தமிழகம் பத்திரமாகவே இருக்கிறது.”

“பொதுக்குழுவில் முதல்வர் வருத்தப்படும் அளவுக்கு தி.மு.க-வினர் செயல்பாடுகள் மோசமாகிவிட்டனவா?”

“தி.மு.க-வில் ஜனநாயகம் மேலோங்கியிருக்கிறது என்பதற்கு முதல்வரின் பேச்சும் ஒரு சாட்சி. முகம் சுளிக்கும் வகையில் செயல்பாடுகள் இருக்கக் கூடாது என்று கட்டளையிட்டிருப்பது ஸ்டாலினின் தலைமைப் பண்பைக் காட்டுகிறது.”

“ஆட்சியில் உதயநிதி, சபரீசன் ஆகியோரின் தலையீடுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?”

“திராவிடச் சிந்தனையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் வகையில், ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’ நிகழ்ச்சியை, அரசியல் எல்லை கடந்து 200 தொகுதிகளில் முடித்திருக்கிறார் உதயநிதி. தி.மு.க-வின் பேராயுதமாக இருப்பவர் உதயநிதி. இதுதான் எனக்குத் தெரியும்”

“மழைநீர் வடிகால்களின் மோசமான நிலை குறித்து ஊடகங்கள் தொடர்ந்து எச்சரித்தும், இன்று அதில் ஓர் உயிர் பலியாகியிருப்பது அரசின் மெத்தனப் போக்குதானே?”

“சென்னையின் வளர்ச்சி, தோற்றம், சாலை, மேம்பாலம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு எல்லாமே தி.மு.க-வின் சாதனைகள்தான். வடகிழக்குப் பருவமழை வாசல் வரும் முன்பாக, இந்தத் திட்டத்தை முடிக்கத் திட்டமிட்டு செயலாற்றிவருகிறார்கள். இருந்தபோதும், விபத்துக்கு அரசுதான் பொறுப்பு. முதல்வர் தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார். பொதுவாகவே பயணங்களின்போது, எல்லோரும் அடியை அளந்து வைக்கவேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்.”

“ஆறுமுகசாமி, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“சசிகலாவை ஓரங்கட்ட முயல்பவர்களுக்குத் துணை நிற்பது ஆறுமுகசாமி ஆணையம். இப்படி ஒரு மருத்துவ ஞானமில்லாத அறிக்கையை என்னால் நம்ப முடியவில்லை. தமிழ்நாட்டின் தலைநகரம், இந்தியாவின் மெடிக்கல் கேப்பிட்டலாக இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் அப்போலோவைத் தாண்டி ஆறுமுகசாமியால் எப்படிக் கருத்து சொல்ல முடியும்... அதனால், உப்புச்சப்பில்லாத ஆறுமுகசாமி அறிக்கை சாரமற்றது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாகக் காவல்துறை அதிகாரி ஆய்வுசெய்தால்கூட இப்படியோர் அறிக்கையைக் கொடுத்திருக்க முடியாது. அந்த அளவுக்கு அருணா ஜெகதீசனின் புலன் விசாரணை அமைந்திருக்கிறது. அறிக்கை மூலம் உண்மைக் குற்றவாளியை ஊருக்கு அம்பலப்படுத்தியிருக்கிறார். ‘13 பேர் படுகொலை செய்யப்பட்டதை டி.வி-யில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் என்று சொன்ன அன்றைய முதல்வர் எடப்பாடியையும், குற்றவாளிகள் பட்டியலில் விசாரிக்க வேண்டும்’ என்று முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கிறேன்!”