சமூகம்
Published:Updated:

பா.ஜ.க-வை எதிர்ப்பதற்கான துணிச்சல் எடப்பாடிக்கு இன்னும் வரவில்லை!

நாஞ்சில் சம்பத்
பிரீமியம் ஸ்டோரி
News
நாஞ்சில் சம்பத்

- ‘தாக்கும்’ நாஞ்சில் சம்பத்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ‘திராவிடப் பேச்சாளர்’ நாஞ்சில் சம்பத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க-வினர் நாற்காலியைத் தூக்கி வீச, அதற்கு நாஞ்சில் சம்பத் வருத்தம் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரைத் தொடர்புகொண்டு பேசினேன்...

“அன்றைய கூட்டத்தில், பா.ஜ.க-வினர் குறித்து மிகக் கடுமையான வார்த்தைப் பிரயோகம் செய்துவிட்டீர்கள்தானே?”

“சென்னை மண்ணடியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் என்று சொல்லி பணம் அபகரித்த சம்பவத்தைவைத்து, ‘பொறுக்கித் தின்னுகிற பயல்கள், ஓர் இஸ்லாமியர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் என்று சொல்லி பணத்தை அடித்துவிட்டார்கள்...’ என்றுதான் பேச வந்தேன். ஆனால், பா.ஜ.க-வினரோ என்னைப் பேசவே விடாமல் கூச்சலிட்ட வாறு சேர்களை வீசியடித்து அராஜகம் செய்தனர். என்னால் விவாதம் நின்றுவிடக் கூடாது என்பதற்காக, ‘பொறுக்கி... என்ற அந்த வார்த்தையைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்’ என்று அறிவித்தேன். ஆனால், ‘நான் மன்னிப்புக் கேட்டுவிட்டேன், மன்னிப்புக் கேட்க வைத்துவிட்டார் பேரா. இராம ஸ்ரீனிவாசன்’ என்றெல்லாம் வலைதளத்தில் பரப்பிவருகிறார்கள். அதே கூட்டத்தில், எனக்கு பதிலளித்துப் பேசிய பேரா. இராம ஸ்ரீனிவாசன், திராவிட இயக்கத்தின் நீதிக்கட்சித் தலைவர்களை ‘நாய்கள்...’ என்றார். இதுதான் பா.ஜ.க-வின் நாணயமான அரசியலா..?’’

பா.ஜ.க-வை எதிர்ப்பதற்கான துணிச்சல் எடப்பாடிக்கு இன்னும் வரவில்லை!

“வாரிசு அரசியலை ஆதரிக்கிறீர்களா..?”

“வாரிசு அரசியல் என்று நீங்கள் யாரைக் கேட்கிறீர்கள்..?”

“இதை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமா..?”

“தம்பி உதயநிதி ஸ்டாலின் தொடர் உழைப்பைப் பார்த்து, அண்ணன் ஸ்டாலின் சுமையைப் பகிர்ந்துகொள்ள தி.மு.க-வின் தோழர்கள் இன்றைக்கு அந்தப் பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள். கட்சி எடுத்துள்ள இந்த முடிவுக்குப் பல விமர்சனங்கள் வருகின்றன. அதற்கெல்லாம் பதிலளிக்கும்விதமாக, ‘என் பணிகள் மூலம் வாரிசு என்கிற வசவுகளைப் போக்குவேன்...’ என்று அறிவித்திருக்கிறார் தம்பி உதயநிதி. அது நிச்சயம் நடக்கும்!”

“ `காங்கிரஸின் வாரிசு அரசியலை விமர்சித்த திராவிடக் கட்சிகளே, இப்போது வாரிசு அரசியலில் ஈடுபடுவதுதான் ஜனநாயகமா’ என்ற விமர்சனத்துக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?”

“தி.மு.க-வின் மீது தொடர்ந்து கல்லெறிய வேண்டும் என்று கருதுகிற வகுப்புவாதச் சக்திகள்தான் இது போன்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. முப்பத்தைந்து வயதில் அகிலேஷ் யாதவ் உ.பி-யின் முதல்வர். தேவகவுடா மகன் குமாரசாமி கர்நாடக முதலமைச்சராகிவிட்டார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில், ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதலமைச்சர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் உ.பி-யில் எம்.எல்.ஏ., மேனகா காந்தியின் மகன் பா.ஜ.க எம்.பி... எனவே வாரிசு என்று சொல்லி அவர்கள் விவாதத்துக்கு வந்தால் ஒரு நீண்ட பட்டியலை என்னாலும் கொடுக்க முடியும்.”

“நீங்களே வைகோவுடன் இணைந்து ஸ்டாலினை, ‘வாரிசு அரசியல்’ என்று கடுமையாக விமர்சனம் செய்தீர்கள்தானே?”

“அன்றைக்கு அண்ணன் வைகோவை ஆதரித்தேன். அதனால் தி.மு.க-வில் பல பேரைப் பகைத்துக்கொண்டு, தி.மு.க-வின் கோபத்துக்கும் ஆளானேன். அப்படி நான் பகைத்ததையோ, நான் பேசியதையோ கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ஒரு தாயின் பரிவோடு அண்ணன் ஸ்டாலின் என்னை அங்கீகரித்திருப்பது நான் பெற்ற பெரும் பேறாகக் கருதுகிறேன்.”

“இப்படி நீங்கள் மாறி மாறிப் பேசுவதால்தான் உங்களை எந்த திராவிடக் கட்சியும் ஒரு பிரதிநிதியாக இணைத்துக்கொள்ளாமல், வெறும் பேச்சாளராக மட்டுமே வைத்துக்கொண்டிருக்கிறார்களா?”

“நான் எந்த மேடைக்குச் சென்றாலும் ‘ஜெயிக்க வேண்டும்’ என்று நினைப்பவன். அடல் பிஹாரி வாஜ்பாய் இந்த நாட்டின் பிரதமராக வர வேண்டும் என்று வைகோ ஆதரவு தெரிவித்த பிறகு, அவரை நான் ஆதரித்துப் பேசிய அளவுக்கு, தமிழ்நாட்டில் பா.ஜ.க-வினரே பேசியிருக்க மாட்டார்கள். நான் எந்த மேடையில் இருக்கிறேனோ அந்த மேடையை, அன்றைக்கு இருக்கிற தட்பவெப்பத்தை ஒரு காலத்தின் குரலாக எதிரொலிக்கிறேன். நான் ஒரு கட்சியின் பிரதிநிதியாக மட்டுமே என்னைச் சுருக்கிக்கொள்ளவில்லை. பதிமூன்று நாள்கள் பெரிய புராணம் குறித்துச் சொற்பொழிவாற்றினேன். கல்லூரிகள், அரிமா சங்கங்கள், சமயச் சொற்பொழிவுகள் எனப் பொதுவெளியில் பேசிவருகிறேன். எனக்கென்று ஒரு பன்முகத்தன்மை இருக்கிறது. ஆனால், எங்கிருந்தாலும் தி.மு.க-வின் அரசியல் நிலைப்பாடு கொள்கையில் உறுதியாகி இருக்கிறேன்.”

“அ.தி.மு.க-வைக் காப்பாற்றக்கூடிய சக்தி சசிகலாவைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால், அதற்கான எந்த முன்னெடுப்பையும் அவர் எடுத்ததாகத் தெரியவில்லையே..?”

“ ‘அ.தி.மு.க-வுக்கும் சசிகலாவுக்கும் சம்பந்தமில்லை’ என்று கட்சியைவிட்டு நீக்கி அறிவித்தார் இ.பி.எஸ். ஜெயக்குமார் போன்ற தவளைகள் மூலம் நாளும் அறிக்கைவிட்டு காயப்படுத்திக்கொண்டிருக்கிறார். அதையெல்லாம் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளாமல், தனக்குப் பச்சை துரோகத்தைப் பட்டப்பகலில் செய்த பாதகனைக்கூட மன்னித்து ‘நான் இருவரையும் சேர்த்துவைப்பேன்’ என்று சொல்லியிருக்கிறார் சசிகலா. இந்தப் பண்பாடு எவ்வளவு அற்புதமானது... எடப்பாடி ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், அரசியல் என்பது சம்பவங்களின் விளையாட்டு. நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது!”

“ஆனால், `அ.தி.மு.க என்ற கட்சியின் சுயமரியாதைக்காக இ.பி.எஸ் எதற்கும் துணிந்துவிட்டார். ஓ.பி.எஸ் இன்னும் பா.ஜ.க-வை நம்பித்தான் இருக்கிறார்’ என்கிற ஒரு கருத்தும் இருக்கிறதே?”

“பா.ஜ.க-வை எதிர்ப்பதற்கான துணிச்சல் எடப்பாடிக்கு இன்னும் வரவில்லை. அது வரவும் வராது. ஏனென்றால் அவருக்கும், அவரோடு இருப்பவர்களுக்கும் அவ்வளவு வழக்குகள், அவ்வளவு சிக்கல்கள். ஆகவே, வழக்கு இல்லாத சி.வி.சண்முகம் போன்றவர்கள் ஆரவாரம் செய்யலாமே தவிர வழக்கு இருக்கிறவர்கள் யாரும் பா.ஜ.க-வை எதிர்த்து வாய் திறந்து பேச மாட்டார்கள்!”